நுங்கு, தர்பூசணி போன்ற சில வகை உணவுப் பொருட்கள் ஒரு குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்கக் கூடியவை. அதே போன்றதுதான் பலா பழமும். சம்மர் சீசனில் மட்டுமே கிடைக்கும். சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த பழம். எல்லோராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியது. இப்பழத்திலுள்ள ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பலா பழத்தை ஊட்டச்சத்துக்களின் பவர் ஹவுஸ் என்றே கூறலாம். உடலுக்குத் தேவையான பல வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்த பழம். வைட்டமின் C, வைட்டமின் B6, பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச் சத்துக்கள் அடங்கியது.
இதிலுள்ள வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை வலுவடையச் செய்கின்றன. தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன. பலா பழத்தில் உள்ள டயட்டரி நார்ச்சத்தானது ஆரோக்கியமான செரிமானத்துக்கு உதவுகிறது. உட்கொண்ட உணவு ஜீரணப் பாதை வழியே சிரமமின்றிப் பயணிக்கவும், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்து, எடைக் குறைப்பிற்கும் இது உதவுகிறது.
பழுக்காத பலாவின் சதைப் பகுதி மாமிசத்துக்கு இணையான சுவையும் மிருதுத்தன்மையும் கொண்டது. ஊட்டச் சத்துக்களும் அதிகம் உள்ளதால் மாமிசத்துக்குப் பதிலாக இதை உண்பது சரியான தேர்வாகும். பலாவின் இளம் பிஞ்சுக் காயை உபயோகித்து கூட்டு, பொரியல் செய்தும் உண்ணலாம்.
பழுத்த பலா சுளைகள் நல்ல இனிப்பு சுவை கொண்டது. இதிலுள்ள நார்ச்சத்தும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் கெட்ட கொழுப்புகளையும், உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும் வல்லமை உடையவை. இதன் மூலம் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவி புரிகின்றன.
வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகின்றன. சரும ஆரோக்கியத்திற்குத் தேவையான கொலாஜன் உற்பத்தியைப் பெருகச் செய்கின்றன; வயதான தோற்றமளிக்கச் செய்யும் அறிகுறிகளையும் நீக்குகின்றன. பலா பழத்திலுள்ள கார்போஹைட்ரேட்கள் உடலுக்குத் தேவையான சக்தியை அளிக்கின்றன. பலா பழத்தில் தொண்ணூற்றியிரண்டு சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது.
இது கோடைக் காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைக்கவும், நச்சுக்களை உடலிலிருந்து வெளியேற்றவும் உதவுகிறது. பலா பழத்தின் கொட்டைகளையும் வேக வைத்து உண்ணலாம்; சாம்பார் போன்ற குழம்புகளிலும் சேர்த்து சமைக்கப் பயன்படுத்தலாம்.
இத்தனை ஆரோக்கிய நன்மைகள் கொண்ட பலா பழத்தை சீசன் முழுக்க அடிக்கடி வாங்கி அளவோடு உட்கொண்டு நலம் பெறுவோம்.