
இஞ்சியை எப்படி உண்பது? தோலுடனா? தோலுரித்தா? எது சிறந்தது? வாங்க பார்க்கலாம்.
நாம் நம் தினசரி உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஓர் உணவுப் பொருள் இஞ்சி. மருத்துவ குணம் நிறைந்த மூலிகைப் பொருள் இது. செரிமானம் சிறக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுவது.
இதை சமையலில் சேர்க்கும் முன் அதன் தோலை நீக்கி விட வேண்டும் என்பது பலரது வாதம். வேறு சிலரோ தோலுடன் சமைப்பதால் எந்த கெடுதலும் ஏற்பட்டு விடாது என்கின்றனர்.
இஞ்சி ஃபிரஷ்ஷாகவும் சுத்தமாகவும் இருக்கும்போது அதை தோலுடன் டீ, சூப் மற்றும் ஸ்மூத்திகளில் சேர்ப்பதில் எந்த ஆபத்தும் இல்லை என்கின்றனர் டயட்டீஷியன்ஸ். இஞ்சித் தோலில் நார் அதிகமாக இருந்தாலோ அல்லது ஆர்கானிக் முறையில் அது வளர்க்கப்படாமலிருந்தாலோ அதன் தோலை நீக்கி விடுவது அவசியம். ஆர்கானிக் அல்லாத இஞ்சியின் தோலில் பூச்சி மருந்து ஒட்டிக் கொண்டிருக்கலாம். இரசாயனம் கலந்திருக்கவும் வாய்ப்புண்டு. இக்காரணங்களை மனதில் கொண்டு தோலை நீக்கிவிட்டு சமைப்பதே பாதுகாப்பானது எனலாம்.
இஞ்சியின் தோலில் உடலுக்கு நன்மை தரக்கூடிய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, மற்றும் பயோஆக்டிவ்கெமிகல்கள் ஆகியவை உள்ளன. மேலும் இஞ்சியின் தோல் ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி மைக்ரோபியல் குணங்கள் உடையது. உடலின் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கவும், செரிமானம் சிறக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவக் கூடியது.
இஞ்சியின் தோலில் உள்ள வேறு பல முக்கிய ஊட்டச் சத்துக்கள் வயிற்றுப் பகுதி அசௌகரியமின்றி அமைதியுடன் செயலாற்ற பெரிதும் உதவுகின்றன. இஞ்சியை தோலுடன் உண்பதால் இரைப்பை குடல் இயக்கங்கள் சிறப்பாக செயல் புரிந்து உடலின் மொத்த ஆரோக்கியமும் மேம்படும். மேலும் ஊட்டச் சத்துக்கள் உடலுக்குள் முழுமையாக உறிஞ்சப்பட்டு, வெளியேறும் கழிவுகளின் அளவு குறையவும் வாய்ப்பாகிறது.
இஞ்சியை தோலுடன் உண்ண விரும்புபவர்கள் தோலில் உள்ள அழுக்குகள், நச்சுத்தன்மை மற்றும் பாக்ட்டீரியாக்கள் ஆகியவை அனைத்தும் நீங்குமாறு நன்கு கழுவிவிட்டு உண்ணுதல் நலம். ஆர்கானிக் அல்லாத இஞ்சி என்றால் தோல் நீக்கி உண்பதே ஆரோக்கியம்.