- மணிமேகலை
நாம் உண்ணும் உணவில் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், நார்ச்சத்துக்கள் போன்ற குறிப்பிட்ட சத்துக்கள் இயற்கையாக நிறைந்து இருக்கும் என்பது நாம் அறிந்ததே. ஆனால், அவை பதப்படுத்தப்படும்போ4து அவற்றின் சத்துக்களை இழக்கநேரிடலாம். அப்படி இருக்க, நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை எவ்வாறு, நாம் உண்ணும் உணவில் இருந்து பெறுவது என்ற கேள்வி எழுவது நியாயம் தான்.
நாம் உண்ணும் உணவை செறிவூட்டல் மற்றும் வலுவூட்டல் முறைக்கு உட்படுத்தி உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அதிலிருந்து பெற இயலும்.
உணவு செறிவூட்டல் மற்றும் உணவு வலுவூட்டல்:
உணவுப் பொருளைப் பதப்படுத்தப்படும்போது அவை இழந்த ஊட்டச்சத்துகளை மீட்டெடுக்கும் முறைக்கு 'உணவு செறிவூட்டல்' என்று பெயர். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் குறிப்பிட்ட அளவு ஊட்டச்சத்துகளை சேர்த்து அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகப்படுத்தும் செயல்முறைக்கு 'உணவு வலுவூட்டல்' என்று பெயர். இது ஒரு குறைந்த செலவு மற்றும் பாதுகாப்பான முறையாகும். இந்த முறை‘மறைக்கப்பட்ட பசி’ எனும் பிரச்னைக்கு தீர்வாக கூட அமைகிறது.
மறைக்கப்பட்ட பசி என்றால் என்ன?
போதிய ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை உண்பதன் மூலம் ஏற்படும் ஒரு வகை குறைபாட்டினைத் தான் 'மறைக்கப்பட்ட பசி' என்கிறோம். வைட்டமின் ஏ, இரும்பு, துத்தநாகம், ஃபோலிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்கள் போதிய அளவு கிடைக்காததுனாலேயே இந்த மறைக்கப்பட்ட பசி குறைபாடு ஏற்படுகிறது.
வளர்ந்து வரும் நாடுகளில் 'மறைக்கப்பட்ட பசி' அந்நாட்டின் உடல்நலம் மற்றும் சமூக வளர்ச்சியை பெரிதும் பாதிக்கிறது. குறிப்பாக, இந்த ஊட்டச்சத்து குறைப்பாட்டால் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை பிறப்பு, குருட்டுத்தன்மை மற்றும் பிரசவத்தின் போது தாய் இறப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) அறிக்கையின்படி, இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் அதிகமான இளம் வயதினர் மறைக்கப்பட்ட பசியால் அவதிப்படுகின்றனர். 2019 ஆம் ஆண்டு தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (NFHS) வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவில் 68.4 சதவீத குழந்தைகளும் 66.4 சதவீத பெண்களும் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
'மறைக்கப்பட்ட பசி' எனும் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டிற்கு தீர்வு காணும் முறைகளில் ஒன்று தான் உணவு செறிவூட்டல் மற்றும் உணவு வலுவூட்டல் முறை.
இந்த முறைக்கு முதன் முதலில் வித்திட்டவர் ஒரு பிரெஞ்சு வேதியியலாளர். இவர் 1820 இல் உப்பில் அயோடின் சத்தை வலுப்படுத்தும் முறையை முன்மொழிந்தார். அதன் பிறகு 1920 இல் அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள், உப்பில் அயோடின் ஊட்டச்சத்தை வலுப்படுத்தின. இந்தியாவில் முதன்முதலில் வனஸ்பதி எண்ணெய் உடன் விட்டமின் டி சேர்த்து வலுவூட்டப்பட்டது. பொதுவாக, இந்த வனஸ்பதி எண்ணையை நெய் மற்றும் வெண்ணைக்கு மாற்றாக சமையலில் பயன்படுத்துவார்கள்.
இவ்வாறு, உணவில் ஊட்டச்சத்தை வலுப்படுத்துவதன் மூலம் ஒரு நாட்டின் உணவுகளை மேம்படுத்தவும், நுண்ணூட்டச்சத்து குறைபாட்டினை களையவும் முடியும்.
2018 இல் இந்திய உணவு மற்றும் தர கட்டுப்பாட்டு நிர்ணய ஆணையம் பால், அரிசி, உப்பு, எண்ணெய், மாவு போன்ற அத்தியாவசியமான ஐந்து பொருள்களின் வலுவூட்டல் தரங்களை அறிவித்தது. நுகர்வோர்கள் எளிதாக அடையாளம் காண்பதற்காக இந்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையம் வலுவூட்டப்பட்ட பொருட்களை F+ குறியீடு உடைய லேபிள்களுடன் அறிமுகப்படுத்தியது.
செறிவூட்டப்பட்ட மற்றும் வலுவூட்டப்பட்ட உணவுகளின் மூலம், குறைந்த செலவில், உடலுக்கு எந்த ஒரு தீங்கும் இல்லாமல் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைப் பெற முடியும். இதற்காக நமது உணவுப் பழக்கம் மற்றும் உணவு முறைகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
சிட்ரிக் அமிலம் மற்றும் ட்ரைசோடியம் சிட்ரேட் கலவைகள் மற்றும் ஃபெரிக் பைரோபாஸ்பேட் போன்ற பொருள்களை சேர்ப்பது, பிரதான உணவில் அயர்ன் உறிஞ்சுதலை அதிகரிக்கச் செய்வது போன்றவை உணவு வலுவூட்டல் முறையின் பொதுவான வடிவமாகும்.
உலகளாவிய பசி குறியீட்டில் தீவிர பசி பிரிவில் 107 நாடுகளில் 97வது இடத்தில் இந்தியா உள்ளது. மேலும், இந்தியாவில் ஒவ்வொரு இரண்டாவது பெண் குழந்தை இரத்த சோகையாலும், ஒவ்வொரு மூன்றாவது குழந்தை வளர்ச்சி குன்றியதாகவும் இருப்பதாக உணவு அமைச்சகம் கூறுகிறது. இந்த நிலையை மாற்றும் நோக்கிலும், மறைக்கப்பட்ட பசி எனும் குறைபாட்டிற்குத் தீர்வு காணும் நோக்கிலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் ரேஷன் கடைகளில் ‘பொது விநியோக திட்டம்’ மற்றும் பள்ளிகளில் ‘காலை, மதிய உணவு திட்டம்’ போன்ற பல திட்டங்களை தொடர்ந்து வகுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.