டார்க் சாக்லேட் உண்பதால் நம் உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது பலருக்கும் தெரிந்ததே. அது எந்தெந்த நோய்களைக் குணமாக்கும், அதை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை சற்று விரிவாக இப்பதிவில் பார்க்கலாம்.
70-85 சதவிகிதம் கோகோ அடங்கிய நூறு கிராம் டார்க் சாக்லேட்டில் 11 கிராம் நார்ச்சத்து, 66 சதவிகிதம் இரும்புச் சத்து, 57 சதவிகிதம் மக்னீசியம், 196 சதவிகிதம் காப்பர், 85 சதவிகிதம் மாங்கனீஸ் மற்றும் பொட்டாசியம், பாஸ்பரஸ், சிங்க், செலீனியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. ஒரு நாளைக்கு 20-30 கிராம் டார்க் சாக்லேட் உட்கொள்ளலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. இதிலுள்ள ஒரு பயோஆக்ட்டிவ் கூட்டுப் பொருளானது சூரியக் கதிர்களால் சரும ஆரோக்கியம் கெடாமல் பாதுகாக்கிறது.
சருமத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம், சருமத்தின் அடர்த்தி மற்றும் நீரேற்றம் போன்றவை அதிகரிக்க பெரிதும் உதவி புரிகிறது டார்க் சாக்லேட்.
டார்க் சாக்லேட்டில் உள்ள ஃபிளவனால் எபிகேட்டச்சின், வீக்கங்களைக் குறைக்கவும், ஃபிரீ ரேடிக்கல்களினால் உண்டாகும் செல் சிதைவைத் தடுக்கவும், நீரிழிவு நோயைக் குணப்படுத்தவும் உதவுகிறது. ஃபிளவனால் மூளைக்குச் செல்லும் இரத்தத்தின் அளவை அதிகரிக்கச் செய்து மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதனால் அல்ஸிமெர், பார்கின்சன்ஸ் போன்ற வியாதிகள் வரும் அபாயம் தடுக்கப்படுகிறது.
டார்க் சாக்லேட்டில் உள்ள பாலிஃபினோலிக் என்ற கூட்டுப்பொருள் ஹேப்பி ஹார்மோன்களின் உற்பத்தி அளவை அதிகரிக்கச் செய்து மனம் மகிழ்வுடன் இருக்க உதவுகிறது.
டார்க் சாக்லேட் உட்கொள்வதால் அதிலுள்ள டயட்டரி ஃபிளவனாய்ட்ஸ் என்ற ஆன்டி ஆக்சிடன்ட், கொரோனரி ஹார்ட் டிசிஸ் (Coronary Heart disease) வரும் அபாயத்தை தடுக்க உதவி புரிகிறது.
டார்க் சாக்லேட் பார்வைத் திறன் மேம்பட உதவும் என்றொரு நிரூபிக்கப்படாத கருத்தும் நிலவுகிறது.
டார்க் சாக்லேட்டை அளவோடு உட்கொள்வோம்... ஆரோக்கியம் காப்போம்.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.