ஃப்ரைட் ரைஸ் பற்றி தெரியும், ஆனால் 'ஃப்ரைட் ரைஸ் சிண்ட்ரோம்' என்றால் என்ன என்றுதானே யோசிக்கிறீர்கள்? இந்த சிண்ட்ரோம் வந்தால் என்ன ஆகும்? ஏன் வருகிறது? என அனைத்தையும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஃப்ரைட் ரைஸ் சிண்ட்ரோம் என்றால் என்ன?
கடைகளில் ஃப்ரைட் ரைஸ் செய்வதைப் பார்த்திருக்கிறீர்களா? ஏற்கனவே சமைத்த சாதத்தை வைத்து புதிதாக செய்வார்கள். அதேபோல், சிலர் வீட்டில் மீதமுள்ள சாதத்தை இரவு முழுவதும் அப்படியே வைத்துவிட்டு, மறுநாள் காலை சூடுபடுத்தி சாப்பிடுவார்கள். இப்படி, சமைத்த சாதம் இரவு முழுவதும் அறை வெப்பநிலையில் இருக்கும்போது, அதில் பேசிலஸ் செரியஸ் (Bacillus cereus) என்ற பாக்டீரியா வளரத் தொடங்கும். இந்த பாக்டீரியா விஷத்தை உற்பத்தி செய்து, உணவை நச்சுத்தன்மை ஆக்கி நம்மை நோய்வாய்ப்படுத்தும். சுருக்கமாகச் சொன்னால், பழைய உணவால் உடல்நலம் மோசமடையும் நிலைதான் ஃப்ரைட் ரைஸ் சிண்ட்ரோம்!
ஃப்ரைட் ரைஸ் சிண்ட்ரோமின் ஆபத்தான அறிகுறிகள் என்னென்ன?
ஃப்ரைட் ரைஸ் அல்லது சரியாகப் பாதுகாக்கப்படாத பழைய சாதம் சாப்பிட்ட பிறகு, உங்களுக்கு இந்த அறிகுறிகள் வந்தால், நீங்கள் ஃப்ரைட் ரைஸ் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டிருக்கலாம்:
கடுமையான வயிற்று வலி
வயிற்றுப்போக்கு
வாந்தி மற்றும் குமட்டல்
காய்ச்சல்
கண் வலி
இந்த அறிகுறிகள் தீவிரமானால், உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.
20 வயது இளைஞரின் மரணம்:
2008 ஆம் ஆண்டில், ஒரு 20 வயது இளைஞர், அறை வெப்பநிலையில் 5 நாட்களுக்கு வைக்கப்பட்டிருந்த பாஸ்தாவை சாப்பிட்டதால் உயிரிழந்தார். இது ஃப்ரைட் ரைஸ் சிண்ட்ரோம் காரணமாக நிகழ்ந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம். சமைத்த உணவை முறையாகப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துகிறது.
அப்படியிருக்க, மீதமுள்ள சாதத்தை என்னதான் செய்வது? இதோ எளிய வழிகள்!
சமைத்த சாதத்தை 2 மணி நேரத்திற்கு மேல் அறை வெப்பநிலையில் வைத்திருக்கக் கூடாது.
மீதமுள்ள சாதத்தை மூடிய பாத்திரத்தில் உடனடியாக குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுங்கள்.
பழைய சாதத்தில் தண்ணீர் ஊற்றி சாப்பிட்டால், வெள்ளை சாதமாக இருந்தால் இரவே தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் சாப்பிடலாம். ஆனால், தண்ணீர் இல்லாத சாதத்தை இரவு முழுவதும் வைத்துவிட்டு காலையில் சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
மீண்டும் சூடாக்க வேண்டுமானால், குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்த உடனேயே சூடுபடுத்துவதைத் தவிர்த்து, சிறிது நேரம் அறை வெப்பநிலையில் வைத்து பின்னர் சூடுபடுத்தவும்.
உங்கள் உணவுப் பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்தி, 'ஃப்ரைட் ரைஸ் சிண்ட்ரோம்' ஆபத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் மக்களே!
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)