வயிற்று வலி வர பல காரணங்கள் இருக்கின்றன. தொடர்ச்சியான கடுமையான வலி ஏற்படும்போது மருத்துவரை ஆலோசித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம். மற்றபடி சிறிய அஜீரணக் கோளாறு, உடல் உஷ்ணத்தால் வயிற்றில் வலி எனும்போது எளிய வீட்டுப் பொருட்களைக் கொண்டே அதை குணப்படுத்திக் கொள்ளலாம்.
* வயிற்று வலி தீர தண்ணீரில் சிறிது சுக்கு, பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து ஆறியதும் அருந்த வயிற்று வலி குணமாகும்.
* ஜாதிக்காயை அரைத்து தேன் கலந்து சாப்பிட வலி மட்டுப்படும்.
* வயிற்று வலி குணமாக வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து சாப்பிட சற்று நேரத்தில் குணம் கிடைக்கும்.
* வெந்தயத்தை வாயில் போட்டு மோர் அருந்த சட்டென வயிற்று வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.
* சீரகத்தை மோரில் பொடித்துப் போட்டு அருந்த சூட்டினால் உண்டாகும் வலியை குணப்படுத்தும். வயிறு சம்பந்தமான நோய்களுக்கு மோரும், வெந்தயப் பொடியும் சிறந்த நிவாரணம் தரும்.
* வயிற்று வலியுடன்கூடிய உப்புசம், வாயத் தொல்லைக்கு மோரில் பெருங்காயம் சேர்த்து கலந்து அருந்த உடனடி நிவாரணம் கிடைக்கும். வயிற்று வலி போல வயிற்றுப் புண்ணும் கஷ்டத்தை தரும்.
* வாய்ப்புண், வயிற்றுப் புண்ணால் வலி உண்டானால் முட்டைக்கோஸை வேக வைத்து அந்த சாறை அருந்த நல்ல குணம் கிடைக்கும்.
* வயிற்றுப் பூச்சி, புழு ஆகியவை நீங்க பிரண்டை, சுண்டைக்காயை உணவில் ரெகுலராக சேர்த்து வரலாம். மணத்தக்காளி, அகத்திக்கீரை சாறு வாய்ப்புண், வயிற்றுபுண் அதனால் உண்டாகும் வலியைப் போக்கக்கூடியது.
* குடல்புண் குணமாக வாரம் ஒருமுறை அகத்திக்கீரையை சாப்பிட வயிற்று உபாதைகள் வராது. திராட்சை சாறு அருந்த வயிற்று புண் குணமாகும். நாவல் பழம் வயிற்றுப் புண்ணை ஆற்றும் குணம் கொண்டது. வெற்றிலை, ஓமம் இடித்து பிழிந்து தேன் கலந்து பருக வயிற்றுப் பொருமல், வயிற்றுப்போக்கு குணமாகும்.
* குடல் வலிமை பெற வில்வ பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிடலாம். வயிற்று வலி, வாய்ப்புண் இருந்தால் கறிவேப்பிலையை அரைத்து மோரில் கலக்கி குடிக்க, உடனடி நிவாரணம் கிடைக்கும். வெங்காயத்தை நாள்தோறும் விளக்கெண்ணையில் வதக்கி சாப்பிட்டு வர வயிறு சுத்தமாகி, உடலை குளிர்ச்சியாக்கி மலச்சிக்கலைப் போக்கும்.
* பாகற்காயை விதையுடன் அரைத்து பாலுடன் கலந்து குடித்து வர வயிற்றுப் பூச்சி, புழு நீங்கி வயிறு சுத்தமாகும். அசுத்தமான தண்ணீர், பழைய உணவுகள், காரமான மசாலா உணவுகளை சாப்பிடுவது கூடாது. தெருவோர உணவுகள், அதிகமான அசைவ உணவுகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கலாம்.
* நாள்தோறும் தேவையான தண்ணீர், நேரத்திற்கு சாப்பாடு, வேக வைத்த உணவுகளை, காய்கறிகள், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்வதால் வயிற்றுவலி போன்ற உபாதைகள் வராது.