வாய் துர்நாற்றம் ஒருவருக்கு அதிக சங்கடத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல் அவரை தனிமைப் படுத்தியும் வைக்கிறது. வாய் துர்நாற்றம் கொண்டவர் பேசும் போது வாடை வீசும் என்று தயங்கி பலரிடம் பேசுவதை குறைத்துக் கொள்கின்றனர். வாய் துர்நாற்றத்திற்கு சரியாக பல் துலக்காகது தான் காரணம் என்று பலரும் நினைக்கின்றனர். அது ஒரு சிறிய காரணம் தான். ஆனால், அதுவே முழுக்காரணம் அல்ல.
பொதுவாக வாய் துர்நாற்றத்திற்கு பல காரணங்கள் உள்ளன. வாயில் பாக்டீரியாக்கள் தங்கி நொதிப்பதால் நாற்றம் எடுக்கிறது. ஆனால், இது வாய் கொப்பளித்தால் போய் விடும். வாய் கொப்பளித்தாலும் போகாத துர்நாற்றத்திற்கு இரைப்பை, உணவுக்குழாய், கல்லீரல், நுரையீரல், குடல் பகுதியில் உள்ள புண் அல்லது அழற்சி காரணமாக இருக்கும். சில வழிகளை பின்பற்றி இதில் இருந்து மீண்டு விடலாம்.
1. காபி , டீ குடிப்பதை தவிர்க்கவும்.இதனால் இரைப்பை , குடல் புண்ணாகுவது தடுக்கப்படும்.
2. நிறைய தண்ணீர், மோர் பருகலாம். இவை இரைப்பை , குடல் புண்களை மேலும் பாதிப்பை ஏற்படுத்த விடாமல் தடுக்கும்.
3. உணவில் நிறைய காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். நார்ச்சத்துள்ள காய்கறிகளை உண்ணுங்கள்.
4. இஞ்சி, பூண்டு, புளி சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்த்து விடுங்கள். இதில் உள்ள அமிலங்கள் உங்கள் குடல் புண்களை மேலும் மோசமாக்கும்.
5. சிறந்த மவுத் வாஷை குறிப்பிட்ட காலம் பயன்படுத்துங்கள். இது உங்கள் வாய்ப் பகுதியில் உள்ள பாக்டீரியாக்களை கொல்லும். துர்நாற்றம் வராமல் காக்கும்.
6. உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருங்கள். நீர் சத்து மிகுந்த வெள்ளரிக்காய், தர்பூசணி, முலாம் பழம், மாதுளை ஆகியவை அடிக்கடி சாப்பிடுவதால் விரைவிலேயே குணம் தெரியும்.
7. கிரீன் டீ, கேமமைல் டீ, துளசி டீ உள்ளிட்ட மூலிகை தேனீர்கள் உணவுப்பாதையில் உள்ள அசுத்தங்களை அகற்றுகின்றன. மேலும் இவை சர்க்கரை நோயின் தீவிரத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல் செரிமானத்திற்கும் உதவுகிறது. கல்லீரலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுகிறது.
8. புகைபிடிக்கவோ அல்லது மற்ற புகையிலை பொருட்களை பயன்படுத்தவோ கூடாது. மதுவை குறைத்துக் கொள்ளுங்கள். ஆல்கஹால் வறண்ட தொண்டைக்கு வழிவகுக்கும். இது விரைவில் தொண்டை மற்றும் இரைப்பை , குடல் பகுதியில் அதிக புண்களை ஏற்படுத்தி அதிப்படியான துர் நாற்றத்தை வரவழைக்கும்.
9. தினசரி மூச்சு பயிற்சி, தியானம் ஆகியவை செய்யுங்கள். இவை உங்கள் உடலின் நல்ல ஹார்மோன்களை உற்பத்தி செய்து வயிறு புண்ணாக்கும் அமிலங்களின் உற்பத்தியை குறைக்கிறது .
10. தினசரி நடைபயிற்சி , உடற்பயிற்சி போன்றவை தேவையற்ற கொழுப்புகளை குறைத்து கல்லீரலை சுத்தம் செய்கின்றன. உடற்பயற்சிகள் இரத்த ஓட்டத்தை சீராக்கி குடல் பகுதியில் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.
மனமும் உடலும் ஆரோக்கியமாக இருந்தால் வாய் துர்நாற்றம் உடனடியாக ஓடிவிடும்.