இஞ்சி...
இஞ்சி...

சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை சுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை. என்னடா சொல்ல வர்றீங்க?

-மரிய சாரா

சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை

சுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமில்லை

என்பது பழமொழி, அதாவது, காத்து ரட்சிப்பதில் வேலேந்திய சுப்பிரமணியாகிய முருகப்பெருமானுக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்பதுபோல, மருத்துவக் குணங்கள் நிறைந்து இருப்பதில் இஞ்சியை மிஞ்சியது எதுவுமில்லையாம்!

வைட்டமின் A, C, B6, B12, கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து இப்படி ஏகப்பட்ட சத்துகளைக் கொண்டது இஞ்சி. இதை மருந்தாக நாம் பயன்படுத்துவதுண்டு, சுவைக்காகவும் ஜீரணத்திற்காகவும் சமையலில் பயன்படுத்துவதும் உண்டு. முக்கியமாக மசாலாக்கள் அதிகம் சேர்க்கப்படும் எல்லா உணவுகளிலும் இஞ்சி இருக்கும்.

மஞ்சள், இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை இவை நான்கும் சமையல் அறையில் மகளிருக்கு சுவையைக் கூட்ட உதவும் இணைபிரியாத நண்பர்கள். மஞ்சளைப் போலவே இஞ்சியும் பூமிக்கு அடியில் விளையும் என்பதால் இதை வேர் என பலர் நினைக்கலாம். ஆனால், இது உண்மையில் தாவரத்தின் தண்டுப்பகுதிதான்.

அமிலத்தன்மை இருப்பதால், இஞ்சி கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும் குணமுடையது. இஞ்சி காய்ந்து விட்டால் அதை சுக்கு என்கிறோம்.

சளி, இருமல், காய்ச்சல் முதலியவற்றிற்கு உடனடி வீட்டு வைத்தியம் என்றால் அதில் சுக்கு இல்லாமல் இருக்காது. தொண்டை வலிக்கு கூட சூடாக சுக்கு காபி சாப்பிட்டால் அவ்வளவு இதமாக இருக்கும். ஜீரணம் சம்மந்தமான பிரச்னைகளுக்கு வீட்டில் உடனடி தீர்வு என்றால் அது இஞ்சிதான்.

இஞ்சியின் பயன்கள் சில :

1. தினமும் உணவில் 5 கிராம் இஞ்சி சேர்ப்பதால் மாரடைப்பு ஏற்படும் சாத்தியங்கள் குறைகிறது.

2. புற்றுநோய் செல்களின் அபாயத்தையும் போக்குவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

3. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதுடன், பசியுணர்வையும் தூண்டுகிறது.

4. துண்டு இஞ்சியை அரைத்து நெற்றியில் தடவினால் ஒற்றைத்தலைவலி பறந்துவிடும்.

5. இஞ்சி சாறில் தேன் கலந்து ஒரு ஸ்பூன் தினமும் சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

6. இஞ்சி சாறுடன், வெங்காயச் சாறை சேர்த்து ஒரு ஸ்பூன் வீதம் தினமும் காலையில் ஒரு வாரத்திற்கு எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோயின் தீவிரம் குறையும்.

இதையும் படியுங்கள்:
அவசியம் தவிர்க்க வேண்டிய 6 வகை உணவுகள்!
இஞ்சி...

7. பாலுடன் இஞ்சி சாறு சேர்த்து சாப்பிட்டால் வயிற்று பிரச்னைகள் நீங்கும்.

8. இஞ்சியை துவையல்போல செய்து சாப்பிட்டால், நெஞ்சு குத்தல் சரியாகும்.

9. இஞ்சி சாறுடன் தேன் கலந்து சுடுநீரில் தினமும் காலையில் பருகிவந்தால் உடல் பருமன் குறையும்.

10. இஞ்சி சாறுடன் வெல்லம் சேர்த்து உண்டால் வாதம் தொடர்பான கோளாறுகள் நீங்கும்.

11. பித்தத்தால் ஏற்படும் தலைசுற்றல் சரியாக, இஞ்சி சாறுடன் உப்பு கலந்து மூன்று நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் சரியாகும்.

நிறைமாத கர்ப்பிணிகள், ரத்தக்கோளாறு இருப்பவர்கள், பித்தப்பை கல் இருப்பவர்கள், குடல் பிரச்னை இருப்பவர்கள், அறுவை சிகிச்சைக்குச் செல்ல இருப்பவர்கள், எடை குறைவாக இருப்பவர்கள் இஞ்சி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

அதோடு, மேலே குறிப்பிடப்பட்டவற்றைப் பின்பற்றும்முன் தங்களது உடலை பரிசோதனை செய்துகொண்டு மருத்துவ ஆலோசனையுடன் பின்பற்றவேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com