
சீரகம் (cumin) சமையலறையில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் ஒன்றாகும். சீரகத்திற்கு தமிழ் மருத்துவத்தில் உடலைச் சீராக்குவது என பொருள் பட சீர்+அகம் -"சீரகம் ' என பெயர் இடப்பட்டது. சீரகம் கால்சியம் சத்து நிறையப் பெற்றது. இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உட்பட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. சீரகத்தில் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கும் வைட்டமின் பி12ம் உள்ளது. சீரகத்தில் பெருஞ்சீரகம், கருஞ்சீரகம், காட்டு சீரகம், நற்சீரகம் என நான்கு வகைகள் உண்டு.
இந்தியா, சீனா, மத்திய தரைக்கடல் நாடுகள், மெக்சிகோ ஆகிய நாடுகளில் சீரகம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஓராண்டில் பயிராகும் தாவர வகையைச் சேர்ந்தது சீரகம். நிறைந்த மருத்துவ குணங்கள் கொண்டதால் ஆசியா, வட ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்க நாடுகளில் சீரகம் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. சீரக எண்ணெய் வாசனை திரவியங்கள் தயாரிக்கவும், மதுவிற்கு சுவையூட்டவும், மருந்து பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
சீரகம் சாப்பிடுவதால் பல உடல்நலப் பயன்கள் உள்ளன. குறிப்பாக, செரிமானத்தை மேம்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல், மாதவிடாய் பிரச்சினைகளை சரி செய்தல், சருமத்தை ஆரோக்கியமாக்குதல் போன்ற நன்மைகள் உள்ளன. அதனால் தான் மிளகாய் வற்றல் மற்றும் மசாலாப்பொருட்களுடன் சீரகம் சேர்க்கப்படுகிறது. சீரகத்தில் பத்தலாடஸ் (pthlades) எனும் பயோ ஆக்டிவ் பொருள் அதிகளவில் இருக்கிறது. இது உடலில் புற்றுநோய் எதிர்ப்பு என்சைம்களை உருவாக்கி 83 சதவீதம் குரோமோசோம் பாதிப்பை தடுக்கிறது என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து தூள் செய்து கொதிக்கும் நீரிலிட்டு அதில் பசும்பால் கலந்து சாப்பிட்டால் உணவுப் பாதையைத் துப்புரவு ஆக்கும். உணவை செரிக்கச் செய்யும், பசியை தூண்டும், மதமதப்பு குறையும். பித்தம் அதிகமாகிவிட்டால் சிலருக்கு வாயில் உமிழ்நீர் ஊறிக் கொண்டே இருக்கும். இதற்கு சீரகத்தை வறுத்து வாயில் ஒதுக்கிக் கொண்டால் உமிழ்நீர் வருவது நின்று விடும்.
சீரகத்தில் இருக்கும் அன்டி ஹைப்பர்டென்சிவ் தன்மை, உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. எண்ணெய் சேர்க்காமல் சீரகத்தை மட்டும் நன்றாக வறுத்து பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த சீரக பொடியை ஒரு ஸ்பூன் எடுத்து தேன் அல்லது வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் கலந்து குடிக்கலாம். சீரகத்தை பொடி செய்து எலுமிச்சை சாறுடன் கலந்து சாப்பிட கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் பித்தக்குமட்டலை தடுக்கலாம்.
தூளாக்கிய சீரகம் மற்றும் தேன், உப்பு, வெண்ணெய் ஆகிய கலவையைக் கொண்டு தேள் கொட்டிய இடத்தில் தடவினால் விஷம் இறங்கும்.
கோடையில் சீரகத் தண்ணீர் குடிப்பது அதிகரித்த உடல் வெப்பநிலையைக் குறைத்து, உடலையும் வயிற்றையும் குளிர்விக்கும். வாயு, அஜீரணம் மற்றும் பிற செரிமான பிரச்சனைகள் குறையும். வளர்சிதை மாற்ற செயல்முறையை துரிதப்படுத்துகிறது. உடலில் சேரும் அழுக்குகள் மற்றும் நச்சுக்கள் நீங்கும். இதை குடிப்பதன் மூலம் கோடையில் உடல் நீரேற்றத்துடன் இருக்கும். மேலும் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
கேரள மக்கள் வீடுகளில் மட்டுமல்ல ஹோட்டல் போன்றவைகளில் கூட சீரகம் கலந்த தண்ணீரை தான் பயன்படுத்தி வருகின்றனர். அதற்கு காரணம் என்ன தெரியுமா? வேகவைத்த சீரகத்திலிருந்து மீதமுள்ள நீர் ஒரு சிறந்த நச்சு நீக்க பானமாக செயல்படுகிறது. நீங்கள் இதை உட்கொள்ளும்போது, அது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் துகள்கள், அழுக்கு மற்றும் பாக்டீரியாக்களை சுத்தப்படுத்துகிறது. இது உங்கள் இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.
செரிமானக் கோளாறுகள் உள்ளவர்களுக்கும், வாயு, அஜீரணம், மலச்சிக்கல், வீக்கம் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கும், வேகவைத்த சீரக நீர் மிகவும் நன்மை பயக்கும். இவர்கள் உணவுக்கு 15 நிமிடங்களுக்குப் பிறகு அதை உட்கொள்ள வேண்டும். வேகவைத்த சீரக நீரில் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், இந்த கலவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. ஏனெனில் இவை இரண்டும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற மருத்துவ குணங்கள் நிறைந்தவை. சளி, பருவகால ஒவ்வாமை போன்றவற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்க இது உதவியாக இருக்கும்.
உங்கள் செரிமானத்தையும் , வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்த, கலோரிகளை வேகமாக எரிக்க, உடலில் குவிந்துள்ள பிடிவாதமான கொழுப்பைக் குறைக்க மற்றும் உங்கள் எடை இழப்பு பயணத்தை துரிதப்படுத்த, உடலில் இருந்து நச்சுகளை நீக்கி, இரத்தத்தை சுத்திகரிப்பதன் மூலம், தோல் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்த, பருக்கள், முகப்பரு, ஒவ்வாமை போன்றவற்றிலிருந்து நிவாரணம் அளிக்க, சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்த என இந்த அனைத்து ஆரோக்கிய நன்மைகளையும் பெற, நீங்கள் செய்ய வேண்டியது, 1 டீஸ்பூன் சீரகத்தை 250 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்த பின்னர் குடிக்கவும். அதேபோல் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நியாபகம் வைத்து சீரகத்தையும் அளவாக அவ்வப்போது எடுத்துக் கொள்ளுங்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)