
கடந்த 2019 ஆம் ஆண்டு உலகையே ஆட்டிப் படைத்த கொரோனா வைரஸால், ஊரடங்கு ஏற்பட்டது அனைவரது நினைவிலும் இருக்கும். உலக நாடுகள் அனைத்தும் ஸ்தம்பித்துப் போன அந்த நாட்கள் இன்னுமும் கண்முன்னே நிற்கின்றன. 5 ஆண்டுகளைக் கடந்து விட்டோம்; கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பித்தும் விட்டோம். ஆனால், அதன் தாக்கத்தை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க மட்டும் முடியாது. இந்நிலையில், மீண்டும் ஒரு வைரஸ் தலைதூக்கியுள்ளது HMPV என்ற பெயரில். இந்த வைரஸின் தாக்கமும் கொரோனாவைப் போல், சீனா நாட்டில் தான் முதலில் கண்டறியப்பட்டுள்ளது என தகவல்கள் கூறுகின்றன. மிகவும் மோசமானது எனத் தெரிவிக்கப்படும் HMPV வைரஸின் அறிகுறிகள் மற்றும் தற்காப்பு முறைகளை இந்தப் பதிவில் விளக்குகிறோம் கேளுங்கள்.
ஹியூமன் மெட்டாநியூமோ (HMPV) வைரஸ் 300 ஆண்டுகளுக்கு முன்னர் பறவைகளைத் தாக்கியதாகவும், கடந்த 2001 ஆம் ஆண்டில் தான் முதன்முதலில் மனிதர்களைத் தாக்கியது எனவும் கூறப்படுகிறது. சீனாவில் பரவத் தொடங்கிய HMPV வைரஸ், தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்த ஆரம்பித்து விட்டது. இந்தியாவிலும் இந்த வைரஸ் நுழைந்திருப்பது, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
பரவல்:
1. தும்மல் மற்றும் இருமலின் போது, வெளிப்படும் சளித் துளிகளின் மூலம் HMPV வைரஸ் பரவுகிறது. சளித் துளிகள் விழுந்த இடத்தில், தெரியாமல் நீங்கள் கை வைத்தாலும், பிறகு அதே கையால் உங்கள் முகத்தில் தொட்டாலும் இந்த வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன.
2. கைகளைக் குலுக்குதல், கட்டிப் பிடித்தல் மற்றும் ஒருவரை ஒருவர் தொடுவதன் மூலமாகக் கூட இந்த வைரஸ் பரவலாம் என்று கூறப்படுகிறது.
அறிகுறிகள்:
HMPV வைரஸ் வயது வித்தியாசமின்றி அனைவரையும் தாக்கக் கூடியது. இந்த வைரஸ் தாக்கியவருக்கு இருமல், சுவாசிப்பதில் சிரமம், உடல் சோர்வு, தொண்டை கரகரப்பு, காய்ச்சல் மற்றும் மூக்கடைப்பு போன்ற அறிகுறிகள் தென்படும்.
மேலும் கொரோனா வைரஸுக்கான அறிகுறிகள், இந்த வைரஸுக்கும் பொருந்தும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். HMPV வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில், நிமோனியா அல்லது மூச்சுக்குழாய் அழற்சி போன்ற பாதிப்பும் ஏற்படும்.
HMPV வைரஸ் பொதுவாக 3 முதல் 6 நாட்களுக்கு உயிர்ப்புடன் இருக்கும். வைரஸ் தொற்று எந்த அளவிற்கு கடுமையாக இருக்கிறது என்பதைப் பொறுத்துதான், நோய் பாதிப்பு எத்தனை நாட்களுக்கு இருக்கும் என்பதைக் கணிக்க முடியும். ஏற்கனவே சுவாசக் கோளாறுகள் இருக்கும் ஒருவரை HMPV வைரஸ் தாக்கினால், அவர் கடுமையான பாதிப்பைச் சந்திக்க நேரிடும்.
தற்காப்பு நடவடிக்கை:
1. இருமல் மற்றும் சளி இருக்கும் நபர்களிடம் இருந்து எப்போதும் விலகியே இருக்க வேண்டும்.
2. தும்மல் மற்றும் இருமலுக்குத் தனியாக ஒரு கைக்குட்டையைப் பயன்படுத்துவது நல்லது. கட்டாயம் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.
3. கைகளைக் கழுவும் போது குறைந்தபட்சம் 20 விநாடிகள் வரை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும்.
4. நீங்கள் உங்களுக்கெனப் பயன்படுத்தும் சில பாத்திரங்களை மற்றவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
5. சுகாதாரமான முறையில் உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
6. நெரிசல் மிகுந்த இடங்களில் பயணிப்பதை தவிர்ப்பதும் நல்லது.
HMPV வைரஸ் பாதிக்கப்பட்டவருக்கு காய்ச்சலுக்கு வழங்கப்படும் மருந்துகளே தற்போது அளிக்கப்படுகின்றன. பிரத்யேகமாக எந்த மருந்தும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டிய தருணமிது. கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும், HMPV வைரஸ் அதன் தாக்கத்தை காண்பித்து விடும்.