
உச்ச கட்ட மாம்பழ சீசன் இது. அனைவர் வீடுகளிலும் மாம்பழத்தை தோல் சீவி சதைப் பகுதியை சாப்பிட்டுவிட்டு தோலையும் கொட்டையையும் தூர எறிவது வழக்கம். மாம்பழத் தோலும் உண்ணக் கூடியதுதான்; அதில் நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், மாங்கிஃபெரின், குர்செடின் மற்றும் கரோடினாய்ட்ஸ் போன்ற பயோ ஆக்ட்டிவ் கூட்டுப்பொருட்கள் உள்ளன என்பது தெரிந்தால் யாரும் தோலைத் தூக்கி வீச மாட்டார்கள் இனி.
மாம்பழத் தோலை உட்கொள்ள விரும்புபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன.
1) மாம்பழத்தில் பல வகை உண்டு. சில வகையில், தோல் தடியாகவும், கசப்பு சுவை கொண்டும் இருக்கும். சிலதில் பிசின் ஒட்டிக் கொண்டிருக்கும். தோலை மெல்வது பலருக்கு பிடித்தமானதாயிருக்காது.
2) நச்சுப் படர்க்கொடி (poison ivy) மூலம் மாம்பழத் தோல் மீது சிறிதளவு நச்சு இறங்கியிருக்க வாய்ப்புண்டு. அது சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கும். தோலை உரிக்கும்போது கையில் அரிப்போ தடிப்போ உண்டானால் அதை விலக்கி விடுவது நலம்.
3) வழக்கமான முறையில் வளர்க்கப்பட்ட மரங்களிலிருந்து விளையும் மாம்பழங்களின் தோலில் பூச்சி மருந்துகளின் மிச்சம் மீதி ஒட்டியிருக்க வாய்ப்புண்டு. எனவே ஆர்கானிக் பழங்களை வாங்கி, கழுவி விட்டு உபயோகிப்பது நலம்.
பூச்சி மருந்து முற்றிலும் நீங்க பழத்தை எந்தெந்த முறைகளில் கழுவலாம் என்பதைப் பார்ப்போம்.
1) ஒரு டீஸ்பூன் உப்பு மற்றும் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்த நீரில் மாம்பழத்தை 15 நிமிடம் முக்கி வைத்து, பின் நன்கு கழுவி விடலாம்.
2) ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா கலந்த நீரில் மாம்பழத்தை 15 நிமிடம் முக்கி வைத்து, பின் ரன்னிங் வாட்டரில் நன்கு கழுவி விடலாம்.
3) ஒரு பங்கு வினிகரில் மூன்று பங்கு தண்ணீர் கலந்து அதில் மாம்பழத்தை 20 நிமிடம் முக்கி வைத்து, பின் நன்கு கழுவி விடலாம்.
4) மெல்லிய பிரஷ் அல்லது துணி வைத்து மிருதுவாக தோலில் ஸ்கிரப் செய்து, பின் ரன்னிங் வாட்டரில் நன்கு கழுவி விடலாம்.
நன்மைகள்:
மாம்பழத் தோல் ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி ஏஜிங் குணங்கள் கொண்டது. இதிலுள்ள நார்ச்சத்து ஜீரணம் சிறப்பாக நடைபெறவும், இரைப்பை குடல் இயக்கங்கள் சிறந்த முறையில் செயல்படவும் உதவும்.
கரோடினாய்ட்ஸ் மற்றும் வைட்டமின் E சருமம் ஆரோக்கியம் பெறவும், மினுமினுக்கவும் உதவுகின்றன.
மாம்பழத் தோலின் சாறு இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவும்.
எவ்வாறு பயன்படுத்தலாம்?
இரண்டு பழுத்த மாம்பழங்களின் தோலுடன், இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல் உப்பு சேர்த்து கொரகொரப்பா அரைத்தெடுத்து, சிறிது லெமன் ஜூஸ் பிழிந்து, கடுகு கறிவேப்பிலை தாளித்துக் கொட்டினால் சுவையான சட்னி கிடைக்கும்.
உலர்ந்த தோலைப் பவுடராக்கி ஸ்மூத்திகளில் சேர்க்கலாம்.
ஒரு கிளாஸ் குடி நீரில் ஒரு துண்டு மாம்பழத் தோலைப் போட்டு வைத்து இன்ஃப்யூஸ்ட் வாட்டராக அருந்தலாம்.
(முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும், பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.)