
உணவில் முடி இருப்பது வெறும் அருவருப்பான விஷயம் மட்டுமல்ல, அது ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடியது. "உணவில் முடி இருந்தால் உறவு வளரும்" என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை, உண்மையில் அது உணவுப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஒரு எச்சரிக்கை.
வீட்டில் எவ்வளவுதான் சுத்தமாக சமைத்தாலும், எதிர்பாராத விதமாக முடி உணவில் விழுந்துவிடும் வாய்ப்புகள் அதிகம். காற்றின் மூலமாகவோ அல்லது சமைக்கும் பொருட்கள் திறந்திருக்கும் போதோ, நம்முடைய தலைமுடி உணவில் விழக்கூடும். கண்ணுக்கு தெரியாத நுண்ணிய முடிகள் கூட உணவில் கலந்து வயிற்றுக்குள் சென்று ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
உண்மையில், முடி கெரட்டின் என்னும் புரதத்தால் ஆனது. இது நேரடியாக நமக்கு ஆபத்தை ஏற்படுத்தாது என்றாலும் உணவில் முடி இருப்பது உணவின் தரத்தைக் குறைத்து, மாசுபடுத்துகிறது. முக்கியமாக, நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க பதப்படுத்தப்பட்ட உணவுகளில் முடி இருந்தால், அது நோய்க்கிருமிகள் உருவாக வழிவகுக்கும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
இன்றைய நவீன உலகில், தலைமுடியை அழகுபடுத்த சாயங்கள், ரசாயன ஷாம்புகள் போன்றவற்றை பயன்படுத்துகிறோம். இவை உணவில் கலக்கும்போது, நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. சாப்பிடும்போது வாயில் முடி சிக்கினால், அது தொண்டைக்குள் செல்லாமல் அடி நாக்கில் மாட்டிக்கொண்டு எரிச்சலை ஏற்படுத்தும். சில சமயங்களில் தொண்டைக்குள் சென்றும் தொந்தரவு கொடுக்கலாம். இதனால் குமட்டல், வாந்தி போன்ற உணர்வுகள் உண்டாகலாம். உணவில் முடி இருப்பதை கண்டவுடன் வாந்தி எடுக்க முயற்சிப்பது சரியான தீர்வு அல்ல.
பொதுவாக, முடி வயிற்றுக்குள் சென்றால், உடல் அதை இயற்கையாகவே வெளியேற்ற முயற்சி செய்யும். பெரும்பாலும் இது வயிற்றுப்போக்கு மூலம் வெளியேறிவிடும். வயிற்றுப்போக்கு ஏற்படும்போது, அதை நிறுத்த முயற்சி செய்யாமல், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வது முக்கியம்.
நம் பாட்டிமார்கள் காலத்தில், வயிற்றில் முடி சென்றுவிட்டால், சோற்றை உருட்டி விழுங்க சொல்வது அல்லது நெல்மணியை விழுங்க சொல்வது போன்ற வீட்டு வைத்தியங்களை செய்தனர். ஆனால், இவை அறிவியல் பூர்வமான தீர்வுகள் அல்ல. உணவில் முடி விழுவதை தடுப்பதற்கு, உணவு சமைக்கும்போது சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பது தான் சிறந்த வழி. சாப்பிடும்போது உணவில் கவனம் செலுத்தி, வேறு சிந்தனைகள் இல்லாமல் சாப்பிடுவதும் முக்கியம். சிறிய கவனக்குறைவு கூட, உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.