‘இந்தியன் கூஸ்பெரி’ எனப்படும் ஆம்லா(முழுநெல்லிக்காய்)வில் உடலுக்குத் தேவையான அத்தனை ஊட்டச் சத்துக்களும் உள்ளதாகக் கூறுவதுண்டு. ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் டாக்டரைப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது எனவும் ஒரு பழமொழி உண்டு. அந்த ஆப்பிளுக்கு இணையானது ஆம்லா. இதில் ஆரஞ்சு பழத்தில் இருப்பதை விட அதிகமாக வைட்டமின் C சத்து உள்ளது. ஒரு முழு வளர்ச்சியடைந்த மனிதருக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் 600 mg வைட்டமின் C அளவை விட அதிகமாகவே ஒரு ஆம்லா பழத்தில் வைட்டமின் C சத்து உள்ளது. இது தவிர்த்து வைட்டமின் A, B, E மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து போன்ற கனிமச் சத்துக்களும் ஆம்லாவில் உள்ளன. ஆம்லாவை காலையில் வெறும் வயிற்றில் சிறிது ஆர்கானிக் வெல்லத்துடன் சேர்த்து உண்ணும்போது, இதிலுள்ள ஊட்டச்சத்துக்களை முழுமையாகப் பெறுவதுடன் மேலும் பல ஆரோக்கிய நன்மைகளும் உடலுக்குக் கிடைக்கின்றன. அவை என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. நோயெதிர்ப்புச் சக்தி: ஆம்லாவிலுள்ள அதிகளவு வைட்டமின் C நோயெதிர்ப்புச் சக்தியை மிகவும் வலுவடையச் செய்யும். வெல்லத்திலுள்ள இரும்புச் சத்தும் மற்ற கனிமச் சத்துக்களும் உடலுக்குக் கிடைக்கும்போது உடல் பலத்தில் சிறிதும் குறைவிருக்காது. இவை இரண்டையும் சேர்த்து தினமும் உட்கொள்ளும்போது நோயெதிர்ப்பு மண்டலம் அதிகளவு வலுவடைந்து நோய்க் கிருமிகள் மற்றும் ஃபுளூ போன்ற நோய்கள் அண்ட விடாமல் உடலைப் பாதுகாக்கும்.
2. ஜீரண மண்டல ஆரோக்கியம்: ஆம்லாவில் நார்ச்சத்து அதிகம். இது குடல் இயக்கம் சிறப்பாக நடைபெறவும், மலச்சிக்கல் நீங்கவும் உதவி புரியும். வெல்லம் ஒரு சிறப்பான நச்சு நீக்கி. இது ஜீரணப் பாதையிலுள்ள நச்சுக்களை இயற்கை முறையில் வெளியேற்ற உதவி புரியும். நெல்லிக்கனியும் பனை வெல்லமும் இணைந்து செயலாற்றும்போது எந்தவிதக் கோளாறுமின்றி செரிமானம் நடைபெறும். அடிக்கடி ஜீரணக் கோளாறுகளை சந்தித்து வருபவர்களுக்கு, நிவாரணம் பெற இந்த உணவு ஒரு வரமாகும்.
3. சரும ஆரோக்கியம்: சருமத்தின் ஆரோக்கியத்தை சீர்குலைத்து வயதுக்கு மீறிய வயோதிகத் தோற்றம் பெறச் செய்யும் ஃபிரீரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவும் ஆம்லாவிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள். அதேநேரம் வெல்லத்தில் உள்ள இயற்கையான இனிப்புச் சத்து சருமத்தை நீரேற்றத்துடன் வைக்கவும் அதன் எலாஸ்ட்ரிசிட்டித் தன்மையைப் பராமரிக்கவும் செய்யும். வெல்லம் ஆம்லா இரண்டையும் தொடர்ந்து உட்கொள்ளும்போது சருமத்திலுள்ள கறைகள் நீங்கி ஆரோக்கியம் நிறைந்த சருமம் மபளபளப்புப் பெறும்.
4. சக்தியின் அளவு அதிகரிக்க: வெல்லத்தில் உள்ள இயற்கையான கார்போஹைட்ரேட் உடலுக்குள் சக்தி உற்பத்தியாக உதவும். ஆம்லாவிலுள்ள வைட்டமின் மற்றும் மினரல்கள் உடம்பிலுள்ள ஒட்டுமொத்த சக்தியின் அளவை உயர்த்த உதவும். நாள் முழுக்க எனர்ஜியுடன் வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் உள்ளவர்களுக்கு இந்த இரண்டு உணவுகளையும் சேர்த்து உண்பது நல்ல பலன் தரும்.
5. எடை பராமரிப்பு: உடல் எடையை குறைத்தே ஆக வேண்டும் என்ற தேவையுள்ளவர்களுக்கு இந்த இரண்டு உணவுகளின் கூட்டணி நல்ல ரிசல்ட் தரும். ஆம்லா சிறப்பான மெட்டபாலிசத்துக்கு உதவி புரிந்து அதிகளவு கொழுப்புகளை எரியச் செய்யும். வெல்லம் மேலும் மேலும் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற ஆவலைத் தடுக்கவும் பசியுணர்வை குறைக்கவும் உதவும். இவை இரண்டும் சேர்ந்து எடை குறைய சிறந்த முறையில் உதவி புரியும். வெல்லம், ஆம்லா இரண்டையும் சேர்த்து சட்னி செய்து அல்லது சிறு சிறு துண்டுகளாக்கி காலை உணவுடன் சேர்த்து உண்ணலாம்.