ஆல்ஃபால்ஃபா என்ற தாவரம் ஆசியாவைப் பிறப்பிடமாகக் கொண்டு, பின் உலகம் முழுவதும் பயிரிடப்பட்டு வருகிறது. இது பயறு வகையைச் சார்ந்த ஒன்று. மருத்துவத் தயாரிப்புகளிலும் மூலிகையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் கால்நடைகளுக்கு தீவனமாக ஆல்ஃபால்ஃபாவை கொடுத்து வந்து, பின் அதிலுள்ள ஆரோக்கிய நன்மைகளை அறிந்து, நாம் உண்ணும் உணவுகளிலும் பல வகையில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
ஆல்ஃபால்ஃபாவிலுள்ள குளோரஃபில், நச்சு நீக்கியாக செயல்பட்டு கல்லீரலையும் இரத்தத்தையும் சுத்தப்படுத்தி நச்சுக்களை நீக்குகிறது. குளோரஃபில், நச்சுக்களை அடர் உலோகத்துடன் (Heavy Metal) இணைத்து உடலிலிருந்து வெளியேற்ற உதவுகிறது.
ஆல்ஃபால்ஃபாவில் பைட்டோ ஈஸ்ட்ரோஜென் என்றொரு தாவரக் கூட்டுப்பொருள் உள்ளது. இது ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் குணங்களை சார்ந்திருந்து, பெண்களின் மெனோபாஸ் காலங்களில் உணரும் மனநிலை மாற்றம் மற்றும் உடலில் அவ்வப்போது தோன்றும் வெப்ப ஒளிக்கீற்றை தவிர்க்கவும் ஹார்மோன் அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும் உதவுகிறது.
ஆல்ஃபால்ஃபா உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதில் சிறந்த முறையில் பணியாற்ற வல்லது. இதிலுள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் இதய ஆரோக்கியம் காக்கவும் இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்கவும் உதவுகின்றன. இதிலுள்ள அதிகளவு கால்சியம் எலும்புகளை வலுவாக்கவும் ஆஸ்டியோபொரோஸிஸ் நோய் வருவதைத் தடுக்கவும் உதவுகிறது.
வைட்டமின் K யானது எலும்புகளின் மெட்டபாலிசம் சிறப்பாக நடைபெறவும், எலும்பு முறிவைத் தடுக்கவும் உதவுவதோடு, உடம்பில் காயம் ஏற்படும்போது வெளியேறும் இரத்தத்தை உறையச் செய்து இரத்த இழப்பைத் தடுக்கவும் செய்கிறது.
ஆல்ஃபால்ஃபா குறைந்த அளவு கலோரி கொண்டது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை இரண்டும் எடையை சமநிலையில் வைத்துப் பராமரிக்க உதவுகின்றன. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் வைட்டமின் A, Eயும் செல் சிதைவைத் தடுத்து, சரும ஆரோக்கியம் மற்றும் எலாஸ்டிசிட்டியை பாதுகாக்க உதவுகின்றன.
இதிலுள்ள வைட்டமின் B1, B6 முடி வளர உதவுகின்றன. இதன் டையூரிக் குணம் சிறுநீரகத்தில் நீர் தேக்கம், கல் உருவாகுதல் போன்ற பிரச்னைகளைத் தீர்க்கவல்லது. இதன் இலை, பூ, முளை கட்டிய விதை போன்றவற்றில் டீ போட்டும், சாலட் செய்தும், சமையலில் பல வழிகளில் உபயோக்கித்தும் பலன் பெறலாம். ஆல்ஃபால்ஃபா பசியை அதிகரிக்கச் செய்யும், செரிமான பிரச்னைகளை நீக்கும், நீரிழிவு நோயை குணப்படுத்தும் என இதன் பயன்கள் நீண்டுகொண்டே போவதை யாரும் மறுக்க இயலாது.