

WHO பரிந்துரைப்படி பெரியவர்கள் தினமும் 5 கிராமுக்கும் குறைவாக உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்; குழந்தைகளுக்கு இதைவிட குறைவு. உப்பை முற்றிலும் தவிர்ப்பது ஹைபோநெட்ரீமியா போன்ற அபாயங்களை தரும்; எனவே அளவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் சாம்பார், ரசம், பொரியல், கூட்டு, தயிர் சாதம் போன்றவற்றில் உப்பைக் குறைத்து, ஊறுகாய், அப்பளம், கடை சட்னிகளை கட்டுப்படுத்துவது ஆரோக்கியத்திற்கு உதவும்.
நம் வாழ்வில் உப்பின் பங்கு
பொதுவாக உப்பு என்பது சோடியம் குளோரைடு ஆகும். இது நரம்பை தூண்டிவிடும், தசைச் சுருக்கங்கள் மற்றும் உடலில் உள்ள திரவங்களுக்கு(fluids) மிக முக்கியமான ஒன்று. இருப்பினும், அதிகப்படியாக உப்பை எடுத்துக்கொண்டால், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், சிறுநீரகப் பிரச்னைகள் மற்றும் இரைப்பை புற்றுநோய் போன்ற பிரச்னைகளை வலுப்படுத்தக்கூடும். உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, 2021-ல் உலக மக்களின் சராசரி உப்பு உட்கொள்ளல் ஒரு நாளைக்கு 11 கிராம் ஆக இருந்தது. இது பாதுகாப்பான வரம்பைவிட இரண்டு மடங்கு அதிகமாம். இதன் விளைவாக, உப்பு தொடர்பான நோய்களால் ஆண்டுதோறும் 1.7 மில்லியன் இறப்புகள் ஏற்படுகின்றன.
தினசரி உப்பு எவ்வளவு தேவை Vs அதன் அதிகபட்ச வரம்பு:
உலக சுகாதார அமைப்பு, பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு 5 கிராமுக்கும் குறைவான உப்பை (2000 மி.கி சோடியம்) எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறது; குழந்தைகளுக்கு இந்த அளவு இன்னும் குறைக்கப்படுகிறது. இது அவர்களின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு கட்டாயமாகும்; ஆனால் இந்த அளவை மீறுவது அவர்களுக்குக் கடுமையான அபாயங்களை ஏற்படுத்துகிறது. உப்பை முற்றிலுமாகத் தவிர்ப்பது என்றைக்கும் அறிவுறுத்தப்படுவதில்லை. காரணம் சோடியம் குறைபாடு ஹைபோநெட்ரீமியாவை(hyponatremia) ஏற்படுத்தி; குழப்பம், வலிப்பு மற்றும் மரணத்திற்குக்கூட வழிவகுக்கும். எனவே, முற்றிலுமாகத் தவிர்ப்பதைவிட அளவாக பயன்படுத்துவது மிகவும் முக்கியம்.
தமிழ்நாட்டின் சூழல்படி உப்பை எங்கெல்லாம் குறைக்கலாம்?
தமிழ்நாட்டில் சாம்பார், ரசம், பொரியல் மற்றும் கூட்டு போன்றவற்றில் உப்பைக் குறைக்கலாம். ஏனெனில் அவற்றில் மசாலாப் பொருட்களும், புளியும் இயற்கையான சுவையை அளிக்கின்றன. தயிர் சாதம் அல்லது எலுமிச்சை சாதம் போன்ற உணவுகளையும் குறைந்த அளவு உப்புடன் சமைக்கலாம். அவற்றின் புளிப்பு மற்றும் புத்துணர்ச்சி சுவையே நமக்கு திருப்தியைத் தந்துவிடும். இருப்பினும், ஊறுகாய், அப்பளம், கடைகளில் வழங்கும் சட்னிகளில் சாதாரணமாக உப்பு அதிகமாக இருக்கும்; எனவே அதை அளவாக எடுத்துக்கொள்வது அனைவருக்கும் நல்லது.
இந்தியாவைத் தாண்டி எப்படி உள்ளது இதன் நிலை:
பின்லாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகள் தேசிய அளவிலான பிரச்சாரங்கள் மூலம் உப்பு உட்கொள்ளலை வெற்றிகரமாகக் குறைத்துள்ளன. இதன்மூலம் பின்லாந்து 1979 மற்றும் 2007-க்கு இடையில் 36% உப்பு குறைப்பைச் செய்யமுடிந்தது. இதனால் குறைந்த அளவிலே ரத்த அழுத்தம், பக்க வாதங்கள் பாதிப்பிருந்தது. இங்கிலாந்து 2001 மற்றும் 2011-க்கு இடையில் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பைக் கிட்டத்தட்ட 15% குறைக்க உத்தரவிட்டது. இது அங்குள்ளவர்களின் இதய ஆரோக்கியத்தில் நல்ல விளைவுகளை மேம்படுத்தியது. இதன்மூலம் இந்தியர்களைவிட குறைவான உப்பை உட்கொள்ளும் இந்நாட்டு மக்கள், பல சுகாதார நன்மைகளைப் பெறுகிறார்கள் என்பதை இந்த எடுத்துக்காட்டுகள் காட்டுகின்றன.
அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை:
BMJ-இன் உலகளாவிய (2017) தரவின்படி, 10 ஆண்டுகளில் சோடியம்(உப்பு) உட்கொள்ளலை வெறும் 10% குறைப்பதன் மூலம், ஆண்டுதோறும் 5.8 மில்லியன் மக்கள் எந்த நோய்க்கும் சிக்காமல் அல்லது சீக்கிரம் மரணம் அடையாமல்; ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தியது. இதன் மூலம், உப்பு குறைப்பு என்பது உலகளவில்
எவ்வளவு நன்மையை உண்டாக்கியது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதைப்பற்றி மாபெரும் ஆளுமைகளின் வார்த்தைகள்:
மகாத்மா காந்தி ஒருமுறை கூறினார்: “உண்மையான செல்வம் ஆரோக்கியமே தவிர, தங்கமும் வெள்ளியும் அல்ல.”
உலக சுகாதார அமைப்பின் (WHO) நிபுணர் டாக்டர் கிரெம்ளின் விக்ரமசிங்க வலியுறுத்தியதாவது: "உணவு மற்றும் அதிலுள்ள உப்பு ஆகியவை தங்கள் நல்வாழ்விலும், எதிர்காலத்திலும் எவ்வாறு எதிரொலிக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள மக்களுக்கு உரிமை உண்டு, அதை அவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ளவும் வேண்டும்.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference