பப்பாளி பழம் நிறைய ஆரோக்கிய நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது என்பதை நாம் அறிவோம். ஆனால், சுவை இல்லாத காரணத்தால் பப்பாளியை காயாக யாரும் சாப்பிட விரும்புவதில்லை. காயின் உள்ளே உள்ள சதைப்பகுதி மென்மையாக இல்லாமல் சற்று கரடுமுரடாக இருக்கும். அதை கடித்து சாப்பிடவும் யாருக்கும் விருப்பம் இருக்காது. சுவை ஏதுமின்றி தண்ணீர் சத்து மட்டும் நிறைந்திருக்கும். இதனால் பெரும்பாலும் மக்கள் பப்பாளிக் காயை சாப்பிட விரும்புவதில்லை. ஆனால், அதிலுள்ள ஆரோக்கிய நன்மைகளை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
பப்பாளி காய் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தரும். காயில் ஊட்டச்சத்துக்களும் வைட்டமின்களும் நிரம்பி உள்ளன. இதை காயாக சாப்பிட்டால் உடலில் உள்ள வீக்கம், வயிறு சார்ந்த உபாதைகள், மலச்சிக்கல் , செரிமான கோளாறு ஆகிய பிரச்சனைகளை சரி செய்கிறது.
இதே செயல்களை தான் பப்பாளி பழமும் செய்கிறதே என்ற கேள்வி வரலாம். ஒரு சில மருத்துவப் பண்புகளின் காரணமாக பப்பாளியை காயாக சாப்பிடுவது அதிக நன்மைகளை தருகிறது.
பப்பாளிக் காயில் அதிக அளவில் நீர்சத்து உள்ளது. இதனால் இதை சாப்பிட்டவர்கள் நிரேற்றத்துடன் இருக்கலாம். இதனால் உடல் சூடும் குறைந்து குளிர்ச்சியாக இருக்கும். பப்பாளிக் காயில் மட்டும் சுமார் 88% நீர் உள்ளதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் உள்ள சிறிதளவு டையூரிடிக் பண்புகள் உடல் உறுப்புகளில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமாக உடலை பராமரிக்க உதவுகிறது.
'பப்பேன்' என்ற ரசாயனம் புரதங்களை உடைத்து செரிமானத்திற்கு உதவுகிறது. இது பப்பாளிக் காயில் உள்ளது. இது மட்டுமல்லாமல் குடலில் உள்ள வீக்கத்தையும் குறைக்கிறது. குடற்புண் , கல்லீரல் அழற்சி போன்றவற்றையும் குணமாக்குகிறது. ஒருவரின் தினசரி தேவைக்கு உண்டான வைட்டமின் சி - யில் 60% அளவு 100 கிராம் பப்பாளிக் காயில் கிடைக்கிறது. மேலும் வைட்டமின் ஏ நிறைந்த இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகளையும் ஊக்குவிக்கிறது.
கோடைக் காலத்தில் பப்பாளிக் காய் சாப்பிடுவதால் பொதுவான கோடைகால நோய்களிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம். பப்பாளிக் காயில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால் நீண்ட நேரம் பசி உணர்வை கட்டுப்படுத்தும். மேலும் இதில் குறைந்த அளவே கிளைசெமிக் குறியீட்டையும் பெற்றுள்ளதால் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டோடு வைக்கும், இதனால் நீரழிவு நோயாளிகளுக்கு நன்மை பலன் கிடைக்கும்.
பப்பாளிக் காயில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற வைத்து முகப்பரு பிரச்சனையிலிருந்து விடுபட வைக்கும். மேலும் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி பொலிவுடன் வைக்கும். இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை பப்பாளிக் காய் திறம்பட குறைத்துள்ளது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
நிறைய நன்மைகள் இருந்தாலும் கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளிக்காய் மற்றும் பப்பாளிப் பழம் ஆகிய இரண்டையும் தவிர்ப்பது நல்லது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)