மில்லட்ஸ் எனப்படும் சிறு தானியங்களை நம் முன்னோர்கள் பல ஆண்டுகளாக முக்கிய உணவாகக் கருதி, சோறாகவும் டிபன் வகைகளாகவும் செய்து உட்கொண்டு வந்தனர். அதன் மூலம் அவர்கள் நோய் நொடியின்றி நீண்டகாலம் வாழ்ந்து வந்ததையும் நாம் கண்டிருக்கிறோம். அதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் இந்த தானியங்களில் இரும்புச் சத்து, கால்சியம், மாவுச் சத்து, புரோட்டீன், அரிசியில் இருப்பதை விட அதிகளவு நார்ச்சத்து என பல வகை ஊட்டச் சத்துக்கள் இருப்பதுதான் எனலாம்.
மில்லட்களில் ராகி, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, கம்பு, வெள்ளை சோளம் போன்றவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம். தற்போது ஏற்பட்டுள்ள விழிப்புணர்வினால் சிறு தானியங்களில் பலவற்றை பலர் வீட்டுக் கிச்சன்களிலும் காண முடிகிறது. இதில் எதெல்லாம் கர்ப்பிணிகள் உண்பதற்கு ஏற்றது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
திணை மற்றும் வெள்ளைச் சோளத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு உண்டாகும் அசிடிட்டி பிரச்னைகளைத் தீர்க்க உதவும். இந்த தானியங்கள் ஆல்கலைன் குணம் கொண்டவை. எனவே, வயிற்றில் உள்ள ஆசிட்டை இது சமநிலைப்படுத்த உதவும்.
திணை மற்றும் சோளத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம், B வைட்டமின்கள் போன்ற முக்கிய ஊட்டச் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. மேலும், இவை க்ளூட்டன் ஃபிரீயானாவை. ஆதலால் எந்தவித அஜீரணப் பிரச்னையுமின்றி செரிமானம் சிறப்பாக நடைபெற உதவும். இந்த இரண்டு தானியங்களும் குறைந்த அளவு க்ளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டவை. அதனால் கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களின் இரத்த சர்க்கரை அளவை சம நிலையில் வைக்க உதவும்; அவர்களின் எடைப் பராமரிப்பிற்கும் உதவி புரியும்.
சோளம் மற்றும் திணையிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகள், அவர்களுக்கு தாவர வகைப் புரோட்டீன்களையும் காம்ப்ளெக்ஸ் கார்போ ஹைட்ரேட்களையும் அதிகம் வழங்கும். இதனால் தசைகள் வளர்ச்சியுறும். உடலுக்கு தொடர்ந்து சக்தி கிடைக்கும். உணவு உட்கொண்ட பின், நீண்ட நேரம் திருப்திகரமான உணர்வுடன் இருக்கச் செய்து உட்கொள்ளும் கலோரி அளவை குறையச் செய்யும். குறைந்த அளவு கலோரி கொண்ட இந்த உணவுகள் தேவையான ஊட்டச் சத்துக்களைத் தரவும் எடைக் குறைப்பிற்கு உதவவும் செய்யும்.
இந்த தானியங்களைப் பயன்படுத்தி இட்லி, பொங்கல், பாயசம், அதிரசம் போன்ற உணவுகளைத் தயாரித்து உட்கொண்டு வயிற்றில் உள்ள சிசுவின் ஆரோக்கியத்தையும் சேர்த்து கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாக்கலாம்.