
பச்சை மிளகாய் உங்கள் ஆரோக்கியத்திற்கு உதவும் என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும். வயிற்று புண், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பச்சை மிளகாயை சாப்பிடக் கூடாது என்று மருத்துவர்கள் வலியுறுத்தும் போது, இந்த செய்தி ஆச்சரியப்படுத்தும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு, இது பச்சை மிளகாய்க்கும் சரியாக பொருந்தும்.
நல்ல ஆரோக்கியத்திற்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது அவசியம். பச்சை மிளகாய் நோய் எதிர்ப்புச் சக்தியை கூட்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
பச்சை மிளகாயில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகின்றன.
பச்சை மிளகாயில் உள்ள கேப்சைசின் என்ற மூலப்பொருள், உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இந்த மூலப்பொருள் உடலில் வெப்பத்தை உருவாக்கி, கொழுப்பு எரியும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. மேலும் கேப்சைசின் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இது பசியைக் கட்டுப்படுத்தி அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்க உதவுகிறது. இதனால் விரைவான எடை இழப்புக்கு உடல் தயாராகிறது.
மேலும், பச்சை மிளகாயில் கலோரிகள் குறைவாக இருப்பதால், எடையைக் கட்டுப்படுத்த முயற்சிப்பவர்களுக்கு இது சரியான உணவாக அமைகிறது.
பச்சை மிளகாயில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. இவை இறந்த சரும செல்களை நீக்கி புதிய செல்களை உற்பத்தி செய்கின்றன. இதனால் வயதாகும் தன்மை குறைகிறது. இது தவிர, வைட்டமின் ஏ பார்வையை மேம்படுத்துகிறது மற்றும் கண்புரை போன்ற பிரச்னைகளைத் தடுக்கிறது. வைட்டமின் சி சளி, இருமல் மற்றும் பிற தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
பச்சை மிளகாயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உடலை பாக்டீரியா மற்றும் வைரஸ்களிடமிருந்து பாதுகாக்கின்றன.
பச்சை மிளகாயில் காணப்படும் வேதிப் பொருட்கள் செரிமான நொதிகளின் சுரப்பை அதிகரித்து உணவின் செரிமானத்தை மேம்படுத்துகின்றன. இது வாயு, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளைப் போக்க உதவுகிறது. இது தவிர, பச்சை மிளகாயில் உள்ள நார்ச்சத்து குடல்களைச் சுத்தப்படுத்த உதவுகிறது. இது செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
பச்சை மிளகாயை உட்கொள்வது உங்கள் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளைத் தருகிறது. பச்சை மிளகாயை தொடர்ந்து உட்கொள்வது நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடலை தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கின்றன. இவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து இதயத்தைப் பாதுகாக்கின்றன.
பச்சை மிளகாயின் காரத்தன்மையால் ஏற்படும் பக்க விளைவுகளை தவிர்க்க, அதை சீரான அளவில் உட்கொள்ள வேண்டும். பச்சை மிளகாயை சரியான அளவில் உட்கொள்ளும்போது, உங்கள் உடலுக்கு சரியான அளவு ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. பச்சை மிளகாய் காரத்தை கூட்டுவதற்கு மட்டுமல்லாமல், சுகாதார நன்மைகளுக்காகவும் பயன்படுத்தலாம்.
(முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும், பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.)