கீறல்களோ அறுவை சிகிச்சையோ இல்லை... புற்றுநோய் செல்களை குறிவைத்துத் தாக்கும் 'சவுண்ட் வேவ்ஸ்'!

Histotripsy treatment
Histotripsy
Published on

பொதுவாக ​புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க கீமோதெரபி மற்றும் அறுவை சிகிச்சைகள் பின்பற்றப்படுகின்றன.

தற்போது ஹிஸ்டோட்ரிப்சி (Histotripsy) என்ற புதிய மருத்துவ சிகிச்சை முறை வந்துள்ளது. இந்த முறையினை பின்பற்றி சிகிச்சை செய்கையில் அறுவை சிகிச்சை தேவைப்படாது. கட்டிகளை அகற்ற அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஒரு நவீன நுட்பம் இது. இதன் முக்கிய சிறப்பு என்னவென்றால், இதில் கீறல்களோ அல்லது வேறு எந்த அறுவை சிகிச்சையோ பயன்படுத்தப்படுவதில்லை.

ஹிஸ்டோட்ரிப்சி எவ்வாறு செயல்படுகிறது?

இந்த மருத்துவ தொழில்நுட்பத்தை பயன்படுத்த முதலில் நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. பின்னர் மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்டை பயன்படுத்தி கட்டிகளின் இருப்பிடத்தை கண்டறிகிறார்கள். புற்றுநோய் செல்களின் மீது அதிக செறிவு கொண்ட ஒலிகளை செலுத்தி, கட்டிகளை சிதைத்து அதில் மிகச் சிறிய வாயு குமிழ்களை உருவாக்குகின்றன.

இந்த குமிழ்கள் மிக வேகமாக விரிவடைந்து வெடிக்க தொடங்குகின்றன. இதனால் புற்றுநோய் திசுக்கள் சிதைந்து அவற்றை நீர் போன்ற திரவமாக மாற்றுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் இந்த திரவங்களை உடற்கழிவாக வெளியேற்றி விடுகிறது.

ஹிஸ்டோட்ரிப்சி முதன்மையாக கல்லீரல் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. ஆனாலும் இது 4 செ.மீ க்கும் சிறிய அளவிலான கட்டிகளுக்கு மட்டுமே உகந்ததாக இருக்கிறது. இந்த சிகிச்சை முறையை ​2023-ஆம் ஆண்டின் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அங்கீகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த தொழில்நுட்பம் சர்வதேச அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஹிஸ்டோட்ரிப்சி சர்வதேச பயன்பாடு:

முதலில் அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்ட இந்த மருத்துவ தொழில்நுட்பம், பின்னர் பிரிட்டன் , சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளிலும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சமீபத்திய தரவுகளின் படி கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 90% பேருக்கு ஹிஸ்டோட்ரிப்சி தொழில்நுட்பம் மூலம் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை முறையின் முன்னேற்றம்:

கல்லீரல் புற்றுநோய் சிகிச்சைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பம் , இப்போது கணையம் சிறுநீரகம் , புரோஸ்டேட் புற்றுநோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் விதமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான ஆராய்ச்சிகளும் ஆய்வுகளும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் மற்ற புற்றுநோய் சிகிச்சைக்கும் ஹிஸ்டோட்ரிப்சி அங்கீகரிக்கப்பட்டு நடைமுறையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் சிறப்பம்சங்கள்:

இந்த சிகிச்சை முறையில் காயங்களும் தழும்புகளும் இருக்காது. கதிர்வீச்சு மற்றும் வெப்பம் பயன்படுத்தப்படாததால் உடலில் உள்ள பாதிக்கப்படாத திசுக்களுக்கு, எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. மிகவும் குறிப்பாக ரத்த நாளங்கள் மற்றும் பித்த நாளங்களுக்கு அருகில் உள்ள கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க இது மிகவும் பாதுகாப்பானது.மேலும் இந்த சிகிச்சை முறைக்கு 2 மணி நேரம் மட்டும் தேவைப்படும் , நோயாளி சிகிச்சை முடிந்து அதே நாளில் வீடு திரும்பவும் முடியும்.

இதையும் படியுங்கள்:
ஜிம்முக்கு போறதெல்லாம் பழசு! ஊர்ந்து போறது தான் புதுசு!
Histotripsy treatment

சில நேரங்களில் புற்றுநோய் உடலின் மற்ற பாகங்களுக்கு பரவி இருந்தால் கீமோதெரபியுடன் இணைந்தே ஹிஸ்டோட்ரிப்சி பரிந்துரைக்கப்படுகிறது. இந்த சிகிச்சை முறை அனைவருக்கும் ஏற்றதல்ல. இது இந்தியாவில் இன்னும் பரவலாக பயன்படுத்தப்படவில்லை. இதன் ஆரம்பகட்ட ஆராய்ச்சி முடிவுகள் பாதுகாப்பானது என்று கூறினாலும் , அதன் பாதுகாப்புத் தன்மை குறித்து மேலும் சில ஆய்வுகள் நடந்து வருகின்றன. விரைவில் இந்த சிகிச்சை முறை மேம்படுத்தப்பட்டு இந்தியாவிலும் நடைமுறைக்கு வரலாம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com