
சீரகம்-தனியா-பெருஞ்சீரகம் (Cumin-Coriander-Fennel) ஆகிய இந்த மூன்று விதைகளின் கலவை பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த மூலிகைக் கலவையாகும். இம்மூன்றையும் கலந்து டீ போட்டு தொடர்ந்து இரண்டு மாதங்கள் அருந்தி வந்தால் ஜீரண சக்தி, நோயெதிர்ப்புச் சக்தி மற்றும் மெட்டபாலிச விகிதம் அதிகரிக்கும். இரைப்பை குடல் இயக்கங்கள் மேம்பாடடைந்து, உடலில் வீக்கங்கள் குறையும். உடலுக்குள் உறிஞ்சப்படும் ஊட்டச் சத்துக்களின் அளவும் அதிகரிக்கும்.
ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த மூன்று விதைகளும்...
வாதம், பித்தம், கபம் போன்றவை சம அளவில் இருக்க உதவுகின்றன. குறிப்பாக இவை ஜீரணத்திற்குத் தேவையான உஷ்ணத்தின் அளவை அதிகரிக்கச் செய்கின்றன. ஜீரணத்திற்கு உதவக் கூடிய என்ஸைம்களின் உற்பத்தி அளவை உயர்த்தி, உணவுகளை உடைக்கவும், சக்தியை உடலுக்குள் உறிஞ்சவும் பக்க பலமாய் நிற்கின்றன. தேவைக்கதிகமாக உணவு உட்கொள்வதால் உண்டாகும் உப்புசம் மற்றும் வாய்வு உண்டாவதைக் குறைக்கும். மல்லி விதை மற்றும் பெருஞ்சீரகம், வயிற்றில் வீக்கம், அசிடிட்டி, மலச்சிக்கல் மற்றும் மந்தமான ஜீரணம் போன்ற கோளாறுகள் வருவதைத் தடுக்கும்.
CCF டீ இயற்கை முறையில் உடலிலுள்ள நச்சுக்களை நீக்க கல்லீரல் மற்றும் கிட்னிக்கு உதவி புரியும். அதிகளவு யூரிக் ஆசிட்டை குறைக்கவும், உட்புற வீக்கங்களை குணமாக்கவும் உதவும். பெண்கள் இந்த டீயை குடிப்பதால் ஈஸ்ட்ரோஜென் என்னும் ஹார்மோன் சுரப்பின் அளவு சமநிலைப்படும்.
மல்லி விதை மற்றும் சீரகம், சமநிலையற்ற ஹார்மோன் சுரப்பினால் உண்டாகும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன. பெருஞ்சீரகம் வீக்கங்களைக் குறைக்கவும், ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் உதவி புரிவதன் மூலம் ஹார்மோன் உற்பத்தி தேவையான அளவு நடைபெறுகிறது. உடலில் நீர்ச்சத்து குறையாமல், யூரிக் ஆசிட் அளவை சமநிலைப்படுத்தவும் இந்த டீ உதவி புரிகிறது.
CCF டீயினால் ஜீரணம், மெட்டபாலிஸம் மற்றும் ஊட்டச் சத்துக்கள் உறிஞ்சப்படும் செயல்பாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இதன் மூலம் அதிகளவு கொழுப்புகள் எரிக்கப்படுகின்றன. பெருஞ்சீரகம், மல்லி விதைகளின் டையூரிக் குணம், அதிகளவு நீர் மற்றும் வீக்கங்களைக் குறைக்கும். இதனால் உடல் எடை குறைந்து சமநிலை பெரும்.
சீரகம்-தனியா-பெருஞ்சீரகம், இந்த மூன்று விதைகளுக்கும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் உண்டு. இவற்றில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் அதிகம் உள்ளன. இதில் உள்ள தைமோகுயினோன் (Thymoquinone) என்ற பயோஆக்ட்டிவ் கூட்டுப்பொருள், ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கவும்,
ஜீரணப் பாதை மற்றும் குடலின் அடிப்பகுதிகளில் உள்ள வீக்கங்களை இதமான முறையில் குணப்படுத்தவும் உதவுகிறது. மேலும் வாய்வு சம்பந்தப்பட்ட கோளாறுகளை நீக்கவும் உதவி புரிகிறது. இந்த டீயில் உள்ள அனெதோல் (Anethole) என்ற கூட்டுப்பொருள் தசைகளை தளர்வுரச் செய்து வீக்கங்களை குணப்படுத்த உதவுகிறது.
இந்த ஐந்து நன்மைகளால் உடல் நல்ல ஆரோக்கியம் பெறுகிறது. எளிதில் தயாரிக்கக் கூடிய இந்த டீயை நாமும் அருந்தி நலம் பல பெறுவோம்.
(முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.)