

சில நேரங்களில் நன்றாக வேலை செய்து கொண்டே இருப்போம். அப்பொழுது தசை பிடிப்பு ஏற்படும். அதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்போம். அது போன்ற நேரங்களில் சின்ன சின்ன சித்த மருத்துவ குறிப்புகளைத் தெரிந்து வைத்துக் கொண்டால் அவற்றைக் கொண்டு சமாளிக்கலாம். அதற்கு நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில குறிப்புகள் இதோ:
வாதநாராயணன் இலையை காய வைத்து இடித்து தூளாக்கிக் கொண்டு அதில் 5 கிராம் தூளை எடுத்து சுடுதண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வர வாய்வு தொல்லை நீங்கும்.
சிலர் நோய் வாய்ப்பட்டு படுக்கையிலேயே கிடந்து விடுவார்கள் . அப்பொழுது அவர்களுக்கு புண் ஏற்பட்டுவிடும். அந்த படுக்கை புண் ஆற கடுக்காயை தணலில் வாட்டி இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து படுக்கை புண் மீது தடவி வர புண் ஆறும்.
பிரசவமான பெண்கள் பிரசவத்திற்குப் பிறகு வயிற்றில் உள்ள நச்சு நரை வெளியேற்ற 15 கிராம் மஞ்சள் தூளோடு 150 மில்லி சுத்தமான நீரை ஊற்றி 50 மில்லியாக வற்றவைத்து சாப்பிட்டு வர குணமாகும்.
ஒரு பிடி அருகம்புல்லை எடுத்து சுத்தம் செய்து நீர் விட்டு கொதிக்க வைத்து அந்த நீருடன் பால், சர்க்கரை கலந்து குடித்து வர சிறுநீர்ப்பை உறுதிப்படும்.
மூட்டு வலி சரியாக பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மூட்டுகள் உறுதிப்படும். அதனால் மூட்டு வலி குறையும்.
பாகற்காயின் விதையை அரைத்து பாலுடன் கலந்து அருந்தி வர வயிற்றுப் பூச்சிகள் புழுக்கள் ஒழியும்.
வயிறு சம்பந்தப்பட்ட எந்த நோய் ஏற்பட்டாலும் கீரை வகைகளில் உள்ள அனைத்து கீரைகளில் இருந்து சிறிது எடுத்து ஒன்றாகப் போட்டு சமைத்து சாப்பிட்டு வர பலன் கிடைக்கும்.
வாகனம் ஓட்டுபவர்கள் இரவு பகல் என்று பயணம் செய்து கொண்டிருப்பார்கள். இதனால் கண் சிவந்து இருப்பதுடன் கண் எரிச்சலும் ஏற்படும். இத்தகையவர்கள் உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி கண்களை மூடிக்கொண்டு கண்களின் மீது வைத்து ஒரு துணியால் கட்டிக் கொண்டு 3 மணி நேரம் கழித்து கண்கட்டை அவிழ்த்தால் கண் குளிர்ச்சி பெறுவதுடன் பாதுகாப்பையும் பெறலாம்.
குங்குமப் பூவை இடித்து தூள் செய்து வைத்துக்கொண்டு ஒரு ஸ்பூன் தூளை தேனுடன் குழைத்து சாப்பிட்டு வர குடல் புண் குணமாகும்.
சிலருக்கு அதிக அளவு சிறுநீர் பிரியும். அத்தகையவர்கள் உணவிற்குப் பின் 10 நாவல் பழங்களை சாப்பிட மூன்று நாளில் அதிக சிறுநீர் பிரிவது முறைப்படுத்தப்படும்.
வெற்றிலையுடன் சிறிது ஓமம் சேர்த்து மைய அரைத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால் உடனே வயிற்றுப்போக்கு நிற்கும்.
கருந்துளசியுடன் கஸ்தூரி மஞ்சளையும் மைய நீர் விட்டு அரைத்து உடல் முழுவதும் பூசி குளிர்ந்த நீரில் குளித்து வர, சருமம் தொடர்பான நோய்களை வராமல் தடுக்கலாம்.
சில குழந்தைகளின் வயிற்றில் உப்புசம் காரணமாக உணவருந்தாது துன்பப்படுவார்கள். அப்போது ஒரு கொத்து துளசி இலையைப் பறித்து வந்து சுத்தம் செய்து அத்துடன் சீரகம் சிறிது வைத்து நீர் விட்டு மைய அரைத்து எடுத்து குழந்தைகளுக்கு சிறிதளவு கொடுக்க வயிற்று உப்புசம் குறையும்.
நம் உடலின் உள்ளே ஓரிடத்தில் ரத்தம் உறைந்து நின்று விட்டால் நெல்லிக்காயை சாப்பிட்டு வர குணம் பெறலாம்.
மலச்சிக்கலில் சிரமப்படுவோர் இரவில் மாம்பழத்தை சாப்பிட்டு வர மலச்சிக்கல் சரியாகும்.
பிரயாணத்தின் போது ஏற்பட்ட கால் வீக்கம் குறைய பிரயாணம் முடிந்து வீட்டிற்கு வந்ததும் வெதுவெதுப்பான நீரில் கால்களை சற்று நேரம் வைத்து விட்டு பின் காலை உயரமாக வைத்துக் கொண்டு தலையை தாழ்வாகவும் வைத்து சிறிது நேரம் படுத்திருந்தால் கால் வீக்கம் குறைந்து விடும்.
வயிற்று உப்புசம் நீங்க சாதம் வடிக்கும் நீரில் சிறிதும் மஞ்சள் தூளும், சிறிது பனங்கல்கண்டும் கலந்து சூட்டோடு சாப்பிட்டு வர நல்ல குணம் கிடைக்கும்.
நீர்க்கடுப்பு குணமாக பருத்திக்கொட்டையை சுத்தம் செய்து மைய அரைத்து அந்த சாற்றில் 10 மில்லி எடுத்து 50 மில்லி பசும்பாலில் கலந்து குடிக்க நீர்க்கடுப்பு உடனே நிற்கும்.
ஒரு டம்ளர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கருவேப்பிலை, இஞ்சி ,சீரகம் மூன்றையும் போட்டு கொதிக்க வைத்து பின் ஆற வைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகிவிடும்.
அமுக்கிராங்கிழங்கு எடுத்து 200 மில்லி நல்ல தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். நூறு மில்லியாக நீர் சுண்டி வந்ததும் எடுத்து ஆறவைத்து பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு தினசரி காலை மாலை இரண்டு வேளையும் தேன் கலந்து சாப்பிட்டு வர கர்ப்பிணி பெண்கள் தேகப் பலம் பெறுவார்கள்.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference