பறவை காய்ச்சல் பரவுகிறது! காய்ச்சல், இருமல் இருந்தால் அலட்சியம் வேண்டாம் - மருத்துவ அறிவுரைகள் இதோ!

H5N1 Flu
H5N1 Flu
Published on

சமீபத்திய தகவல்களின்படி, சென்னையில் பறவை காய்ச்சல் (H5N1) பரவல் குறித்த செய்திகள் வெளியாகி உள்ளன. இது பொதுமக்களிடையேயும், அலுவலகங்களில் பணிபுரிபவர்களிடையேயும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆனால், சரியான விழிப்புணர்வும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இருந்தால் இதிலிருந்து நாம் நம்மை எளிதாகப் பாதுகாத்துக் கொள்ள முடியும். பறவை காய்ச்சல் என்றால் என்ன? அது எப்படி பரவுகிறது? மற்றும் பணியிடங்களிலும் வீடுகளிலும் நாம் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

பறவை காய்ச்சல் (H5N1) என்றால் என்ன?

H5N1 என்பது பறவைகளைத் தாக்கும் ஒரு வகையான இன்ஃப்ளூயன்ஸா வைரஸ். இது முக்கியமாக காட்டு நீர்வாழ் பறவைகள், வலசை போகும் பறவைகளிடம் காணப்படுகிறது. இந்த வைரஸ் கோழிகள், வாத்துகள் மற்றும் பிற வளர்ப்புப் பறவைகளுக்கும் பரவி, அவற்றிற்கு கடுமையான நோயையும் இறப்பையையும் ஏற்படுத்துகிறது.

மிக அரிதான சூழலில், பாதிக்கப்பட்ட பறவைகளுடன் மிக நெருக்கமான தொடர்பில் இருக்கும் மனிதர்களுக்கும் இந்த வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. மனிதர்களுக்கு பரவும்போது இது கடுமையான காய்ச்சலை உண்டாக்கும். மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இது பரவுவது மிகக் குறைவு என்றாலும், கவனமாக இருப்பது அவசியம் என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.

அறிகுறிகள்!

பறவை காய்ச்சல் வைரஸ் தாக்கிய ஒருவருக்கு, சாதாரண காய்ச்சலைப் போன்றே அறிகுறிகள் தென்படும். 

  • கடுமையான காய்ச்சல்

  • இருமல் மற்றும் தொண்டை வலி

  • மூச்சு விடுவதில் சிரமம் அல்லது மூச்சுத் திணறல்

  • உடல் சோர்வு

பொதுமக்களுக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்!

தமிழக சுகாதாரத் துறை மற்றும் கால்நடை நல அதிகாரிகள் பொதுமக்களுக்குக் கீழ்க்கண்ட அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

  1. நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்துபோன காகங்கள், கோழிகள் அல்லது நீர்வாழ் பறவைகளைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.

  2. தவிர்க்க முடியாத சூழலில் இறந்த பறவைகளை அப்புறப்படுத்த நேர்ந்தால், வெறுங்கையால் தொடாமல் கையுறைகள் அல்லது பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும். அதன் பிறகு கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும்.

  3. உங்கள் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக பறவைகள் இறந்து கிடந்தால், உடனடியாக உள்ளூர் கால்நடைத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

  4. பறவைகளையோ அல்லது விலங்குகளின் தீவனங்களையோ கையாண்ட பிறகு, சோப்பு மற்றும் சுத்தமான தண்ணீரால் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.

  5. இறந்த பறவைகளைக் கையாண்ட பிறகு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

இதையும் படியுங்கள்:
இனி வாட்டர் பாட்டில்களில் இதுவும் இருக்கும்! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
H5N1 Flu

ஊழியர்கள் பணியிடத்தில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள்!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், நிர்வாகம் கொடுக்கும் பின்வரும் பாதுகாப்பு வழிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்‌.

  • தொழிற்சாலை வளாகத்திற்குள் ஏதேனும் பறவை இறந்து கிடந்தாலோ அல்லது நோய்வாய்ப்பட்டு இருந்தாலோ, அதன் அருகில் செல்லவோ அல்லது தொடவோ வேண்டாம். உடனடியாக பாதுகாப்பு அதிகாரிக்கு அல்லது நிர்வாகத் துறைக்குத் தகவல் தெரிவிக்கவும். அவர்கள் அதைப் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவார்கள்.

  • தொழிற்சாலைக்கு வெளியே திறந்தவெளியில் வேலை செய்யும் ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் (N95 Mask) மற்றும் கையுறைகளை அணிய வேண்டும்.

  • சாப்பிட்ட பிறகு மீதமாகும் உணவுகளை மூடி வைக்கப்பட்ட குப்பத் தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும். திறந்த வெளியில் வீசுவது பறவைகளை ஈர்க்கும் என்பதால் அதைத் தவிர்க்க வேண்டும்.

  • உங்களுக்கு காய்ச்சல், தொண்டை வலி அல்லது உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அதை அலட்சியப்படுத்தாமல் உங்கள் மேற்பார்வையாளரிடம் தெரிவிக்கவும். உடனடியாக அலுவலகத்தில் உள்ள மருத்துவ மையத்தை (OHC) அணுகி பரிசோதனை செய்து கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
மக்களே உஷார்..! சென்னையில் பரவும் பறவை காய்ச்சல் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை..!
H5N1 Flu

பறவை காய்ச்சல் குறித்து அச்சப்படாமல், மேலே கொடுக்கப்பட்டுள்ள சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைபிடிப்பது நம் கடமையாகும். குறிப்பாக, தனிமனித சுகாதாரம், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்றவை நம்மைப் பாதுகாக்கும் மிகச்சிறந்த கவசங்களாகும். 

அரசு மற்றும் சுகாதாரத் துறை வழங்கும் அறிவுரைகளை ஏற்று நடப்போம், நம்மையும் நம் சமூகத்தையும் பாதுகாப்போம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com