பல்பம் எனப்படும் ஸ்லேட்டு பென்சிலை பார்த்தாலே நாவில் எச்சி ஊறும் நபர்கள் ஏராளம். வயது வித்தியாசமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஸ்லேட்டு பென்சிலை ரசித்து ருசித்து உண்பார்கள். ஆனால், இந்த ஸ்லேட்டு பென்சிலை விரும்பி உண்ண வேண்டும் என்ற எண்ணம் ஏன் தோன்றுகிறது? இதை உண்பதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன? என்பதனைப் பற்றி என்றைக்காவது நீங்கள் யோசித்தது உண்டா? இதற்கான விடையை இந்தப் பதிவில் காணலாம்.
பொதுவாக, ஸ்லேட்டு பென்சில் கால்சியம் கார்பனேட் என்ற வேதிப்பொருள் மற்றும் சுண்ணாம்பு சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
ஒரு ஆய்வின்படி, ஆண்களை விட பெண்களாலேயே ஸ்லேட்டு பென்சில் அதிகமாக விரும்பி உண்ணப்படுகிறது என்றும், அதிலும் குறிப்பாக, கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த ஸ்லேட்டு பென்சிலை அதிகம் விரும்பி உண்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்லேட்டு பென்சிலை ஏன் உண்ணத் தோன்றுகிறது?
நமது உடலில் வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச் சத்து போன்றவை குறைவாக இருந்தால் ஸ்லேட்டு பென்சிலை உண்ண வேண்டும் என்ற எண்ணம் தோன்றுமாம். கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் ஏற்றதாழ்வுகளால் ஸ்லேட்டு பென்சில், சாம்பல் போன்ற பொருள்களை உண்ண வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதோடு, மாதவிடாய் காலங்களில், பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும், சத்துகுறைபாடுகளாலும் ஸ்லேட்டு பென்சிலை உண்ண வேண்டும் என்கிற ஆசை எழுவதுண்டாம். பெரும்பாலும், தைராய்டு, ரத்த சோகை, கால்சியம் சத்து குறைபாடு கொண்ட சில பெண்களும் ஸ்லேட்டு பென்சிலை விரும்பி உண்பார்கள் என்றும் கூறப்பட்டுகிறது. வயிற்றில் பூச்சி, புழுக்கள் வளர்வதும் ஒருவகையில் குழந்தைகளும், பெரியவர்களும் ஸ்லேட்டு பென்சில் உண்பதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
ஸ்லேட்டு பென்சிலை உண்பதால் ஏற்படும் தீமைகள்:
ஸ்லேட்டு பென்சிலை தொடர்ந்து உண்டால், சிறுநீரக கற்கள் உருவாகவும் கல்லீரல் பாதிப்படையவும் வாய்ப்புள்ளது.
ஸ்லேட்டு பென்சில்கள் ஹீமோகுளோபின் அளவைக் குறைக்கின்றன.
ஸ்லேட்டு பென்சிலை உண்பவர்கள், வளரும் குழந்தைகள் உட்பட யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதாக அறியப்படுகிறது. அதோடு, இதனை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடும்போது, அவர்களோடு சேர்ந்து வயிற்றில் வளரும் குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல பக்க விளைவுகளால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இது செரிமானக்கோளாறு, பசியின்மை, வயிற்று வலி, வாந்தி, மலச்சிக்கல் மற்றும் குடலில் அடைப்பு போன்ற அசௌகரியங்களை ஏற்படுத்துகிறது. இவை நாள்பட , வயிற்றுக்கும் குடலுக்கும் தீங்கு விளைவிக்கும்.
ஸ்லேட்டு பென்சிலை மென்று சாப்பிடும்போது, அது வாயின் உட்புறத்தை சேதப்படுத்துகிறது. இதனால், நாக்கில் உள்ள சுவை மொட்டுகளிலும், பற்கள், தாடைகள் போன்ற வாயின் பிற பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக, காரமான, சூடான அல்லது புளிப்பு உணவுகள் மற்றும் சூடான, குளிர்ச்சியான பானங்களை உட்கொள்ள முடியாமல் போகின்றது.
தவிர்க்க சில வழிமுறைகள்:
முதலில், ஸ்லேட்டு பென்சிலை சாப்பிடுவதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும்.
சத்து குறைபாடு மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் போன்றவை காரணங்களாக இருந்தால் மருத்துவரை அணுகலாம். அல்லது இரும்பு, கால்சியம் சத்து மற்றும் குறைபாடுடைய சத்துக்கள் நிறைந்த உணவு பொருட்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் ஸ்லேட்டு பென்சில் மீதான மோகத்தில் இருந்து விடுபடலாம்.
வயிற்றில் உள்ள கிருமிகளை அழிப்பதன் மூலமும் இதிலிருந்து விடுபடலாம்.
இவற்றையெல்லாம் தாண்டியும், ஸ்லேட்டு பென்சில்களை உண்பதை நிறுத்த முடியவில்லை என்றால், மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியமானது.