health tips
health tips

சின்ன சின்ன உடல் உபாதைகள்... எதிர்கொண்டு கையாள 20 வீட்டு வைத்திய குறிப்புகள்!

Published on

சின்ன சின்ன உபாதைகள் வரும்போது அதை எளிமையாக எதிர்கொண்டு கையாள தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கான எளிய வைத்திய குறிப்புகள் இதோ:

1. தினசரி உடற்பயிற்சி செய்வது, ரத்த அழுத்தத்தை அளவோடு வைத்திருப்பது, கொழுப்பு பண்டங்களை உண்ணாமல் இருப்பது, டென்ஷன் ஆகாமல் இருப்பது, சிகரெட்டை தொடாமல் இருப்பது போன்றவற்றை முறைப்படி செய்து வந்தால் இதய நோய் நம்மை அணுகாது.

2. மாங்கொட்டை பருப்பை நன்றாக காய வைத்து தூள் செய்து அதை தேனில் குழைத்து சாப்பிட வயிற்று பூச்சிகள் போய்விடும்.

3. புதினாவை சுத்தம் செய்து புளி வைத்து துவையலாக செய்து சாப்பிட்டு வர தாய்மார்களின் மசக்கைக் காண வாந்தி மயக்கம் நிற்கும்.

4. இஞ்சி சாற்றுடன் சம அளவு வெங்காயச் சாறும் கலந்து காலையில் சாப்பிட்டு வர வாந்தி நிற்கும்.

5. மணத்தக்காளி கீரையையும், வெங்காயத்தையும் தினசரி உணவில் சேர்த்து வந்தால் மூலச் சூட்டை தவிர்க்கலாம்.

6. சிறிதளவு உப்பு, சீரகம், இஞ்சி மூன்றையும் ஒன்றாக வைத்து மைய அரைத்து உள்ளுக்குச் சாப்பிட்டு சிறிது சுடு தண்ணீர் குடித்தால் வயிற்று உப்புசம் சரியாகிவிடும்.

7. குங்குமப்பூவை தினசரி ஒரு சிட்டிகை தேன் கலந்து சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமாகும். கர்ப்பிணிப் பெண்கள் வெற்றிலை, பாக்குடன் குங்குமப்பூவையும் சேர்த்து சாப்பிட்டால் சுகப்பிரசவமாக வாய்ப்பு அதிகம் ஆகும்.

8. செம்பருத்திப் பூவை பறித்து நீரில் போட்டு அரை மணி நேரம் கழித்து அந்த தண்ணீருடன் செம்பருத்தி பூவை மைய அரைத்து சாப்பிட மிகக் குறைந்த நாட்களுக்குள் மேனியில் ஒரு பளபளப்பு மின்னும்.

9. சாதத்தை வடித்து எடுத்ததும் அந்த சாதத்துடன் கெட்டித் தயிரை விட்டு பிசைந்து சாப்பிட உஷ்ண பேதி நிற்கும்.

10. ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து அதனுடன் மூன்று ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட இருமல் குறையும்.

11. பசும்பாலை காய்ச்சும் போது ஒரு கொதி வந்ததும் சம்பங்கி பூக்களை போட்டு சர்க்கரை சேர்த்து கலக்கி வடிகட்டி குடித்து வர உடல் நல்ல பலம் பெறும்.

12. அதிகாலை வேளையில் புற்களின் மீது படிந்துள்ள நீரை பஞ்சினால் ஒத்தி எடுத்து சொறி, படை உள்ள இடங்களின் மீது தடவி வர குணமாகும்.

13. சுக்கை சுட்டு பொடி செய்து அதை தேனில் குழைத்து சாப்பிட்டு வர உடலில் உள்ள சளி விரைவில் வெளியேறிவிடும்.

14. நெற்றியில் குங்குமம் வைத்த இடத்தில் தோல் உரிந்தால் வில்வ மரத்தின் கட்டையை சந்தனத்துடன் சேர்த்து மைய அரைத்து அந்த விழுதை புண் மீது தடவி வர விரைவில் புண் ஆறுவதுடன் அரிப்பும் நின்றுவிடும்.

15. ஒரு பாத்திரத்தில் நெல்பொரியை போட்டு தண்ணீரை ஊற்றி வேக வைத்து கஞ்சி பதமாக வந்ததும் இறக்கி அந்த கஞ்சியை குடிக்க வயிற்றுப்போக்கு நிற்கும்.

16. மிளகு ரசம் வைத்து கொதியும்போது முருங்கைக் கீரையின் கொழுந்துகளை மைய அரைத்து அதனுடன் சிறிது கலந்து சாப்பிட மறுநாளே உடல் அசதி நீங்கும்.

இதையும் படியுங்கள்:
தக்காளி பருப்பு கடையல்: ஆந்திரா ஸ்பெஷல்!
health tips

17. மூட்டு வலி தீர மீன் எண்ணெய்யை உள்ளுக்கு காலை மாலை என இருவேளை ஒரு ஸ்பூன் வீதம் சாப்பிட்டு வருவதுடன் மூட்டுகளின் மீது தடவி வரவும் பலன் கிடைக்கும்.

18. வில்வ பூக்களை புளி சேர்க்காமல் ரசமாக வைத்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும். வில்வ இலைகளை பறித்து உலர்த்தி அரைத்து மெல்லிய ஜல்லடையில் சலித்து எடுத்து தினசரி குளியலின் போது தேய்த்து குளித்து வர, தோல் வியாதி வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

19. வயிறு பெரிதாகவும் உடல் சிறிதாகவும் உள்ள குழந்தைகளுக்கு கோரைக்கிழங்கை தோல் நீக்கி சூப் வைத்துக் கொடுத்தால் சரியாகும்.

20. பதநீரை நாற்பது நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தோல் சம்பந்தமான எல்லா நோய்களும் நீங்கும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

இதையும் படியுங்கள்:
தரமற்ற 186 மருந்துகளின் பட்டியல் வெளியீடு!
health tips
logo
Kalki Online
kalkionline.com