இனி ஒதுக்காதீர்கள்... ஆன்மிகமா? ஆரோக்கியமா? இப்பழத்துக்கு உண்டு மவுசு!

Vilampazham benefits
Vilampazham benefits
Published on

அந்தந்த தட்பவெப்ப நிலைக்கேற்றவாறு அந்தந்த சீசனில் விளைபவைகளை நமது உணவு முறையில் புகுத்திய முன்னோர்கள் அறிவாளிகள். புளிப்பும், துவர்ப்பும் கலந்த சுவையில் ஒருவித மணத்துடன் (இதன் மணத்தை விரும்பாமல் இதைத் தவிர்ப்பவர்கள் உண்டு) மேலே கெட்டியான ஓடுடன் இருக்கும் விளாம்பழம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஆழமான மண்ணில் வீடுகள், தோட்டங்கள், கோயில்களில் வளரும் தன்மை உடையது. மருத்துவ குணம் நிறைந்த விளாம் மரத்தின் காய், பழம், பிசின், இலை, கொழுந்து, ஓடு என அனைத்து பாகங்களிலும் உடல் நலன் தரும் எண்ணற்ற மருத்துவ நன்மைகள் உள்ளன.

இந்தியாவை தாயகமாகக் கொண்ட விளாம்பழம் தமிழ் மக்களின் வாழ்வியலோடு தொடர்பு கொண்டதாகிறது. சாட்சியாக சங்க இலக்கியங்களில் இருக்கும் விளாம்பழத்தைப் பற்றிய குறிப்புகள். பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட சில உலக நாடுகளிலும் விளையும் இதற்கு ஆங்கிலத்தில் 'உட் ஆப்பிள்'  என்ற பெயருண்டு.

ஆன்மிகத்தில் சிவனுக்கு உகந்த தல விருட்சமாகும். இதன் பழங்களை விநாயகருக்கும் அர்ப்பணிக்கிறார்கள்.

விளாம்பழம் காயாக உள்ளபோது  ஓட்டுடன் ஒட்டியும் பழமானதும் ஓட்டை விட்டுப் பிரிந்தும் இருப்பது, வயதாக ஆக உலகப் பற்றிலிருந்து விடுபட்டு பக்குவம் பெற வேண்டும் என்பதை உணர்த்துகிறது. விளாம்பழத்தில் 70 சதவிகிதம் ஈரப்பதமும், புரத சத்து, கொழுப்பு சத்து, தாது உப்புக்கள், ரிபோபிளேவின் மற்றும் சர்க்கரைச் சத்து ஆகியன அடங்கியுள்ளதால் இதனை அனைத்து வயதினரும் உண்டு உடல் ஆரோக்கியம் பெறலாம்.

குழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமை நோயை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது. உடலில் சுருக்கங்கள் ஏற்பட்டால் விளாம்பழத்தை சாப்பிட, சுருக்கம் ஓடி இளமையுடன் காட்சியளிக்கலாம். இரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை எதிர்த்து விரட்டும் நோயெதிர்ப்பு சக்தி பெறலாம். நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள் இந்தப் பழத்துடன் வெல்லம் கலந்து சாப்பிட்டு வர, குணம் தெரியும்.

மேலும், இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். வறட்டு இருமலைத் தடுத்து வாந்தி, குமட்டல், நெஞ்சு எரிச்சலைக் குறைக்கிறது. வயிற்றுப்போக்கு, தலைச்சுற்றல் போன்றவை குணமாகும். தொடர்ந்து 21 நாட்கள் விளாம்பழம் சாப்பிட்டால் உடலில் உள்ள பல பிரச்னைகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர். குறிப்பாக, பித்தம் அதிகமாகி சித்தம் தடுமாறுபவர்கள் விளாம்பழத்தைக் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெல்லம் கலந்து பிசைந்து சாப்பிட்டால் பித்தம் தணிந்து நலம் பெறலாம்.

இதையும் படியுங்கள்:
கொடுக்காய்ப்புளி.. ஆப்பிளை விட அதிக சத்து! மறந்து போன ரகசியம்! ஆனால்...
Vilampazham benefits

காயாக இருக்கும் விளாம் பழத்தின் உள் சதையை எடுத்து அதனுடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து சாப்பிட்டால் சுவை ஜோராக இருக்கும். அதே காய் பழமாக உருளும் சப்தம் கேட்டால் அதை உடைத்து அதில் வெல்லம் போட்டு பிசைந்து சாப்பிட வேண்டும். இத்தனை நன்மை தரும் விளாம்பழத்தைக் கண்டால் இனி ஒதுக்காமல் உண்டு பலன் பெறுவோம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com