பெருஞ்சீரகக் கீரைதான் சோம்புக்கீரை என்றும் அழைக்கப்படுகிறது. விட்டமின் ஏ, விட்டமின் சி, ஃபோலேட், ரிபோஃப்ளவின், நியாசின், தையமின், வைட்டமின் பி6, பாந்தனிக் அமிலம், மினரல்ஸ், கால்சியம், பொட்டாசியம், இரும்பு, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், ஜிங்க், காப்பர் என உடலுக்கு தேவையான எண்ணற்ற சத்துக்களைத் தருகிறது சோம்புக்கீரை.
பல்வேறு நோய்களை குணப்படுத்தும் அருமருந்தாக இருக்கும் இதன் இலை மற்றும் விதைகளில் கரோவோவன், ஏபியால், தில்-ஏபியால், ப்ளேவோனாய்டுகள், கௌமெரின்கள், ஸான்தோன்கள் மற்றும் டிரைடெர்பின்கள் என எண்ணற்ற சத்துக்கள் காணப்படுகின்றன. இது பல்வேறு தொற்று நோய்கள், காய்ச்சல், வறட்டு இருமல், சளி, குடல் மற்றும் வயிற்றுப் பிரச்சினைகளை குணமாக்குகிறது.
சோம்புக் கீரை புற்றுநோய் செல்களை தடுக்க உதவும் பைட்டோகெமிக்கல்களைக் கொண்டுள்ளது.
இக்கீரை, உடலில் காணப்படும் அதிக அளவு வெப்பத்தை குறைக்கும். மேலும், வயிற்றில் உள்ள குடல் புழுக்களை அழிக்கும்.
சோம்புக் கீரை வேகவைத்த தண்ணீர் குடிப்பது அஜீரணம் மற்றும் வயிற்று உப்புசத்தை குறைக்க உதவுகிறது. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலியை குறைக்கவும் உதவுகிறது.
சோம்புக் கீரை இலைகள் சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்த உணவாக பயன்படுகிறது. மேலும், உடலின் வளர்சிதை மாற்ற நோய்க்கு மருந்தாக பயன்படுவதோடு, ரத்தத்தில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
சோம்புக் கீரை வயதானவர்களுக்கு ஏற்படும் கெட்டியான நெஞ்சுச் சளியை தளர்த்தி, இருமலையும், சுவாசப் பிரச்சனைகளையும் குணப்படுத்த உதவுகிறது.
சோம்புக் கீரை இலைகளில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது கண் பார்வையை மேம்படுத்துகிறது. எனவே சோம்புக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் கண் சம்பந்தமான பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
சோம்புக் கீரையில் உள்ள டையூரிடிக் பண்புகள், உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும், சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கவும் உதவுகின்றன.
சோம்புக் கீரை கருப்பையில் இருக்கும் அழுக்குகளை சுத்தப்படுத்துவதோடு, மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்கிறது. அதோடு தாய்ப்பால் சுரப்பதையும் அதிகப்படுத்துகிறது. குழந்தைகளின் வயிறு தொந்தரவு பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)