
ஒரு மனிதன் சராசரியாக இருக்க வேண்டிய உடல் எடையை விட சுமார் 5 கிலோ குறைவாகவோ அதிகமாகவோ இருந்தால் அது சாதாரணம்தான். ஆனால், 15 கிலோ உடல் எடை வித்தியாசப்பட்டால் கண்டிப்பாக அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பெண் குழந்தைகள் உடல் எடை கூடிவிட்டால் அதற்கு தக்க உணவுக் கட்டுப்பாடுகளை உடனே மேற்கொள்வதுபோல உடல் எடை குறைந்தாலும் அதற்கேற்ற டயட் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தேவையை விட அதிக உடல் எடை இருந்தால் எப்படிக் குறைக்கலாம் என்பதற்கு டயட் ஃபோலோ செய்யும் நாம் தேவையான உடல் எடை இல்லையென்றால் என்னென்ன டயட் ஃபாலோ செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துள்ளோமா?
உடல் எடை அதிகரிக்க, டயட் டிப்ஸ்!
காலையில் டீ - காஃபி தவிர்த்துவிட்டு, இட்லி தோசை, பூரி என காலை டிபனை வழக்கத்தை விட சிறிது அதிகபடுத்துங்கள். தாராளமாக 4 இட்லிகள் சாப்பிடலாம். இது அதிகம் என்று நினைக்க வேண்டாம்.
11 மணியளவில் பால்/தயிர் கலந்து சத்து மாவு கஞ்சி, கேப்பங்கூழ் என சத்து மிகுந்த ஆகாரங்கள் சிலவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மதியம், இரவு இரண்டு வேளையும் சாப்பாடு சாப்பிடுவது நல்லது. அவரவர் வேலைக்கேற்ப மதிய உணவின் அளவு வித்தியாசப்படும். தாராளமாக 2-3 கப் சாதத்தோடு, நிறைய காய்கறிகள் எடுத்துக்கொள்வது அவசியம். அத்தோடு சுண்டல், பருப்பு, முளைகட்டியப் பயிர் என புரதச்சத்து அதிகம் உள்ள பொருட்களைச் சாப்பிடுவது நல்லது.
அசைவ உணவு எடுத்துக்கொண்டால் காய்கறி, தயிர்/மோர் எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற தவறான கருத்து நம்மில் பலரிடையே உண்டு. இது சரியல்ல. எந்த உணவு எடுத்துக் கொண்டாலும் அதனுடன் காய்கறி, தயிர், மோர் இவற்றை சேர்த்துக்கொண்டால் உடலுக்குக் கூடுதல் பலம் சேர்க்கும்.
எல்லா உணவிலும் எண்ணெய் மற்றும் காரத்தின் அளவைக் குறைத்துக்கொண்டால் சத்துமிகு உணவை அதிகமாக எடுத்துக்கொள்ள முடியும்.
3-4 மணியளவில் தேவைபட்டால் டீ, காஃபி எடுத்துக்கொள்ளலாம்.
இரவு படுக்கும் முன் கட்டாயம் பாதாம் அல்லது மஞ்சள் கலந்து பால் சாப்பிட வேண்டும்.
ப்ரெட்டுடன் வெண்ணெய்/சீஸ் சேர்த்துக் கொள்வது, பன்னீர், நெய் தோசை, பரோட்டா போன்ற உணவுகள் உடல் எடையைக் கூட்டும். இவற்றை அடிக்கடி எடுத்துக்கொள்ளாமல் வாரம் ஒரு முறை சிறிதளவு எடுத்துக்கொண்டால் போதும்.