உப்பு போட்டு சாப்பிடாதீங்க..சிறுநீரக ஸ்பெஷலிஸ்ட் அட்வைஸ்!

உப்பு போட்டு சாப்பிடாதீங்க..சிறுநீரக ஸ்பெஷலிஸ்ட் அட்வைஸ்!

“இன்று உலகின் நெம்பர் ஒன் உயிர்க்கொல்லி ஹைப்பர் டென்ஷன்தான்! அதற்கு முக்கிய காரணம் சாப்பாட்டில் நாம் சேர்த்துக் கொள்ளும் உப்புதான்! சாப்பாட்டில் உப்பை தவிர்ப்பது உடல் நலத்துக்கு நல்லது. குறைத்துக் கொள்ள வேண்டியது ரொம்ப அவசியம்!” என்கிறார் சிறுநீரக ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன்.

சென்னையைச் சேர்ந்த கே எஸ் ஏ அறக்கட்டளை என்ற அமைப்பு கடந்த பத்தாண்டுகளாக சென்னை மாநகருக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களை அங்கீகரித்து, கௌரவிக்கும் வகையில் ‘சென்னையின் சாம்பியன்கள்” விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பேசியபோதுதான் மேணுறபடி விழிப்புணர்வை ஏற்படுத்தி, உப்பில்லாமல் தயாரிக்கப்பட்ட சிறுதானிய ஸ்நாக்ளையும் விநியோகித்தார் டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன்.

இலாப நோக்கற்ற அமைப்பான கேஎஸ்ஏ அறக்கட்டளை, பல துறைகளிலும் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தி வரும் சென்னையைச் சேர்ந்த 61 பேர்களுக்கு இதுவரை ‘சென்னையின் சாம்பியன்கள்” விருதுகளை வழங்கி உள்ளது. இந்த ஆண்டிற்கான விழாவில் சென்னை ஐஐடியின் இயக்குனர் பேராசிரியர் வி.காமகோடி தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு, விருதுகளை வழங்கினார்.

2023க்கான விருது பெற்றவர்கள் விபரம் வருமாறு:

1. கலை மற்றும் கலாச்சாரம் - திரிபுரசுந்தரி செவ்வேல், இவர் ஒரு கட்டிடக் கலைஞர், தீவிர பாரம்பரிய ஆர்வலர் மற்றும் பாதுகாவலர். மிகக் குறைந்த வயதில் சென்னை இலக்கிய சங்கத்தின் செயலாளர் பொறுப்பு வகிப்பவர்.

2. கல்வி - டாக்டர். நவின் ஜெயக்குமார், வினாடி வினா உலகில் மிகப் பிரபலமாக விளங்கும் மனிதர். தொழில் ரீதியாக இவர் ஓர் கண் மருத்துவர்.

3. தொழில்: - அடையாறு ஆனந்த பவன் ஸ்வீட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், இனிப்பகம் மற்றும் உணவகம் உணவகத் தொழிலில் தனது முத்திரையைப் பதித்துள்ளது. அதன் மூலம் தேசிய அளவில் மட்டுமின்றி உலகளவில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது,

4. உடல் நலம் - டாக்டர். ராஜன் ரவிச்சந்திரன், சிறுநீரகவியல் துறைக்காக தன் வாழ்வை அர்பணித்துக் கொண்டவர். தனது நிபுணத்துவத்தின் மூலம், எண்ணற்ற சிறுநீரக நோயாளிகளின் வாழ்க்கையை மாற்றியமைத்து, புது வாழ்வு அளித்து, அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை பெரிதும் மேம்படுத்தியவர்.

5. சமூக முன்முயற்சி - எஸ். வித்யாகர், உதவும் கரங்கள் என்ற பெயர் கொண்ட தனது தொண்டு நிறுவனத்தின் மூலமாக குடும்பம் மற்றும் சொந்தம் என்ற உணர்வைக் கொண்ட மற்றொரு தலைமுறை மக்களை உருவாக்கி வருபவர்.

6. விளையாட்டு – , ஸ்ரீ. சீனிவாச ராவ் மற்றும் ஸ்ரீ. முரளிதர ராவ் என்ற ராவ் சகோதரர்களால் நிறுவப்பட்ட SDAT - AKG டேபிள் டென்னிஸ் மேம்பாட்டு மையம். நாட்டின் மிகச்சிறந்த டேபிள் டென்னிஸ் விளையாட்டு மையங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

நிகழ்ச்சியின்போது இவர்களது சமூகப் பங்களிப்பு குறும்படங்களாக பார்வையாளர்களுக்குத் திரையிடப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய தலைமை விருந்தினர் பேரா. காமகோடி, “விருதுகள் பெற்றுள்ள இவர்கள் தங்கள் சமூக லட்சியத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பேரும், புகழும் பெற்றிருந்தாலும், தங்கள் ஆத்ம திருப்திக்காக இந்தப் பணிகளில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று பாராட்டினார்.

கே எஸ் ஏ அறக்கட்டளையின் அறங்காவலர்கள் திரு. டி ஆர் கோபால கிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். திரு ஆர். மணிகண்டன், நன்றியுரை வழங்கினார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com