சிவப்பு அவல் தரும் அளவில்லா அற்புதம்!

சிவப்பு அவல் தரும் அளவில்லா அற்புதம்!

சிவப்பு நிற அவல் பட்டை தீட்டப்படாத அரிசியில் இருந்து தயாரிக்கப்படுவதால் அதில், முழு சத்துக்களும் நிறைந்துள்ளன. அவலில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற அவல் என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டிலுமே சத்துக்கள் உள்ளன என்றாலும், சிவப்பு நிற அவலில் சற்று கூடுதலாவே சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆந்தோசைனின் என்ற நிறமிதான் இந்த அரிசிக்கு இந்த நிறத்தைத் தருகிறது.

அவலை காலை உணவில் சேர்ப்பதால் உடலுக்கு நாள் முழுவதும் தேவைப்படும் சத்துக்கள் கிடைத்து விடுகின்றன. ஒரு கப் அவலில் 250 கலோரிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவே வறுத்த அவலில் 333 கலோரிகள் இருக்கிறதாம். காலையில் இதை சாப்பிட்டால் நீண்ட நேரத்துக்கு பசி எடுக்காது. தொடர்ந்து அவல் சாப்பிடும்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தீர்த்து குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவையும் குறைக்கிறது. எனவே, உடல் எடை குறைக்க விரும்புவோருக்கு பெஸ்ட் சாய்ஸ் ஆக இந்த அவல் திகழ்கிறது.

அனிமியா பிரச்னை உள்ளவர்கள் இந்த சிவப்பு அவலை அடிக்கடி சாப்பிடலாம். வயிற்றுப் புண், வாய்ப்புண் இரண்டுக்குமே நல்ல நிவாரணி இந்த சிவப்பு அவல். முக்கியமாக, நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த அவல் மிகவும் நல்லது.  நீரிழிவு நோயாளிகளுக்கு அடிக்கடி பசிக்கும் என்பதால் இந்த அவலை அப்படியே வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். இதில் உள்ள நார்ச்சத்து இரத்தத்தில் உடனடியாக குளுக்கோஸ் கலக்காமல் இருக்க உதவி புரிகிறது. பட்டை தீட்டாத அரிசியில் இருந்து இந்த அவல் தயாரிக்கப்படுவதால் சர்க்கரை நோயாளிகள் இதை அளவுடன் சாப்பிடலாம். சிவப்பு அவல் புற்றுநோய் உண்டாக்கும் அமிலங்களை குடலுக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்துகிறது. கர்ப்பிணிகள் பெரும்பாலும் இரத்த சோகையால் பாதிக்கப்படுவார்கள். இவர்கள் சிவப்பு அவலை தவறாமல் சாப்பிட வேண்டும்.

வழக்கமாக பாலில் அவல் மற்றும் வெல்லம் சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு சாப்பிடத் தருவார்கள். ஆனால், இதில் உப்புமா போல செய்யலாம். வேகவைத்து தாளித்தும் சாப்பிடலாம். வெல்லம் சேர்த்து அவல் உருண்டை செய்து சாப்பிடலாம். அவல் லட்டு செய்யலாம். அவல் கேசரி, அவல் பாயசம் செய்தும் சாப்பிடலாம். சிவப்பு அவலை வறுத்த வேர்க்கடலையுடன் சேர்த்து சாப்பிட்டு, இறுதியில் ஜீரணத்துக்காக ஒரு துண்டு வெல்லம் சாப்பிட்டு விடுவார்கள். அவலை சிறிது ஊற வைத்து நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து உருண்டை போல செய்து மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் போல கொடுக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com