நம் உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சமநிலையில் இருந்தால்தான் உடல் நலமாக இருக்கும். இல்லையெனில் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று ஏறக்குறைய இருந்தாலும் நம் உடலில் கோளாறு ஏற்படும். உடல் வலி, மூட்டு வலி, மூட்டுகளில் நீர் கோர்த்துக் கொள்ளுதல், உடல் சோர்வு, எரிச்சல் என பல பிரச்னைகள் தோன்றும். வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சமச்சீராக வைத்துக்கொள்ள மூலிகை டீ ஒன்றை வீட்டிலேயே கலந்த தயாரித்து பருக நலமுடன் வாழலாம். இந்தத் தேனீரை தயாரித்துப் பருகி வர உடலில் தேங்கியிருக்கும் கெட்ட நீர் வடிந்து, உடல் கலகலப்பாகிவிடும்.
இந்த மூலிகை டீயை தயாரிக்க சோம்பு, புதினா இலைகள், மிளகு மற்றும் இஞ்சி ஆகிய பொருட்கள் தேவை. சோம்பில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன. இது வாத நீரை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. புதினா இலைகள் வாய்வுத் தொல்லை, வயிறு உப்புசம் போன்றவற்றை அறவே நீக்கி செரிமானத்தை தூண்டும். இஞ்சி அல்லது சுக்கு இரண்டுமே வாதத்தை குறைக்கும் தன்மை கொண்டவை.
அடுப்பில் இரண்டு கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்க ஆரம்பிக்கும்போது சோம்பு ஒரு ஸ்பூன், கசக்கிய புதினா இலைகள் பத்து, ஒன்றிரண்டாக பொடித்த மிளகு இரண்டு ஸ்பூன், தோல் நீக்கி நசுக்கிய இஞ்சி ஒரு துண்டு ஆகிய நான்கையும் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். இரண்டு கப் நீர் ஒரு கப்பாக குறையும் வரை கொதிக்க விட்டு வற்றியதும் வடிகட்டி அப்படியே பருகலாம்.
இதனை காலையிலும் மாலையிலும் வெறும் வயிற்றில் பருக நல்ல பலன் தெரியும். இந்த டீயை குடிப்பதற்கு அரை மணி நேரம் முன்பும் பின்பும் எதனையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. அப்போதுதான் இந்த டீ நன்கு வேலை செய்யும். இதன் மூலம் காலில் உள்ள வாத நீர் வடிந்து முட்டி வலி மற்றும் வீக்கம் குறையும். சிலருக்கு பாதத்தில் எரிச்சல், வலி இருக்கும். அவர்களும் இதனை பருக நல்ல பலன் கிடைக்கும்.
இதனை பருகுவதால் வாதம், பித்தம், கபம் மூன்றையும் சமநிலையில் வைத்திருப்பதோடு, வாய்வுத் தொல்லை, வயிறு உப்புசம், உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் அனைத்தும் கரைக்க உதவும்.