உங்களுக்கு வெந்நீரில் குளிப்பது பிடிக்குமா? அல்லது குளிர்ந்த நீரில் குளிப்பது பிடிக்குமா? பெரும்பாலானவர்களின் தேர்வு வெந்நீராகவே இருக்கும். ஏனெனில் குளிர்ந்த நீரில் குளித்தால் உடல் குளிரும் என்பதால், பெரும்பாலானவர்கள் வெந்நீரையே தேர்வு செய்வார்கள். எந்த நீரில் குளிக்க வேண்டும் என்பது ஒருவரின் தனிப்பட்ட தேர்வாக இருந்தாலும், வெந்நீர் மற்றும் குளிர்ந்த நீர் இடையே சில சுகாதார வேறுபாடுகள் உள்ளன. அவை என்னவென்று இப்பதிவில் பார்ப்போம்.
வெந்நீர் குளியல்: பொதுவாகவே வெந்நீரில் குளிப்பதென்பது நீண்ட காலமாக அனைவரும் பின்பற்றும் நடைமுறையாகும். இது ஒரு இதமான இனிமையான அனுபவத்தை ஏற்படுத்தும். இதன் நன்மைகள் என்று பார்க்கும்போது,
சூடான நீரில் குளிப்பது தசைகளைத் தளர்த்தி, பதற்றத்தை விடுவித்து, தசைப் பிடிப்பைத் தணிக்க உதவுகிறது. உடல் உழைப்பு அதிகமாக இருக்கும் நாட்களில் வெந்நீரில் குளிப்பது நல்லது.
சூடான நீரின் வெப்பம், ரத்த ஓட்டத்தைத் தூண்டி உடலின் திசுக்களுக்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் செல்வதை ஊக்குவிக்கிறது.
வெந்நீரின் நீராவியை உள்ளிழுப்பது மூலமாக, சைனஸ் பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெறலாம்.
சூடான குளியல் மனதிற்கு அமைதியை ஏற்படுத்தி மன அழுத்தம், பதட்டம் ஆகியவற்றை குறைக்க உதவுகிறது.
இருப்பினும் அதிக சூடான நீரில் குளிப்பது உடலில் உள்ள இயற்கையான எண்ணெய்களை நீக்கி, சரும வறட்சி மற்றும் எரிச்சலுக்கு வழிவகுக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
குளிர்ந்த நீர் குளியல்: குளிர்ந்த நீரில் குளிப்பது சற்று சங்கடமாக இருந்தாலும், அது உடலுக்கு சில தனித்துவமான பலன்களை வழங்குகிறது. குளிர்ந்த நீரில் குளிப்பதால் பல நன்மைகள் கிடைக்கின்றன.
குளிர்ந்த நீரில் குளிப்பது புத்துணர்ச்சியைக் கொடுத்து உற்சாகத்தைத் தூண்டுகிறது. வெப்பமான காலநிலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது.
குளிர்ந்த நீர் சருமத்தில் உள்ள துளைகளை இறுக்கி ஆரோக்கியமான நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. இது முடியை பளபளப்பாகவும், உடையக்கூடிய தன்மையைக் குறைக்கவும் செய்யும்.
குளிர்ந்த நீர் ரத்த ஓட்டத்தைத் தூண்டி, கை, கால் வீக்கத்திற்கு நிவாரணம் அளிக்கும்.
வெந்நீர் Vs குளிர்ந்த நீர்: எது நல்லது?
எந்த நீரில் குளிக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பமாகும். உங்களது உடல்நிலை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப உங்களுக்கு ஏற்ற நீரில் குளிப்பது நல்லது. ஆனால் வெந்நீரைவிட குளிர்ந்த நீரில் குளிப்பதால், சில ஆரோக்கிய நன்மைகள் கூடுதலாக கிடைக்கின்றன. இதற்கான அறிவியல் பூர்வ ஆதாரங்களும் இருப்பதால், முடிந்தவரை குளிர்ந்த நீரில் குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதேநேரம் வெந்நீரில் குளிப்பது ஒன்றும் அவ்வளவு தீமைகளை கொடுத்துவிடாது. ஆனால், அதிக சூடான நீரில் குளிப்பதைத் தவிர்க்கவும்.