
கோடைக் காலத்தில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என இரு சாராரையும் பாதிக்கும் ஒரு கடுமையான விஷயம் ஹீட் ஸ்ட்ரோக். குறிப்பாக கடுமையான வெப்பம் நிலவும் கோடை மாதங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை ஹீட் ஸ்ட்ரோக் தாக்காமல் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.
குழந்தைகளை தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்கின் காரணிகள்:
பொதுவாக குழந்தைகளின் உடலில் அதிக அளவு நீர் சத்து உள்ளது. ஆனால் கோடைக் காலங்களில் அவர்கள் உடலில் உள்ள நீர் விரைவில் வற்றி நீர் இழப்பு ஏற்படும். அவர்களது உடலில் வியர்வை சுரப்பிகள் முழுமையாக வளர்ச்சி அடையாமல் இருக்கும். அதனால் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவது கடினமான செயலாக அமைகின்றது. சரியாக தண்ணீர் குடிக்காமல் குழந்தைகள் விளையாடிக் கொண்டே இருக்கும்போது அவர்களுக்கு நீர் இழப்பு ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, விரைவான இதயத்துடிப்பு மற்றும் சுவாசம், சருமம் சிவந்தும் சூடாகவும் மாறுதல், மயக்கம், குழப்பம், சில குழந்தைகளுக்கு வலிப்பு போன்ற உடல் ரீதியான அறிகுறிகள் தென்படும். உடலில் ஏற்படும் நீர் இழப்பு அறிவாற்றல் செயல்பாட்டை பாதிக்கும். இதனால் தலைசுற்றல், குழப்பம் மற்றும் சோம்பல் போன்றவை ஏற்படும். கடுமையான பாதிப்புகள் இருந்தால் அது நரம்பியல் பாதிப்பை ஏற்படுத்தி நீண்டகால அறிவாற்றல் மற்றும் உடலின் செயல்பாடுகளை பாதிக்கும்.
குழந்தைகள் சோம்பேறித்தனமாக இருப்பார்கள். உணவு உண்ண மறுப்பார்கள். அவர்களது நடத்தையில் எரிச்சலும் கோபமும் கலந்து இருக்கும். சிறுநீர் மிகவும் குறைவாக இருக்கும். கண்களில் நீர்ச்சத்து குறைந்திருக்கும்.
முதியவர்களுக்கு ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக்கின் காரணிகள்:
வயதாகும்போது உடலின் வெப்பநிலையை திறம்பட கட்டுப்படுத்தும் திறன் குறைகிறது. ஆண்களை விட வயதான பெண்கள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படுவதால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
உடல் வெப்பநிலை 40 டிகிரிக்கு மேல் சென்று விடும். முதியவர்களின் உடலில் அவ்வப்போது தசைப்பிடிப்பு மற்றும் தூங்குவதில் சிரமம், தூங்கும் போது இடையில் விழித்துக் கொள்ளுதல் போன்ற தொல்லைகளை அனுபவிப்பார்கள். உடல் இயக்கம் குறைவதாலும் மற்ற நோய்கள் காரணமாகவும் இவர்கள் கடுமையான அறிகுறிகளை அனுபவிக்கக்கூடும். கடுமையான தலைவலி, தசைவலி, கிராம்ப்ஸ், அதிகரித்த இதயத்துடிப்பு குறைவான மூச்சு விடுதல் போன்றவை இருக்கும்.
தடுப்பு நடவடிக்கைகள்:
குழந்தைகளும் முதியவர்களும் அடிக்கடி நீர் அருந்த வேண்டும். அதிக வெயில் நேரங்களில் வெளியே செல்லக்கூடாது. உடல் வெப்பநிலையை குறைக்க மின்விசிறியின் கீழ் அமர்ந்திருக்க மற்றும் உறங்க வேண்டும். உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் பருத்தியினால் செய்யப்பட்ட ஆடைகளை அணிய வேண்டும். குறிப்பாக வெயில் நேரத்தில் வெப்பத்தை வெளியேற்றக் கூடிய தளர்வான ஆடைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
குளிக்கும்போது சூடான நீரில் குளிக்காமல் தண்ணீரை பக்கெட்டுகளை பிடித்து வைத்து குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது. வெளியில் செல்ல நேரும்போது அகன்ற விளிம்புகள் கொண்ட தொப்பிகள் மற்றும் சன் கிளாசஸ்களை பயன்படுத்தலாம். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் போவதை தவிர்க்க வேண்டும். தண்ணீருடன் சேர்த்து பழச்சாறுகள், எலக்ட்ரோலைட் நிறைந்த பானங்கள் போன்றவற்றை அருந்த வேண்டும்.
குளிர்ச்சியான இளநீர் நுங்கு போன்றவற்றை சாப்பிட வேண்டும். நுங்குத் தோலை உடல் முழுவதும் தேய்த்துக் கொள்ளலாம். குழந்தைகளும் முதியவர்களும் அதிக சோர்வு அல்லது தலை சுற்றல், சருமம் சிவத்தல் போன்ற அறிகுறிகளை அனுபவித்தால் உடனடியாக மருத்துவரிடம் காட்ட வேண்டும்.
நிறுத்தப்பட்டுள்ள கார்களில் குழந்தைகளை ஒருபோதும் தனியாக விடக்கூடாது. ஏனென்றால் உள்ளே இருக்கும் வெப்பநிலை குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடும்.