இன்றைய காலங்களில் வயதானவர்கள் மட்டுமின்றி, இளம் வயதில் இருப்பவர்களுக்கும் முழங்கால் மூட்டு வலி பெரிய பிரச்னையாக உள்ளது. மூட்டுகளுக்கு வலு சேர்க்கும் உணவுகளை எடுத்துக் கொள்வதும் உடற்பயிற்சி செய்வதும் மூட்டு வலியையும், வீக்கத்தையும் பெருமளவு குறைக்கும்.
மனித உடம்பில் எலும்புகளின் கட்டமைப்பில்தான் உடலுக்கு வடிவமும், பலமும் கிடைக்கிறது. கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் போன்ற வைட்டமின்களும், புரதமும் மூட்டுகளுக்கு வலுவூட்டும். எலும்புகளை வலுவாக்கும் பால், சீஸ், சோயா பனீர், எள், கீரை வகைகள், பழங்கள் போன்றவை உடலுக்கு வலுவை உண்டாக்கும்.
மூட்டு வலிக்கு முடிவு கட்ட சில உணவுகள் நம் தினசரி டயட்டில் இருப்பது நல்லது. கொழுப்பு நிறைந்த சால்மன் மீன்கள் அழற்சியை எதிர்த்துப் போராடும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த சிறந்த உணவாகும். அதிகாலையில் மூட்டுகளில் ஏற்படும் விறைப்புத்தன்மை மற்றும் மூட்டு வலிக்கு சிறந்த உணவாக இந்த சால்மன் மீன்கள் உள்ளது.
இஞ்சி, பூண்டு, மஞ்சள், லவங்கப்பட்டை போன்றவற்றின் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்த மசாலா பொருட்களை தினமும் உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது. வெந்தயக்கீரை, பாலக்கீரை, பிரண்டை, முட்டைகோஸ் மற்றும் பச்சை இலை காய்கறிகளையும் நம் அன்றாட உணவில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது மூட்டு வலியை பெருமளவு குறைக்கும்.
பச்சைப் பயறு, பீன்ஸ், லோபியா எனப்படும் வெள்ளைக் காராமணி போன்ற பருப்பு வகைகள் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்தது. இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள மூட்டு வீக்கம் குறைவதுடன் வலியும் பெருமளவு குறைகிறது.
பாதாம், அக்ரூட், பிஸ்தா போன்ற கொட்டை வகைகள் புரதம், நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. முடக்கு வாதம் அல்லது கீல்வாதம் உள்ளவர்களுக்கு வலியையும், வீக்கத்தையும் குறைக்க வல்லது. முழு தானியங்கள் மற்றும் சிறு தானியங்கள் குறிப்பாக கேழ்வரகு, பார்லி, ஜவ்வரிசி போன்றவற்றில் காலை உணவை தயாரித்து உண்பது மூட்டு வீக்கம் மற்றும் வலியையும் பெருமளவில் குறைக்கக்கூடியது.
பழங்களில் ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவை விட்டமின் சி நிறைந்தவை. கால்சியம் நிறைந்த உணவை சாப்பிட்ட பின்பு இந்தப் பழங்களை எடுத்துக் கொண்டால் கால்சியம் எளிதில் உறிஞ்சப்படும்.