
வாழ்நாள் முழுவதும் உங்கள் இதயம் ஆரோக்கியமாக செயல்பட, நீங்கள் தினசரி உட்கொள்ள வேண்டிய 5 வகை உணவுகள் தெரியுமா?
இப்பதிவில் கூறப்பட்டிருக்கும் 5 வகை உணவுகளை நீங்கள் தினசரி உட்கொண்டு வந்தால், உங்கள் இதயம் இறுதிவரை சிறப்பாக இயங்கும். சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. சமைக்க வேண்டிய வேலையும் அதிகம் இல்லை.
1. பெர்ரீஸ் :
ப்ளூ பெர்ரீஸ், ராஸ்பெர்ரீஸ், ஸ்ட்ராபெர்ரீஸ் போன்ற பெர்ரி வகைப் பழங்கள் கவர்ச்சியான நிறமும் சுவையும் கொண்டவை. இவற்றிலுள்ள 'அந்தோசயனின்' (Anthocyanins) என்ற கூட்டுப்பொருள் இரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொழுப்புகளின் அளவைக் குறைக்கவும், இதய இரத்த நாளங்களில் உண்டாகும் அடைப்பு மற்றும் வீக்கங்களை நீக்கி நாளங்கள் சிறந்த முறையில் செயல்படவும் உதவும்.
பெர்ரி பழங்களை ஸ்மூதியாக செய்து அல்லது யோகர்ட் மீது தூவியும் உண்ணலாம்.
2. நட்ஸ்:
பாதாம், வால் நட், பிஸ்தா போன்ற கொட்டைகளில் இதயத்திற்கு ஆரோக்கியம் தரக்கூடிய நல்ல கொழுப்புகள், பிளான்ட் ஸ்டெரால் (Plant sterol) மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. அவை கெட்ட கொழுப்புகளின் அளவைக் குறைத்து, இரத்த ஓட்டம் சீராகப் பாய உதவி புரிகின்றன. இதனால் இதய நோய்கள் வரும் அபாயம் குறைகிறது.
3. பச்சை இலைக் காய்கறிகள்:
பசலை, காலே, அருகுலா, மற்றும் சுவிஸ் சார்டு போன்றவற்றை ஊட்டச்சத்துக்களின் பவர் ஹவுஸ் எனலாம். இவற்றில் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. கலோரி அளவு குறைவாகவே உள்ளது. இக்கீரைகளில் உள்ள நைட்ரேட்ஸ் இரத்த அழுத்தத்தை சம நிலையில் வைக்க உதவி புரியும். இதனால் இதய இரத்த நாளங்கள் ஆரோக்கியமாக செயல்பட முடிகிறது. இந்தக் கீரைகளை வதக்கியோ, பொரித்தோ, சாலட்களில் சேர்த்தோ உட்கொள்ளலாம்.
4. ஓட்ஸ்:
ஒரு பௌல் நிறைய சூடான ஓட் மீல் உண்பது இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச் சத்துக்கள் அதிகம். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி எடுத்து விடும். ஓட்ஸுடன் பெர்ரீஸ், நட் பட்டர், தேன், பட்டைப் பவுடர் போன்ற சுவையூட்டிகளை சேர்த்து உண்ணலாம்.
5. அவகாடோ:
மிருதுவான, சுவையான, கிரீமி டெக்ச்சர் கொண்ட அவகாடோ பழத்தில், இதயத்திற்கு ஆரோக்கியம் தரக்கூடிய மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் உள்ளன. அவகாடோ உடலில் நல்ல கொழுப்புகளின் அளவை உயர்த்த உதவும். மேலும்,
இதில் உள்ள பொட்டாசியம் சத்தானது, இரத்த அழுத்தத்தை சம நிலையில் வைத்து, பராமரிக்க உதவி புரிந்து, இதய நோய் வராமல் பாதுகாக்கும். இப்பழத்தை மசித்து பிரெட் டோஸ்ட்டில் தடவி, சாண்ட்விச் செய்து அல்லது ஸ்மூத்தியாக்கி உண்ணலாம்.
மேற் கூறிய உணவுகளை தினசரி உணவுகளுடன் மறக்காமல் எடுத்துக் கொண்டால், உங்கள் இதயம் உங்களுக்கு நன்றி சொல்ல மறக்காது!