மல்லிகைப்பூக்களின் மணத்துக்கு மயங்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மல்லிகைப் பூவை, பெரும்பாலும் தலையில் சூடிக் கொள்ளவும், கடவுள் வழிபாட்டிற்கும் பயன்படுத்துவோம். அதையும் தாண்டி, இதில் இருக்கும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் பற்றி நம்மில் பலபேருக்குத் தெரியாது என்பதே நிதர்சன உண்மை. அழகு, ஆன்மிகம் என வெளிப்புறத்தில் பயன்படுத்தும் இந்த மல்லிகைப் பூ, நம் உடலுக்கு உள்ளே செய்யும் நன்மைகளைப் பற்றி இந்தப் பதிவில் அறிந்து கொள்ளலாம்.
மல்லிகைப்பூவின் ஆரோக்கிய நன்மைகள்:
மலர் மருத்துவத்தில் மல்லிகைப் பூ முக்கிய பங்காற்றுகிறது. சித்த மருத்துவத்தில் பலவித நோய்களை சரிசெய்ய மல்லிகைப் பூ மொட்டு பயன்படுத்தப்படுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். மல்லிகைப் பூவானது பாலியல் உணர்வைத் தூண்டவல்லது என்றும், இது தம்பதிகளின் இடையே இணக்கத்தை ஏற்படுத்த பயன்படுவதாகவும் உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நோய் எதிர்ப்பு சக்கிதியை அதிகரிக்கவும், மூக்கடைப்பு, இருமல் போன்ற பிரச்னைகளை சரிசெய்யவும் மல்லிகைப்பூ பயன்படுகிறது.
மல்லிகைப் பூவை அரைத்து அதனை உடலில் வீக்கம், அரிப்பு, புண்கள், காயம்பட்ட இடங்கள், கொப்புளங்கள், எரிச்சல் உள்ள இடங்களில் பூசி வர அவை எளிதில் குணமடையுமாம்.
மல்லிகைப்பூ பானம்:
மல்லிகைப் பூவை தண்ணீரில் கொத்திக்கவைத்து, அதை வெறுமனேயோ அல்லது பனங்கற்கண்டு, தேன் கலந்தோ குடித்து வந்தால் கண் மற்றும் சிறுநீரகம் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும் என்றும், வயிற்றில் உள்ள குடல் புழுக்கள் அழிந்து விடும் என்றும், செரிமானக் கோளாறுகளால் ஏற்படும் வாய் மற்றும் வயிற்றுப் புண்களை குணமாக்கும் என்றும் ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும், மல்லிகைப்பூ கொதிக்க வைத்த நீரைப் பருகுவதால் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் சரிசெய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
மல்லிகைப்பூ பொடி:
மல்லிகைப்பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொள்ளலாம். இந்தப் பொடியை சுடுதண்ணீரில் கலந்து டீ-யாக பருகினால் சிறுநீரக கற்கள், நுரையீரல் பாதிப்பு போன்றவற்றை சரி செய்கிறதாம். இதனை தேன் கலந்து பருகினால், ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் நரம்புத்தளர்ச்சி நீங்குவதோடு, உடலுக்கு புத்துணர்வு தருவதாகவும் அறியப்படுகிறது.
மல்லிகைப்பூ எண்ணெய்:
மல்லிகைப்பூ எண்ணெய் ஆனது கர்ப்பபையை வலுவூட்டுவதோடு கர்ப்பப்பையில் ஏற்படும் புண்கள் மற்றும் கட்டிகளை சரிசெய்யவும் பயன்படுத்தப்படுகிறதாம். அதோடு, இது பிரசவத்தின் போது ஏற்படும் வலியைக் குறைத்து சுகப்பிரசவத்திற்கு வழிவகுப்பதாகவும் சொல்லப்படுகிறது.
சருமத்தில் உள்ள நாள்பட்ட தழும்புகள், அரிப்பு, எரிச்சல், புண்கள் போன்றவற்றையும் குணப்படுத்த மல்லிகைப்பூ எண்ணெய் உதவுகிறது.
மேலும், பெண்கள் மல்லிகைப்பூவை தலையில் சூடிக்கொள்வதால் மன அழுத்தம் மற்றும் உடல் சூட்டை குறைக்க முடியுமாம். அதே, ஆண்களாக இருந்தால் மல்லிகைப்பூ வாசனை திரவியங்களை நுகர்வதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாமாம்.
மல்லிகைப்பூ வாசனை அல்லது மல்லிகைப்பூவானது சிலபேருக்கு தலைவலி, ஒவ்வாமை போன்ற சில அசௌகரியங்களையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியமானது.