

'பன்றிக் காய்ச்சல்' எனப்படும் எச்1என்1 ஃப்ளூ காய்ச்சலும், அதிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது பற்றியும் பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டியவற்றை குழந்தைகள் நல மருத்துவர் க. இராவணன் M.D. விளக்குகிறார்.
ஃப்ளூ காய்ச்சல் என்றால் என்ன?
இன்ஃப்ளூயன்சா வைரஸால் ஏற்படும் சுவாசத் தொற்றே இந்த ஃப்ளூ காய்ச்சல். இதில் எச்1என்1 ஒரு ஆபத்தான வகை வைரஸ். 2009-ஆம் ஆண்டு உலகளவில் பன்றிகளுக்கும் பரவியதால் அது 'பன்றிக் காய்ச்சல்' என்ற பெயரில் பிரபலமானது.
குழந்தைகளில் எப்படி வெளிப்படும்?
சாதாரண சளியைப் போல மெதுவாக அல்லாமல், பல குழந்தைகளிடம் திடீரெனக் காய்ச்சல், தலைவலி, தொண்டைவலி, வறட்டு இருமல், உடல்வலி, மிகுந்த சோர்வு ஆகியவை தோன்றலாம். சில குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். பொதுவாக ஒரு வாரத்திற்குள் பெரும்பாலான அறிகுறிகள் குறைந்தாலும் இருமல் நீண்ட நாட்கள் நீடிக்கலாம்.
எந்தக் குழந்தைகளிடம் கூடுதல் கவனம் தேவை?
ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகள், குறிப்பாக இரண்டு வயதுக்குக் குறைவானவர்கள், ஆஸ்துமா, இதய நோய், நீரிழிவு, நரம்பியல் நோய் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ள குழந்தைகள் ஆகியோருக்கு சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். நுரையீரல் அழற்சி போன்ற கடுமையான பாதிப்புகளும் ஏற்படலாம்.
தவறவிடக்கூடாத ஆபத்தான அறிகுறிகள்?
மூச்சுத்திணறல், மிக வேகமான மூச்சு, மூச்சுவிடும்போது மார்பு உள்நோக்கி இழுத்தல், உதடு நீலமாதல், மார்புவலி, நடக்க மறுக்கும் அளவுக்கு கடுமையான உடல் வலி, தண்ணீர் குடிக்க முடியாத அளவு தொண்டை வலி , சிறுநீர் மிகவும் குறைதல், அதிக தூக்கம் அல்லது வலிப்பு போன்ற ஆபத்தான அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்.
எப்போது தாமதிக்க கூடாது?
பெரும்பாலான லேசான நோய்களுக்கு ஓய்வு, போதுமான திரவம் மற்றும் காய்ச்சலைக் கட்டுப்படுத்துதல் போதுமானதாக இருக்கலாம். ஆனால் அதிக ஆபத்துள்ள குழந்தைகளுக்கும், கடுமையான அல்லது வேகமாக மோசமடையும் நோயுள்ள குழந்தைகளுக்கும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் மருத்துவரின் ஆலோசனையுடன் விரைவாகத் தொடங்கப்பட வேண்டும். குறிப்பாக நோய் தொடங்கிய முதல் இரண்டு நாட்களுக்குள் தொடங்குவது அதிக பயன் தரும். கடுமையான நோயில் அதற்குப் பிறகும் சிகிச்சை பயனளிக்கும்.
பெற்றோர் நம்பும் சில தவறான கருத்துகள் – உண்மை என்ன?
'எச்1என்1 என்றாலே உயிருக்கு ஆபத்து.'
இல்லை. பெரும்பாலான குழந்தைகள் குணமடைகிறார்கள். ஆனால் சிறு குழந்தைகள் மற்றும் சில நீண்டகால நோயுள்ள குழந்தைகளில் கூடுதல் கவனம் அவசியம்.
'தடுப்பூசி போட்டால் ஃப்ளூ காய்ச்சல் வந்துவிடும்.'
தவறு. ஊசி மூலம் செலுத்தப்படும் செயலிழக்கச் செய்யப்பட்ட தடுப்பூசி இன்ஃப்ளூயன்சாவை ஏற்படுத்தாது. ஊசி போட்ட இடத்தில் வலி அல்லது லேசான காய்ச்சல் போன்ற தற்காலிக எதிர்வினைகள் ஏற்படலாம்.
'ஒருமுறை தடுப்பூசி போட்டால் வாழ்நாள் முழுவதும் போதும்.'
தவறு. இன்ஃப்ளூயன்சா வைரஸ்கள் தொடர்ந்து மாறுவதாலும் தடுப்பூசியால் கிடைக்கும் பாதுகாப்பு காலப்போக்கில் குறைவதாலும் ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.
'தடுப்பூசி போட்டும் நோய் வந்தால் தடுப்பூசி பயனற்றது.'
அதுவும் இல்லை. தடுப்பூசி எல்லா தொற்றுகளையும் தடுக்க முடியாது. ஆனால் நோயின் தீவிரம், மருத்துவமனை அனுமதி மற்றும் சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
குழந்தைகளுக்கான தடுப்பூசி – முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது என்ன?
இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்தின் 2025 பரிந்துரைகளில், முந்தைய நான்கு வகை இன்ஃப்ளூயன்சா தடுப்பூசிக்குப் பதிலாக மூன்று வகை தடுப்பூசி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் எச்1என்1, எச்3என்2 மற்றும் இன்ஃப்ளூயன்சா பி வகை அடங்குகின்றன.
ஆறு மாத வயதிலிருந்து குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் இன்ஃப்ளூயன்சா தடுப்பூசி வழங்குவது முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாகும். முதல் முறையாகத் தடுப்பூசி பெறும் சிறு குழந்தைகளுக்கு இரண்டு தவணைகள் போட வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆண்டுதோறும் ஒரு தவணை போதும் - குழந்தையின் வயது மற்றும் முந்தைய தடுப்பூசி வரலாற்றைப் பொறுத்து மருத்துவர் அட்டவணையைத் தீர்மானிப்பார்.
நோய் பரவலை தடுக்க வீட்டிலும் பள்ளியிலும் செய்ய வேண்டியது?
இருமும்போது வாயையும் மூக்கையும் மூடுதல், கைகளை முறையாகக் கழுவுதல், அறைகளில் நல்ல காற்றோட்டம் ஏற்படுத்துதல், நோய்வாய்ப்பட்ட குழந்தையை ஓய்வெடுக்கச் செய்தல், நோயுள்ளபோது பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பது ஆகியவை பரவலைக் குறைக்க உதவும்.
பெற்றோருக்கான முக்கிய செய்தி:
எச்1என்1 என்ற பெயரைப் பார்த்து பயப்பட வேண்டாம். அறிகுறிகளைப் பார்த்து செயல்படுங்கள். ஆண்டுதோறும் தடுப்பூசி, சுகாதாரப் பழக்கங்கள், ஆபத்தான அறிகுறிகளை உடனடியாக அடையாளம் காணுதல் - இவையே குழந்தைகளைப் பாதுகாக்கும் மூன்று முக்கிய வழிகள்.