தற்போது அனைவரையும் ஆட்டிப்படைப்பது கவலையும் அச்சமும்தான். நிறைய பேர் கவலைக்கும், அச்சத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்புவார்கள். அச்சம் என்பது அந்த சமயத்தில் மட்டுமே வரக்கூடியது. கவலை என்பது நீடித்து இருக்கக்கூடியது. சரி, கவலைக்கு இயற்கையாக தீர்வு காண்பது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சுறுசுறுப்பாக இருப்பது: மனதுக்கு கவலை அளிக்கின்ற விஷயங்களை மீண்டும், மீண்டும் நினைத்துப் பார்த்துக்கொண்டே இருந்தால் கவலை அதிகமாகுமே தவிர, குறையாது. ‘வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டு போகும்’ என்பார்கள். அதைப்போல கவலைகளை மறந்து சிரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். மாற்று நடவடிக்கைகளில் நம் கவனத்தை திசை திருப்பி சுறுசுறுப்பாக இயங்கினால் கவலைகள் பறந்து ஓடும்.
ஆரோக்கியமான உணவு: இரத்த சர்க்கரை குறைவு, நீர்ச்சத்து குறைபாடு போன்ற காரணங்களாலும், பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை நிறமூட்டிய உணவுகளை சாப்பிடும்போது ஏற்படும் மன மாற்றங்களாலும் நம் மனதில் கவலைகள் நிரம்பும். இவற்றை எல்லாம் தவிர்த்துவிட்டு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.
மது மற்றும் புகையை தவிர்க்க வேண்டும்: கவலைகளை மறக்கவே மது அருந்துவதாக சிலர் கூறுவது உண்டு. ஆனால், அது தற்காலிகத் தீர்வாக இருக்குமே அன்றி, நிரந்தரத் தீர்வை தராது. இது மட்டுமல்லாமல் சிகரெட் புகைப்பதும் தீங்கானதாகும். இவையிரண்டுமே நம் உடலில் மகிழ்ச்சிக்குரிய ஹார்மோன்களை மட்டுப்படுத்தும்.
காஃபியை குறைக்க வேண்டும்: நீடித்த கவலை கொண்டிருப்பவர்கள் காஃபி அருந்துவதை கைவிட வேண்டும். ஏனெனில், அது நம் நரம்பு மண்டலங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். சிலருக்கு பதற்றம் உண்டாக இதுவே காரணமாகும். மது போதையை போல காஃபியும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
நல்ல தூக்கம்: நிம்மதியான தூக்கம் மற்றும் மனதுக்கு இதமான இசையை ரசிப்பது கூட கவலையை குறைக்க உதவும். நாளொன்றுக்கு 7 முதல் 8 மணி நேர தூக்கம் கட்டாயம் அவசியம். தூக்கம் இல்லை என்றால் மனவோட்டம் மாறுவது, எரிச்சல் உணர்வு போன்றவை மேலோங்கும்.
யோகா மற்றும் தியானம்: மனதை அமைதிப்படுத்த இதைவிட சிறப்பான மருந்துகள் வேறெதுவும் இருக்க முடியாது. தினசரி 30 நிமிடங்கள் தியானம் அல்லது யோகா செய்தால் நாளடைவில் மன அழுத்தப் பிரச்னை முற்றிலுமாக ஒழிந்து விடும். அதுமட்டுமின்றி, மனநலன் மேம்படவும் மிகவும் உதவியாக இருக்கும்.