ஆஸ்துமா பிரச்னையால் அவதியா? அவசியம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!

ஆஸ்துமா பிரச்னையால் அவதியா? அவசியம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!

கிராமம் முதல் நகரம் வரை, ஆண் – பெண் பாகுபாடின்றி அனைத்துத் தரப்பு வயதினரையும் பாதிக்கும் ஒரு பிரச்னை ஆஸ்துமா. நுரையீரல் பாதிப்பின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அதற்காக காலை, மதியம், இரவு என மாத்திரைகள் உட்கொண்டும் முழு பலன் பலருக்கும் கிடைப்பதில்லை. இவர்களுக்கான சில ஆலோசனைகளை இந்தப் பதிவில் காண்போம்.

ஆஸ்துமா பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் கிழங்கு வகை உணவுகளை சேர்த்துக்கொள்ளக் கூடாது. மாறாக, கீரைகள், கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். பிரிட்ஜில் வைத்த பழைய உணவுகளை தவிர்க்க வேண்டும். அப்போது சமைத்து சூடான உணவுகளையே இவர்கள் உண்ண வேண்டும். தயிர் சேர்த்துக்கொள்ளக் கூடாது. ஆனால், மோராக சாப்பிடலாம். அதுவும் இரவு நேரங்களில் கண்டிப்பாக சேர்க்கக்கூடாது.

இவர்கள் வெந்நீர் மட்டுமே பருக வேண்டும். ஐஸ்கிரீம் போன்ற குளிர்ந்த பொருட்களைத் தவிர்க்க வேண்டும். மேலும், இரவு சாப்பாட்டை ஏழு மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும். எண்ணெய் பொருட்களை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, தெருக்கடைகளில் சுகாதாரமற்ற வகையில் செய்யப்படும் பஜ்ஜி, போண்டா போன்றவற்றை ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் அவசியம் தவிர்க்க வேண்டும். இவர்கள், மன இறுக்கம், கவலை மற்றும் கோபத்தைத் தவிர்த்து மனதை சாந்தமாக வைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் தங்களது சாப்பாட்டில் அதிக கவனம் கொள்ள வேண்டும். அரை வயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிற்றை காலியாக வைத்திருக்க வேண்டும். அருகம்புல் சாறு வாரம் இருமுறை எடுத்துக்கொள்ளலாம். துளசி இலைகளை சுத்தம் செய்து தினமும் சாப்பிடலாம். வாரம் ஒரு முறை தூதுவளைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. முசுமுசுக்கை இலையை வதக்கி கீரையாக சாப்பிடலாம். கற்பூரவள்ளி இலை, மிளகு, வெற்றிலை மூன்றையும் நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை பருகலாம். இவையெல்லாம் பொதுவானவை. இவை தவிர, அவரவர் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு அதன்படி மருந்துகள் எடுத்துக்கொள்வது அவசியம்.

மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் பொதுவாக கர்ம வினைகளாலும் பழக்க வழக்கங்களாலும் சுற்றுச்சூழலாலும், பரம்பரை வழியாகவும் வருகின்றன. கர்மவினை நீங்க தியானம் செய்வது மிகச் சிறந்த நிவாரணம். இதனால் எண்ணங்கள் ஒடுங்கும். மனம் அமைதி பெறும். அப்பொழுது நமது உடலில் உள்ள ஆத்ம சக்தி உடல் முழுவதும் பரவும். எதிர்மறை எண்ணங்கள் படிப்படியாக மறைந்து, நல்ல எண்ணங்கள் மட்டும் வளரும். நல்லதையே நினைக்கத் தோன்றும். நற்செயல்களால் பழைய கர்மவினைகள் நீங்கி, ஆரோக்கியம் கிடைக்கும். ஆஸ்துமா மட்டுமல்ல, அனைத்து வித உடல் மற்றும் மன நல பாதிப்புகளுக்கும் தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சி சிறந்த நிவாரணமாக விளங்குகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com