சுவாச ஆரோக்கியம் மேம்படவும், நுரையீரல் சிறப்பாக செயல்படவும் பழங்காலம் தொட்டு பல மூலிகைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்றைய உலகில் காற்று மாசுபாடு என்பது மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது. அத்துடன் தவறான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை காரணங்களால் நுரையீரல் கடுமையான பாதிப்பை எதிர்கொள்கின்றன. எனவே, நுரையீரலை ஆரோக்கியமாக பராமரிக்க உடற்பயிற்சி செய்வதுடன் சரியான உணவு முறையை பின்பற்றி, சில மூலிகைகளையும் எடுத்துக்கொள்ள அவை நம் நுரையீரலை சுத்தப்படுத்தி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
ஆடாதொடை: ‘ஆடாதொடையைக் கண்டால் பாடாத நாவும் பாடுமே’ என்ற மருத்துவப் பழமொழி உண்டு. இது ஒரு சிறந்த மூலிகை. சளி, இருமலைப் போக்கி நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்தக் கூடியது. ஆஸ்துமா, மூச்சு குழாய் அழற்சி போன்ற சுவாசப் பிரச்னைகளை குணப்படுத்துவதில் சிறந்தது. இதன் இலைகளை சிறிது மிளகுத்தூளுடன் சேர்த்து கஷாயமாக செய்து பருகலாம்.
அதிமதுரம்: இது சுவாசப் பிரச்னைகளுக்கு சிறந்த ஆயுர்வேதம் குறிப்பிடும் மருந்தாகும். இவை சுவாசப் பாதையில் உள்ள சளியை வெளியேற்ற உதவும். தொண்டை வறட்சி, இருமல், தொண்டைப்புண், மூச்சுக்குழாய் அழற்சி போன்ற பிரச்னைகளை சரி செய்ய உதவும். இவற்றை கஷாயமாகவோ, டீயாக தயாரித்தோ அல்லது இரண்டு சிமிட்டளவு அதிமதுரப் பொடியை தேனில் குழைத்தோ எடுத்துக் கொள்ள சிறந்த பலனைத் தரும்.
மஞ்சள்: மஞ்சள் சிறந்த ஆன்ட்டி வைரல், ஆன்டி பயாடிக், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி ஆக்ஸிடென்ட் பண்புகள் நிறைந்தது. இவை நுரையீரல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சுவாசப் பாதையில் உள்ள வீக்கம், ஆஸ்துமா, மூச்சுக் குழாய் அழற்சி போன்ற சுவாசக் கோளாறுகளைப் போக்க உதவும். இதனை துளசி, மிளகுடன் சேர்த்து கஷாயமாகவோ அல்லது சிறிதளவு பாலில் மஞ்சள் தூள், மிளகுத் தூள், பனங்கற்கண்டு சேர்த்துக் கொதிக்க விட்டு வடிகட்டி பருக நுரையீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது.
அரிசி திப்பிலி, கண்டந்திப்பிலி: திப்பிலியில் உள்ள பயோ ஆக்டிவ் கலவைகள் சளியை வெளியேற்றும் சக்தி கொண்டது. நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னைகளுக்கு திப்பிலையை ரசம் வைத்து உணவுடன் சேர்த்து உண்ணலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அரிசி திப்பிலி, கண்டந்திப்பிலிப் பொடிகளை தேனில் குழைத்து சாப்பிடலாம் அல்லது கஷாயமாக வைத்து அருந்தலாம்.
துளசி: துளசியில் உள்ள பைட்டோ கெமிக்கல்ஸில் சக்தி வாய்ந்த ஆன்டி அக்டோ மற்றும் வளர்ச்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. இவை மூக்கடைப்பை சரி செய்து, சளியை வெளியேற்றி நுரையீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சுவாசம் மேம்பட உதவும்.
இஞ்சி: சுவாசப் பாதையில் உள்ள வீக்கத்தை குறைக்கவும், சுவாசத் தொற்றுகள் ஏற்படுவதிலிருந்து நம்மைப் பாதுகாக்கவும் சிறந்தது. இஞ்சியை தட்டிப் போட்டு கஷாயம் அல்லது ரசம் செய்து சாப்பிட சிறந்த நிவாரணம் கிடைக்கும்.
திரிபலா சூரணம்: இது சிறந்த சக்தி வாய்ந்த ஆயுர்வேத மருந்தாகும். நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இதன் பொடியை வெந்நீரில் கலந்து தினமும் சாப்பிட்டு வர நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.
லவங்கப்பட்டை: லவங்கப்பட்டையில் உள்ள சிறந்த மருத்துவ குணங்கள் நுரையீரலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றும். ஒரு கப் நீரில் 2 சிறிய லவங்கப்பட்டை துண்டுகளை சேர்த்து பாதியாக வற்றும் வரை கொதிக்க விட்டு வடிகட்டி இந்த கஷாயத்தை குடிக்க நுரையீரலில் தங்கி இருக்கும் அழுக்குகள் வெளியேறும்.
மிளகு: சூடான பாலில் மிளகை தட்டி போட்டு பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம் அல்லது ஒரு கைப்பிடி அளவு சூடான சாதத்தில் அரை ஸ்பூன் மிளகுத் தூள், சிறிது நெய், ஒரு சிமிட்டு உப்பு சேர்த்து சாப்பிடலாம். மிளகு கஷாயம் செய்து பருகலாம். இவை நுரையீரலில் படிந்துள்ள அழுக்குகளை வெளியேற்றும்.