உடற்பருமன் என்பது மிகவும் சிக்கலான ஒரு பிரச்சனை. இதனால் ஆண், பெண் என அனைவருமே பாதிக்கப்பட்டாலும், ஆண்களை விட பெண்கள் எளிதில் உடற்பருமன் அடைந்து விடுகின்றனர் என்ற பொதுவான கருத்து உள்ளது. இந்த கருத்துக்கு பின்னால் உள்ள அறிவியல் உண்மைகள் என்ன?. ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையிலான உடல் பாகங்களில் உள்ள வேறுபாடு, ஹார்மோன்கள், உடல் செயல்பாடு மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றின் தாக்கம் குறித்து இந்தப் பதிவில் முழுமையாகப் பார்க்கலாம்.
பெண்கள் குண்டாவதற்கான அறிவியல் காரணங்கள்:
பெண்களின் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்டெரோன் போன்ற ஹார்மோன்கள் உடல் எடையை கட்டுப்படுத்தும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ஹார்மோன்கள் உடலில் கொழுப்பு சேர்வதை அதிகரித்து, மாதவிடாய் சுழற்சி, கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல் மாற்றங்களுக்கு வழிவகுக்கின்றன.
இயற்கையாகவே ஆண்களை விட பெண்கள் உடலில் அதிக அளவில் கொழுப்பு இருக்கும். இது கருவுறுதல் மற்றும் குழந்தை பிறப்புக்கு அவசியமானது. மேலும், பெண்களின் உடல் செயல்பாடும், ஆண்களின் உடல் செயல்பாடும் முற்றிலும் வேறுபட்டது.
பெண்கள் பொதுவாக குறைந்த அளவு தசை நிறையக் கொண்டிருப்பதால், அவர்களின் அடிப்படை வளர்ச்சிதை மாற்ற விகிதம் ஆண்களை விட குறைவாக இருக்கும். இதன் பொருள், பெண்கள் குறைவான கலோரிகளை எரித்து, அதிகமாக கொழுப்பை சேமிக்கின்றனர் என்பதாகும்.
பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் அவர்களது உடல் எடையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் கார்ட்டிசோல் ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது. இந்த ஹார்மோன் உடலில் கொழுப்பு சேர்வதை அதிகரித்து, பெண்களின் உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.
பெண்கள் குண்டாவதற்கான சமூகக் காரணங்கள்:
பெண்களுக்கு பொதுவாகவே அவர்கள் அழகாக இருக்க வேண்டும் என்ற சமூக அழுத்தம் இருக்கிறது. இதன் காரணமாக பல பெண்கள் தங்கள் உடல் எடை குறித்து அதிக அக்கறை கொள்கிறார்கள். ஆனால், இந்த அழுத்தம், சில சமயங்களில் எதுபோன்ற உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதில் குழப்பங்களை உண்டாக்கி, அதிகப்படியான உணவு உட்கொள்ளுதல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
பெரும்பாலான பெண்களுக்கு உணவு குறித்த விழிப்புணர்வு இருப்பதில்லை. அதிக கலோரி கொண்ட உணவுகள், தவறான டயட்டுகள் காரணமாக அவர்களது உடல் எடை அதிகரிக்கிறது. மேலும், ஆண்களை விட பெண்கள் குறைவாகவே உடற்பயிற்சி செய்வதால், அவர்கள் உடலில் உள்ள கலோரிகளை எரிக்கும் வாய்ப்பும் குறைகிறது.
இப்படி, பல்வேறு காரணங்களால் ஆண்களை விட பெண்கள் எளிதில் குண்டாகி விடுகின்றனர். பெண்கள் அவர்களது உடல் சார்ந்த உண்மைகளைத் தெரிந்துகொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தாலே, தங்களின் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.