'புத்தாஸ் ஹேன்ட்' (Buddha's Hand) சிட்ரஸ் வகையைச் சார்ந்த, கசப்பில்லாத ஒரு சுவையான பழம். எலுமிச்சை போன்ற அதன் அடிப்பகுதியிலிருந்து நீண்ட விரல்கள் போன்ற பிரிவுகள் தோன்றி வளர்ந்திருக்கும் இப்பழத்தின் உள்ளே சதைப் பகுதியோ ஜுஸோ கிடையாது. ஸ்பான்ஜ் போன்ற மிருதுவான பித் (Pith) மட்டும் காணப்படும். இதை அப்படியே உடைத்து முழுவதையும் பச்சையாகவே உண்ணலாம். கவர்ச்சியான சுவையும் மணமும் கொண்டது. புத்தரின் கூப்பிய விரல்கள் போன்ற தோற்றம் கொண்டுள்ளதால் இதற்கு இப்பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. சீனாவிலும் இந்தியாவின் வட கிழக்குப் பகுதிகளிலும் இந்தப் பழச்செடி வளர்க்கப்படுகிறது. இப்பழத்திலிருந்து உடலுக்குக் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இந்தப் பழம் அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. அவை தீங்கு தரும் ஃபிரிரேடிகல்களால் செல்களில் சிதைவு ஏற்படாமல் செல்களைப் பாதுகாக்கின்றன.
இதிலுள்ள டயட்டரி நார்ச்சத்தானது செரிமானம் நல்ல முறையில் நடைபெறவும், மலச் சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது.
இதில் நிறைந்துள்ள வைட்டமின் C சத்தானது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்கிறது. மேலும் கொலாஜன் உற்பத்தியைப் பெருக்கவும் வீக்கங்களைக் குறைக்கவும் உதவுகிறது. இதிலுள்ள கால்சியம் சத்து எலும்பு வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது.
புத்தாஸ் ஹேன்ட் பழமானது நம் உடலில் தேவைக்கு அதிகமாக சேர்ந்திருக்கும் கொழுப்புகளின் அளவைக் குறைக்க உதவியாயிருந்து, இதய நோய் உண்டாகும் அபாயத்தைத் தடுக்கிறது. இப்பழம் குறைந்த கலோரி அளவும் நிறைந்த நார்ச்சத்தும் கொண்டது. எனவே, இதை ஒரு திருப்தி தரும் ஸ்நாக்ஸாக உட்கொண்டால் உடல் எடையை சீராகப் பராமரிக்கலாம்.
இந்தப் பழத்தை தோலோடு நறுக்கி பலவகை உணவுகளோடு சேர்த்து சமைக்கலாம்; சாலட் டிரஸ்ஸிங், மரினேட், ட்ரிங்க்ஸ் மற்றும் பேக் (bake) செய்யும் உணவுகளோடும் சேர்த்து தயாரிக்கும்போது இதன் சுவையும், சத்துக்களும், மணமும் அதிகரிக்கும்.