சாலட் டாப்பிங்ஸ்ஸில் (Toppings) இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

Health Benefits of Salad Toppings
Health Benefits of Salad Toppings

நாம் அனைவரும் நறுக்கிய காய்கறிக் கலவையை பச்சையாக சாலட் செய்து சாப்பிடுவது வழக்கம். சாலட்டின் சுவையை கூட்டவும், அவற்றை கவர்ச்சிகரமாக அலங்கரித்துப் பரிமாறவும் நாம் அவற்றின் மீது சிறிது ஆலிவ் ஆயில், வினிகர், சாஸ், மயோனைஸ், நட்ஸ், மூலிகை இலைகள் போன்றவற்றை சேர்ப்பதும் வழக்கமாக உள்ளது. அப்படி சேர்க்கப்படும்  பொருள்களிலும் பலவித சத்துக்கள் உள்ளதால் நாம் உண்ணும் சாலட் ஒரு சரிவிகித உணவாகிறது. எந்தெந்தப் பொருளில் என்னென்ன சத்துக்கள் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

பிரவுன் ரைஸ், குயினோவா, பார்லி போன்ற முழு தானியங்களை சமைத்து சாலட்டில் சேர்க்க சாலட்டுக்கு மிருதுத் தன்மையும் சுவையும் கிடைக்கிறது. மேலும், இவற்றிலுள்ள புரோட்டீனும் நார்ச்சத்தும் அதிக நேரம் பசியுணர்வு ஏற்படாமல் செய்கிறது.

உலர் பழங்களான க்ரான்பெரிஸ், ஆப்ரிகாட், திராட்சை  போன்றவற்றை சேர்க்கும்போது அதிகளவு ஊட்டச்சத்துக்களுடன் சாலட்டுக்கு ஒருவித இனிப்புச் சுவையும் கிடைக்கிறது.

உப்போ, சர்க்கரையோ சேர்க்காது, வால்நட், பிஸ்தா, பாதம், பூசணி விதை, சியா விதை, வேர்க்கடலைப் பருப்பு போன்றவற்றை வறுத்தோ பச்சையாகவோ சாலட் மீது தூவி சாப்பிடுவது உடலுக்கு மிக அதிக ஊட்டச்சத்துக்களைத் தரக்கூடியது.

புதிய (fresh) புதினா, மல்லித்தழை, துளசி, ரோஸ்மேரி, பார்ஸ்லி ஆகிய மூலிகைகளின் இலைகளை சாலட் மீது தூவி உண்ணும்போது உடம்புக்கு வெவ்வேறு விதமான சத்துக்களோடு கூடுதல் சுவையும் கிடைக்கிறது.

இதையும் படியுங்கள்:
குளிர்கால சளி, காய்ச்சலை விரட்டும் உலர் இஞ்சிப் பொடி!
Health Benefits of Salad Toppings

உப்பு சேர்க்காது ஆவியில் வேக வைத்த, கடல் வாழ் மீன் வகைகளான சால்மன், காட், லாப்ஸ்டர், எறா, சர்டைன் போன்றவற்றின் சதைப் பகுதியை சேகரித்து சாலட்டுடன் கலந்து சாப்பிடலாம். அதன் மூலம் தரமான புரோட்டீன், ஒமேகா3 கொழுப்பு அமிலம், வைட்டமின்கள், மினரல்கள் ஆகிய அநேக ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்குக் கிடைக்கிறது.

ஹார்டு (hard) சீஸ் வகைகளான செட்டார், கவுடா, பரமேஸியான், நான்சிகோ போன்றவற்றை துருவி சாலட்டில் சேர்க்க சுவை கூடுவதோடல்லாமல் அதிகளவு புரோட்டீன், கால்சியம், வைட்டமின் B12 போன்ற  ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன.

வேக வைத்து பொடிசாக நறுக்கிய முட்டைத் துண்டுகளை சாலட்டில் சேர்த்து உண்ண அதிகளவு புரோட்டீன், கொழுப்பு சத்து, இரும்பு சத்து, வைட்டமின்கள் கிடைப்பதுடன் அதிக நேரம் பசி எடுக்கும் உணர்வும் ஏற்படாது.

சில வகைப் பழங்களைத் தேர்ந்தெடுத்து நறுக்கி அவற்றின் துண்டுகளைக் கலந்து சாலட்டின் மீது தூவி அலங்கரித்துப் பரிமாற சாலட்டிற்கு அதிக சுவையும், வைட்டமின்கள், மினரல்களும் சேர்ந்த பல வகை ஆரோக்கியம் நிறைந்த சத்துக்களும் கிடைக்கின்றன.

எனவே, சாலட் தயாரிக்கும்போது அவற்றின் மேல் பாகத்தில் சேர்க்க வேண்டிய உணவை தேர்ந்தெடுத்து சேர்த்து உண்டு அதிக நலம் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com