நம்மை சுற்றியுள்ள இடங்களில் எளிமையாக காணக்கூடிய வேப்பம்பூ பலவிதமருத்துவ குணங்களை கொண்டது. இப்போது கிடைக்கும் வேப்பம்பூவை சேமித்து வைத்துக் கொள்ள வருடம் முழுக்க உபயோகிக்கலாம்.
இந்த வேப்பம்பூவை சுத்தம் செய்து விட்டு நெய்யில் வறுத்து பொடி செய்து கொண்டு சிறிது உப்பு சேர்த்து சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட வயிற்று உப்புசம் குறையும்.
வயிறு எரிச்சல்,பொருமல் போன்றவற்றை வேப்பம்பூ ரசம் சரி செய்யும். வேப்பம்பூ ரசம், வேப்பம்பூ பச்சடி, வேப்பம்பூ துவையல் என விதம்விதமாக சமைத்து உண்ண உடல் ஆரோக்கியம் மேம்படும்.
செரிமானத்தை மேம்படுத்தி குடல் இயக்கத்தை மேம்படுத்துவதில் வேப்பம்பூ பெரும் பங்கு வகிக்கிறது. வயிற்றில் பூச்சிகள், சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு வேப்பம்பூ நல்ல நிவாரணம் தரும்.
அரிப்பு , சருமத்தில் ஏற்படும் அலர்ஜி போன்றவைகளுக்கு வேப்பம்பூவை விழுதாக அரைத்து பூசலாம்.
அரோமாதெரபியில் வேப்பம்பூவிற்கு முக்கிய பங்கு உண்டு. குளிக்கும் தண்ணீரில் வேப்பம்பூவை சேர்த்து ஊறவிட்டு குளிக்க சரும பிரச்சனைகள் தீரும்.
நீரிழிவு நோயாளிகள் வாரத்தில் ஒருமுறை வேப்பம்பூவை சேர்த்துக் கொள்ள ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைய உதவும்.
தேனில் பலவகை உண்டு. அதில் வேப்பம்பூ தேனும் ஒரு வகை. இந்த வகை தேனை ஆயுர்வேதத்தில் நிறைய உபயோகபடுத்துகிறார்கள். காயத்தை குணப்படுத்தவும் இந்த தேன் பயன்படுத்தபடுகிறது.
வேப்பம்பூ ரத்தத்தை சுத்தப்படுத்தும். கல்லீரல் பிரச்சனைகளை சரிசெய்யும்.
வேப்பிலை, வேப்பம்பூ இரண்டையும் சுத்தப்படுத்தி அரைத்து , தலையில் ஊறவிட்டு குளிக்க தலையில் அரிப்பு, பேன், பொடுகு தொல்லை நீங்கும்.
காய்ந்த வேப்பம்பூவை பொடியாக்கி மோரில் கலந்து குடித்தால் உடலின் கழிவுகள் நீங்கும். வயிற்று பூச்சிகள் அழியும்.
வேப்பம்பூ பொடியை தண்ணீரில் கலந்து அல்லது மோரில் கலந்து குடித்து வந்தால் கொழுப்புகள் கரைய ஆரம்பிக்கும். குறிப்பாக வயிற்று பகுதியில் இருக்கும் கொழுப்புகள் கரையும்.
வறண்ட சருமத்தினர் புதிய வேப்பம்பூவை அரைத்து பூசிக் கொள்ள சருமம் மென்மையாகும்.
உடல் எடை குறைய புதிதாக கிடைக்கும் வேப்பம்பூவை விழுதாக அரைத்து கொண்டு அதனுடன் 1டீஸ்பூன் தேன், எலுமிச்சை சாறு கலந்து வெறும் வயிற்றில் குடிக்க உடல் எடை குறையும்.
வேப்பம்பூவை, பன்னீர், சந்தனம் சேர்த்து அரைத்து வியர்க்குரு, வேனல் கட்டி உள்ள இடத்தில் தடவி வர கட்டி, வியர்க்குரு குணமாகும்.
வேப்பம்பூவை காயவைத்து தணலில் இட்டு தூபம் போட கொசு தொல்லை நீங்கும். கபம், சளி இருந்தால் வேப்பம்பூவை போட்டு ஆவி பிடிக்க நோய்த்தொற்று ஏற்படாது.
இவ்வாறு பலவிதங்களில் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வேப்பம்பூவை 'வேண்டாம்' என்று ஒதுக்காதீர்கள்!
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.