

முன்பெல்லாம் 85% சுகப்பிரசவமாகவும் 15% சிசேரியனாகவும் இருந்தது. தற்காலத்தில் 50% மட்டுமே சுகப்பிரசவமாக உள்ளது. இதற்கு என்ன காரணம்?
பாட்டி, அம்மா காலத்தில் உடல் உழைப்பு அதிகம் இருந்தது. அதனால் நார்மல் டெலிவரி அவர்களுக்கு சுலபமானது. தற்போது வீட்டு வேலைகளை கூட நாம் அதிகம் செய்வதில்லை. கர்ப்ப காலத்தில் இப்போது உடற்பயிற்சி செய்தாலும் அதற்கு முன்பு வரை நம் வாழ்க்கை எப்படி இருந்தது என்பது முக்கியம்.
திருமணம் ஆவதற்கு பல ஆண்டுகள் முன்பிருந்தே யோகா, உடற்பயிற்சி செய்வது என்று தினசரி ஒழுங்காக இருந்தால் நார்மல் டெலிவரி காண வாய்ப்புகள் அதிகம். நார்மல் டெலிவரி என்பதில் வார்த்தை மட்டுமே நார்மல். வலி தீவிரமாக இருக்கும். நார்மல் டெலிவரிக்கு வாய்ப்பு இருந்தாலும் சிறிது வலி வந்தாலும் என்னால் முடியாது என்று சோர்ந்து விடுகின்றனர் பெண்கள். பிரசவ காலத்தின் போது ஏற்படும் வலியை பொறுத்துக் கொள்ளும் அளவுக்கு மன தைரியம் உடல் வலிமை இருப்பதில்லை.
ஆரோக்கியமான குழந்தையின் உடல் எடை 2.8 கிலோ முதல் 3.2 கிலோவாக இருக்க வேண்டும். இதற்கு கர்ப்ப காலத்தில் தாயின் உணவு முறை ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். தினசரி உணவில் அந்த பருவத்தில் கிடைக்கும் இரண்டு பழங்களை முழுமையாக கடித்து சாப்பிடுவதால் விட்டமின், நார்ச்சத்து முழுமையாக உடலில் சேரும். பாதாம், முந்திரி போன்ற உலர் விதைகள் தலா இரண்டு, சோயா, முளைகட்டிய பயிறு சுண்டல், பன்னீர் என தினசரி உணவில் புரதம் அதிகம் இடம் பெற வேண்டும்.
அசைவம் சாப்பிடுபவர்கள் தினமும் இரண்டு அவித்த முட்டை, சிக்கன், மீன் இவற்றை வாழை இலையில் மடித்து வைத்து அவித்து சாப்பிடலாம். இதனால் வாழை இலையில் உள்ள விட்டமின் ஏ, சி, இ, ஆன்ட்டி ஆக்சிடென்ட், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், நார்சத்துக்கள் உணவில் இறங்கி இரண்டின் பலனும் சேர்ந்து கிடைக்கும்.
அரிசியை மட்டுமே சேர்க்காமல் கேழ்வரகு, கம்பு, திணை என்று ஏதாவது ஒரு சிறுதானியத்தில் செய்த தோசை, இட்லி, கஞ்சி, உப்புமாவை தினசரி சாப்பிடலாம்.
நார்மல் டெலிவரி ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் எல்லா பயிற்சிகளையும் யூட்யூபில் பார்த்து செய்வது தவறு. இதனால் குறைப்பிரசவம் அல்லது வேறு ஏதேனும் சிக்கல் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். டாக்டரின் ஆலோசனையுடன் பயிற்சியாளரின் கண்காணிப்பில் மட்டுமே செய்ய வேண்டும்.
கர்ப்ப காலத்தில் எந்த உடல் பிரச்னையும் இல்லாமல் இருந்தால் ஐந்தாவது மாதத்தில் காலை, மாலையில் குறைந்தது 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யலாம். நீர்ச்சத்து குறைவதால் ஏற்படும் தசைப் பிடிப்பை தவிர்க்க நடப்பது, அவ்வப்போது சிறிது தண்ணீர் குடிப்பது அவசியம். ஆறாவது மாதத்தில் யோகா செய்யலாம். நீச்சல் குளத்தில் நடைபயிற்சியும் செய்யலாம். இடப்பக்கமாக படுத்து இரவில் எட்டு முதல் 10 மணி நேரம் உறக்கம் மற்றும் மதியம் ஒரு மணி நேரம் ஓய்வெடுப்பது அவசியம்.
ஏன் இடப்பக்கமாக படுக்க வேண்டும் என்றால் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்க, ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். உட்காரும் போதோ, வலது பக்கமாக படுத்தாலோ இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் மகா தமணியை அழுத்தும். இதனால் கர்ப்ப பைக்கு ரத்த ஓட்டம் செல்வது குறையும். இடது பக்கமாக படுப்பதால் எவ்வித அழுத்தமும் இல்லாமல் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
அதற்காக வலது பக்கமாக படுக்கவே கூடாது என்று சொல்லவில்லை. 90% இடது பக்கம், 10% வலது பக்கம் படுக்கலாம். ஒவ்வொரு முறை திரும்பி படுக்கும்போதும் எழுந்து உட்கார்ந்து அதன் பின் இன்னொரு பக்கமாக படுக்க வேண்டும் என்று சொல்வது தவறு. திரும்பிப் படுக்கும் போது மல்லாந்து படுத்து சில நிமிடங்கள் கழித்து அடுத்த பக்கம் படுக்கலாம். இவற்றை பின்பற்றினால் ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த குழந்தை பிறக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)