நீங்க 40+ ஆ! உங்களுக்கான பதிவு தான் இது!

healthy diet for people over 40
healthy diet for people over 40

காலை உணவாக என்ன சாப்பிடுகிறோம்?

இட்லி, தோசை, பூரிகிழங்கு,  பொங்கல், வடை இப்படித்தானே. இவையெல்லாம் நல்ல உணவுகள் தான் சந்தேகம் இல்லை. இருப்பினும் 40+ வயது அடைந்தவுடன் இந்த மாதிரி காலை உணவாக இட்லி, பொங்கல் ஆகியவற்றை தவிர்த்து சத்தான ஏதேனும் ஒரு பயிறு, காய்கறிகள் போட்டு செய்த பொரியல், சூப், வேர்க்கடலை, பனீர், பாதாம் பருப்பு, முட்டை போன்றவற்றில் ஏதேனும் இரண்டை எடுத்துக் கொள்ளலாம்.

கிவி, டிராகன் ஃப்ரூட்ஸ் போன்ற வெளிநாட்டு பழங்களை அதிக விலை கொடுத்து வாங்கி சாப்பிடுவதைவிட சத்து நிறைந்த நம்மூர் பன்னீர் திராட்சை, கொய்யாப்பழம், வாழைப்பழம், சாத்துக்குடி, நாவல்பழம் போன்ற சத்துக்கள் நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது.

காலையில் காஃபி, டீ போன்ற பானங்களை தவிர்த்து பால் சேர்க்காத கிரீன் டீ, சுக்கு மல்லி காபி, பழைய சோற்றில் செய்த நீராகாரம் எடுத்துக்கொள்வது சிறந்தது.

இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, காரம், உப்பு என்ற அறுசுவையும் நம் உணவில் இருக்க வேண்டியது அவசியம். ஒவ்வொன்றும் மருத்துவ குணம் நிறைந்தது தான். அதிலும் குறிப்பாக துவர்ப்பு மற்றும் கசப்பு நம் உடலுக்கு மிகவும் இன்றிமையாதது. வாழைப்பூ, வாழைத்தண்டு, பாகற்காய், நெல்லிக்காய் ஆகியவை சர்க்கரையை வெகுவாக கட்டுப்படுத்தக்கூடிய உணவாகும்.  

வாரத்தில் நான்கு நாட்களாவது இந்த வகை உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள தவறக் கூடாது. 

வெந்தயத்தை தினமும் நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை வெறும் வாணலியில் சூடு செய்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைத்துக்கொண்டு தினம் அரை ஸ்பூன் அளவில் மோரில் கலந்து சாப்பிடலாம். கசப்பு சுவை நிறைந்த இதில் கரையக்கூடிய நார்சத்து, கரையாத நார்ச்சத்து இரண்டும் இருப்பதால் மாரடைப்பு நோய் வராமல் தடுப்பதுடன் சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படும்.

இதையும் படியுங்கள்:
சிறுநீரக நோய்க்கான காரணங்களும் அறிகுறிகளும்!
healthy diet for people over 40

சுண்டைக்காயை வற்றலாக பயன்படுத்தலாம் அல்லது பச்சை சுண்டைக்காய் கொண்டு துவையல், சாம்பார் என செய்து சாப்பிடலாம்.

வெள்ளை அரிசி, வெள்ளை சர்க்கரை ஆகியவற்றை தவிர்த்து சிறுதானியங்களைை எடுத்துக் கொள்ளலாம்.

அதேபோல் பாரம்பரிய அரிசிகளான தூய மல்லி, மாப்பிள்ளை சம்பா போன்றவற்றையும் அளவாக எடுத்துக் கொள்வது நல்லது.

இரவில் எளிய வகையில் உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. குறிப்பாக ஆவியில் வேகவைத்த இட்லி, எண்ணெய் அதிகம் சேர்க்காத தோசை, கோதுமை ரவை உப்புமா, கிச்சடி போன்றவற்றை சாப்பிடலாம்.

தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். காலையில் ஒரு 20 நிமிடங்கள் சுறுசுறுப்பாக நடைப்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. 

படுக்கைக்குச் செல்லும் போது வேறு எந்தவித சிந்தனையும் இன்றி சென்று உறங்குதல் நல்லது. ஆழ்ந்த உறக்கம் நம் உடலை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், மனதை ஒருநிலைப்படுத்தி வைத்துக் கொள்ளவும் உதவும். இவையெல்லாம் நம்மை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க வைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com