உப்பு குறைவாக சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்பது பழமொழி. அதற்கேற்ப நாம் உண்ணும் அனைத்து உணவிலும் உப்பு மிக முக்கியமான பொருளாக சேர்க்கப்படுகிறத. நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகளில் சுவையைக் கொடுப்பது உப்புதான். ஆனால், உணவுக்கு சுவையைக் கொடுக்கும் உப்பு, நம் உடலில் அதிகமாக சேர்வது ஆரோக்கியத்துக்கு கெடுதலை விளைவிப்பதாக உள்ளது.
‘உடலில் அதிகப்படியான சோடியம் சேர்வது உயர் ரத்த அழுத்தத்துக்குக் காரணமாகிறது’ என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இது நம்முடைய இதய ஆபத்தை அதிகரிக்கிறது. எனவே, பெரியவர்கள் ஒரு நாளைக்கு ஐந்து கிராமுக்கும் குறைவான அளவில் உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். சில ஆய்வுகளின்படி உணவில் உப்பு குறைவாக சேர்ப்பவர்களுக்கு இதயப் பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு 18 சதவீதம் வரை குறைவாக இருக்கிறதாம். இது தவிர, உப்பு குறைவாக சாப்பிடுவதில் வேறு சில நன்மைகளும் அடங்கியுள்ளன.
எலும்பு வலுவாகும்: அதிகமாக உப்பு உட்கொள்வதால் அது உடலில் உள்ள திசுக்கள் மற்றும் செல்களில் திரவத்தை அதிகம் சேகரிக்க வழிவகுக்கும். இதனால் உடலில் கால்சியம் வெளியேற்றம் நடைபெற்று, எலும்புகளில் சிதைவு ஏற்படுகிறது. எனவே, தினசரி உப்பைக் குறைப்பது மூலமாக எலும்புகள் சேதமடையும் அபாயத்தைக் குறைக்கலாம்.
ரத்த அழுத்தம் குறையும்: உப்பு குறைவாக உட்கொள்வது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் நல்லது. இதனால் ரத்த அழுத்தம் குறைகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சிறுநீரக செயல்பாடு மேம்படும்: அதிகமாக உப்பு உட்கொள்ளும்போது, அவற்றை வெளியேற்ற சிறுநீரகம் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. இது சிறுநீரகக் கற்கள் போன்ற சிறுநீரக நோய்களுக்கு வழி வகுக்கிறது. எனவே, உப்பை குறைவாக சாப்பிட்டால் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.
உடல் வீக்கங்களைக் குறைக்கும்: இதயப் பிரச்னை உள்ளவர்களுக்கு உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால், ஆங்காங்கே நீர் தேங்கி வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, குறைந்த உப்பு உடலில் உள்ள வீக்கங்களைக் குறைக்கிறது.
இதயத்துக்கு நல்லது: உப்பு குறைவாக எடுத்துக் கொள்வதால் ரத்த அழுத்தம் சீரடைகிறது. இதனால் இதயத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் தவிர்க்கப்படுகின்றன.
எனவே, சிறியவர் முதல் பெரியவர் வரை உப்பை குறைந்த அளவிலேயே எடுத்துக்கொள்வது நல்லது. இதனால் நம் உடலில் ஏற்படும் பல பாதிப்புகள் தவிர்க்கப்படுகின்றன.