
நம் முன்னோர்கள் பாரம்பரியமாக உட்கொண்டு வந்த வேர்க்கடலை, தேங்காய், நெய், அரிசி, வாழைப்பழம் ஆகிய ஐந்து உணவுகளையும் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பவை எனக் கூறி தற்காலத்தில் சிலர் அவற்றைத் தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள மறுத்துவிடுகின்றனர்.
இந்த ஐந்து உணவுகளையும் குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளும்போது அவற்றிலிருந்து நமக்குப் பல வகையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. அவை என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
1. அரிசி: பாரம்பரிய அரிசி வகைகளான சிவப்பு அரிசி, பிரவுன் ரைஸ், கைக்குத்தல் அரிசி போன்றவை அதிக சக்தி தரக்கூடியவை. அவற்றில் நார்ச்சத்து மற்றும் கனிமச் சத்துக்களும் அதிகம். அரிசி சாதத்தை பருப்பு மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து முழுமையான உணவாக உண்ணும்போது அது நம் உடலுக்கு நீண்ட நேரம் சக்தி அளிக்கும். இரத்த சர்க்கரை அளவு திடீரென உயரவும் வாய்ப்பளிக்காது.
2. வேர்க்கடலை: வேர்க்கடலைப் பருப்பில் இதய ஆரோக்கியம் காக்கக்கூடிய நல்ல கொழுப்புகள், தாவர வகைப் ப்ரோட்டீன் மற்றும் நார்ச் சத்தும் உள்ளன. இவை இரத்த சர்க்கரை அளவை சம நிலையில் வைக்கவும், நீண்ட நேரம் வயிற்றில் தங்கி பசியுணர்வை தள்ளிப் போகச் செய்யவும், சிதைவுற்ற தசைகளை சீராக்கவும் உதவி புரிகின்றன. இதை வறுத்து, வேக வைத்து, சட்னியாகச் செய்து என பல வழிகளில் உட்கொள்ளலாம்.
3. நெய்: நெய்யில் ப்யூட்ரேட் (Butyrate) என்னும் ஆரோக்கியம் நிறைந்த கொழுப்புகள் அதிகம் உள்ளன. இவை ஜீரணம் சிறப்பாக நடைபெறவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இரைப்பை குடல் உறுப்புகளின் ஆரோக்கியம் காக்கவும் சிறந்த முறையில் பயன்படும். இதில் வைட்டமின் A, D, E ஆகிய உடலுக்குத் தேவையான சத்துக்களும் நிரம்பியுள்ளன.
4. தேங்காய்: தேங்காயும் தேங்காய் எண்ணெயும் உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்யும் என்றொரு தவறான கருத்து நிலவி வருகிறது. உண்மையில் தேங்காயில் மீடியம்-செயின் ட்ரைக்ளிசெரைட் (MCTs) என்னும் நல்ல கொழுப்புகளே உள்ளன. அவை மெட்டபாலிஸ ரேட்டை அதிகரிக்கவும், மூளையின் செயல்பாடுகளை உயர்த்தவும் உதவி புரிகின்றன. மேலும் தேங்காயில் ஆன்டி இன்பிளமேட்டரி குணமும் உள்ளது.
5. வாழைப்பழம்: வாழைப்பழத்தில் பொட்டாசியம், மக்னீசியம், பிரிபயோடிக்ஸ் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை ஜீரணம் சிறப்புற நடைபெற்று உடலுக்கு தொடர்ந்து சக்தி கிடைக்க உதவுகின்றன. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நீரிழப்பு ஏற்படாது. தசைப் பிடிப்பு உண்டாவதும் தடுக்கப்படும்.
மேற்கூறிய ஐந்து வகை உணவுகளையும் தினமும் குறைந்த அளவில் உட்கொண்டு அவை தரும் ஆரோக்கிய நன்மைகளைப் பெற்று வாழ்வோம்.