வயிற்றில் சுரக்கும் அமிலமானது உணவுக்குழாயில் திரும்ப மேல் நோக்கி வருவதால் ஏற்படக்கூடியதுதான் நெஞ்செரிச்சல். இது, சில உடல் உபாதைகளுக்கான ஓர் அறிகுறி. எனவே, நெஞ்செரிச்சலை நிராகரிக்காமல், உடனுக்குடன் தீர்வு காண்பது நல்லது. இல்லையென்றால், அதுவே ஒரு நோயாகக்கூட மாறலாம்.
நாம் உண்ணும் உணவு, உணவுக்குழாய் வழியாக வயிற்றுப்பகுதியைச் சென்றடையும். உணவுக்குழாயின் மேல்பகுதியிலும், கீழ்ப்பகுதியிலும் (இரைப்பைக்கு மேல்) திறந்து, மூடும் வடிவிலான தசைகள் உள்ளன. மேலே உள்ள தசை, நாம் சாப்பிடும்போது உணவு மூச்சுக்குழாய்க்குள் போய்விடாமல் இருக்க உதவக்கூடியது. அதேபோல் கீழே உள்ள தசை, இரைப்பைக்குச் சென்ற உணவு அதன் அமிலத்தன்மை காரணமாக மேல்நோக்கிச் சென்றுவிடாமல் இருக்க உதவும்.
ஆனால், செரிமானத்தின்போது வெளியாகும் அமிலமானது, உணவுக் குறைபாடு காரணமாகவோ, இரைப்பை அழற்சி காரணமாகவோ இரைப்பையின் அருகில் இருக்கும் மூடிகளின் கட்டுப்பாட்டை மீறி மீண்டும் மேல்நோக்கி உணவுக் குழாயில் பயணிக்கத் தொடங்கும். இந்த நிகழ்வின்போது உணவுக்குழாயின் இருபக்கங்களிலும் அமிலம் தேங்கிவிடும். இதன் காரணமாகத்தான் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.
உடல் பருமன், புகைபிடித்தல். மது அருந்துதல், நேரத்துக்குச் சாப்பிடாமல் இருத்தல், அதிக உணவு உட்கொள்ளுதல் போன்றவை நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்கள். சிலருக்கு, இரவுத் தூக்கத்தின்போது நெஞ்செரிச்சல் ஏற்படும். உணவு உண்டவுடன் செரிமானத்துக்கு நேரம் தராமல் உறங்குவதால், வயிற்றில் உருவாகும் அமிலம் உணவுக்குழாயை நோக்கி நகர்ந்து பிரச்னையை ஏற்படுத்தும்.
செரிமானக் கோளாறுகளுக்கு, நெஞ்செரிச்சல் மிகமுக்கியமான அறிகுறி. இவற்றை முறியான வாழ்வியல் மாற்றங்களால் சரிசெய்து விட முடியும். நெஞ்செரிச்சலைத் தொடர்ந்து உதாசீனப்படுத்தினால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை கூட ஏற்படலாம்.
அக்கறை எடுத்துக்கொள்ளாமல் விடப்படும் நெஞ்செரிச்சல்கள், அதன் தொடர்ச்சியாக பித்தப்பைக் கட்டி, அல்சர், குடலிறக்கம், இரைப்பை வாதம் போன்ற பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். கவனிக்காமல்விடும் பட்சத்தில், இது இரைப்பை புற்றுநோயாகக் கூடமாறலாம்.
சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், கொழுப்பு, முதுமை போன்றவற்றால் இதய பாதிப்பு காரணமாக ஏற்படும் நெஞ்சுவலியை சிலர் நெஞ்செரிச்சல் என்று தவறாக எண்ணிக்கொள்வதுண்டு. இதுபோன்ற பாதிப்புகள் உள்ளவர்கள், அவ்வப்போது மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.
குண்டாக இருப்பவர்கள், அதிகம் சாப்பிடுபவர்கள், இறுக்கமான ஆடை அணிபவர்கள் மற்றும் புகை சூழ்ந்த பகுதியில் இருப்பவர்களுக்கு ஒரு வாரத்தில் இரண்டு முறைக்கும் மேல் நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். குறிப்பாக, இரவு நேரத்தில் நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், மரபுரீதியாக ஏற்படும் பிரச்னைகளில் இதுவும் ஒன்று என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும். ஆகவே, குடும்பத்தில் யாருக்கேனும் உணவுக்குழாய் சிக்கல்களோ, உணவுக்குழாயில் புற்றுநோயோ இருந்தால் மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
இரவு நேரத்தில், உணவுக்கும் உறக்கத்துக்கும் மூன்று மணிநேர இடைவெளி விட வேண்டும். பாதி வயிறுதான் சாப்பிட வேண்டும். மீதி கால் பங்கினை நீரால் நிரப்பலாம். நொறுக்குத்தீனிகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். மது அருந்துதல் மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், அதைவிட்டு முழுமையாக வெளிவர வேண்டும்.
டீ, காபி அதிகம் அருந்தாமல் இருப்பது, ஃப்ரைடு உணவுகள், காரம் மற்றும் மசாலா வகை உணவுகளை தவிர்ப்பது, அமிலம் இருக்கும் உணவை உட்கொள்ளாமலிருப்பது நல்லது. கூடியவரை இரவு நேரத்தில், இவற்றை அறவே தவிர்த்தல் நல்லது. நிறைய தண்ணீர் குடித்துவர வேண்டும். சரியான அளவு தூக்கமும் மிகமிக அவசியம்.