

“Life begins at 40” என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதாவது வாழ்க்கை நாற்பது வயதில்தான் தொடங்குகிறது என்று அர்த்தம். ஆனால், இன்றைய சூழலில் நோய்களும் இந்த வயதில்தான் வரிசைகட்டி நிற்கின்றன என்பதுதான் கசப்பான உண்மை. 20 அல்லது 30 வயதில் நாம் ஓடி ஆடி வேலை செய்திருப்போம், உடல் அதற்கு ஒத்துழைத்திருக்கும். ஆனால், 40 வயதைத் தொட்டவுடன் நமது உடல் எஞ்சின் கொஞ்சம் கொஞ்சமாகப் பழுதாகத் தொடங்கும்.
எலும்புத் தேய்மானம், சர்க்கரை நோய், இதயக் கோளாறு எனப் பல பிரச்சனைகள் எட்டிப்பார்க்கும் வயது இது. இதுவரை நீங்கள் உடலைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால், இனிமேலும் அந்த அலட்சியம் வேண்டாம். இந்த வயதில் நீங்கள் அவசியம் தவிர்க்க வேண்டிய 5 பழக்கங்களைப் பற்றிப் பார்ப்போம்.
1. தூக்கத்தை அடகு வைக்காதீர்கள்!
வேலைப்பளு காரணமாகவோ அல்லது மொபைல் பார்க்கும் பழக்கத்தாலோ தூக்கத்தைக் குறைப்பது தற்கொலைக்குச் சமம். 40 முதல் 60 வயது வரை உள்ளவர்கள், ஒரு நாளைக்குக் குறைந்தது 7 முதல் 9 மணி நேரமாவது கட்டாயம் தூங்க வேண்டும். 6 மணி நேரத்திற்குக் குறைவாகத் தூங்கினால், மூளை சீக்கிரமே வயதாகிவிடும். இது எதிர்காலத்தில் ஞாபக மறதி நோயான 'டிமென்ஷியா' வருவதற்கு வழிவகுக்கும். அதுமட்டுமில்லாமல், தூக்கமின்மை இதய நோய் மற்றும் சர்க்கரை நோய்க்கான வாசலைத் திறந்துவிடும்.
2. உடற்பயிற்சிக்கு 'நோ' சொல்லாதீங்க!
40 வயதுக்கு மேல், ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் நமது தசை வலிமை குறையத் தொடங்கும். இதைத் தடுக்க ஒரே வழி உடற்பயிற்சிதான். தினமும் நடைப்பயிற்சியோ அல்லது சிறிய அளவிலான பளு தூக்கும் பயிற்சிகளோ செய்வது, எலும்புகளின் அடர்த்தியைப் பாதுகாக்கும். இது உங்களை இதய நோயிலிருந்து 17 சதவீதம் வரை பாதுகாக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
3. பாக்கெட் உணவுகளைத் தூக்கி எறியுங்கள்!
நாவை அடிமைப்படுத்தும் சிப்ஸ், பிஸ்கட் மற்றும் எண்ணெயில் பொரித்த பதப்படுத்தப்பட்ட உணவுகள் 40 வயதிற்கு மேல் ஒரு எதிரி போல செயல்படும். இவை ரத்தத்தில் சர்க்கரை அளவை தாறுமாறாக ஏற்றும். இந்த வயதில் ஜங்க் ஃபுட் சாப்பிடுவது, இதயச் செயலிழப்பு அபாயத்தை இரண்டு மடங்காக உயர்த்தும். மேலும், குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பையும் இது அதிகரிக்கிறது. எனவே, நொறுக்குத் தீனிக்குப் பதிலாகப் பழங்கள் மற்றும் நட்ஸ்களைச் சாப்பிடுங்கள்.
4. மருத்துவரைப் பார்க்கத் தயங்காதீர்கள்!
40 வயதைக் கடந்தவர்கள் வருடம் ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதன் மூலம், நமக்குத் தெரியாமல் உடலுக்குள் ஒளிந்திருக்கும் சர்க்கரை நோய், தைராய்டு அல்லது கொலஸ்ட்ரால் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து, பெரிய ஆபத்து வராமல் தடுத்துவிடலாம்.
5. டென்ஷனைக் குறையுங்கள்!
மன அழுத்தம் ஒரு 'சைலண்ட் கில்லர்'. நாற்பது வயதில் குடும்பம், வேலை என்று அதிக பொறுப்புகள் இருக்கும். அதற்காக எப்போதும் டென்ஷனாகவே இருந்தால், ரத்த அழுத்தம் எகிறும். நீண்ட கால மன அழுத்தம், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 22 சதவீதம் அதிகரிக்கிறது. எனவே, தியானம், யோகா அல்லது பிடித்த பாடல்களைக் கேட்பது என மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ளுங்கள்.
நாற்பது வயது, முதுமையின் ஆரம்பம் அல்ல; அது முதிர்ச்சியின் அடையாளம். இதுவரை நாம் உடலை எப்படிப் பார்த்துக்கொண்டோம் என்பது முக்கியமல்ல, இனி எப்படிப் பார்த்துக்கொள்ளப் போகிறோம் என்பதே முக்கியம். மேலே சொன்ன இந்த ஐந்து விஷயங்களில் கவனம் செலுத்தினால், உங்களின் "செகண்ட் இன்னிங்ஸ்" ஆட்டம் மிகச் சிறப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)