ஜங்க் ஃபுட்ஸ் எனப்படும் துரித உணவுகளில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள், சர்க்கரைகள் மற்றும் சோடியம் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவை நாம் விரும்பும் சுவைகளில் கிடைப்பதால், பலர் விரும்பி உண்ணும் உணவாக தற்போது மாறி வருகிறது. இருப்பினும் இந்த உணவுகள் நம்முடைய ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக இதய ஆரோக்கியத்தில் இவற்றால் ஏற்படும் தீய விளைவுகளை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இந்த பதிவில் ஜங்க் ஃபுட்ஸ் நமது இதயத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆராய்வோம்.
தொடர்ச்சியாக ஜங்க் ஃபுட்ஸ் உட்கொண்டுவந்தால் இதய நோய் அபாயம் அதிகரிக்கும். இதில் டிரான்ஸ்ஃபேட் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் போன்ற ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம் உள்ளன. இவை உடலில் அதிகரிக்கும்போது இதய தமனி அலர்ஜிக்கு வழிவகுக்கும். இதனால் ரத்த ஓட்டம் கட்டுப்படுத்தப்பட்டு, மாரடைப்பு போன்ற பெரும் பிரச்சனைக்கு வழி வகுக்கலாம்.
ஜங்க் ஃபுட்களில் பொதுவாகவே சோடியம் அதிக அளவில் உள்ளது. இது உயர் ரத்த அழுத்தத்திற்கு பங்களிக்கும். அதிகப்படியான சோடியம் உட்கொள்வது உடலில் அதிகமாக திரவத்தை சேர்த்து, உடலின் திரவ சமநிலையை சீர்குலைத்து, ரத்தம் உடல் முழுவதும் பம்ப் செய்யும் செயல்முறை கடினமாகிறது. இது இதயத்திற்கு கூடுதல் அழுத்தத்தைக் கொடுத்து காலப்போக்கில் இதய நோய்க்கான முக்கிய காரணியாக மாறலாம்.
துரித உணவுகளில் பெரும்பாலும் உடலுக்குத் தேவையான கலோரிகள் மற்றும் அத்யாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததால், எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது. அதிக உடல் எடையானது இதயத்திற்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி இதய பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. மேலும் அதிக சர்க்கரை நிறைந்த ஜங்க் உணவுகள் நீரிழிவு நோயின் வளர்ச்சிக்கு பங்களித்து, பிற இருதய சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
இத்தகைய உணவில் இருக்கும் பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் உடலின் செல்கள் சேதமாகி, பெருந்தமனி தடிப்பு மற்றும் பிற இருதய நிலைகள் உருவாக வழிவகுக்கும்.
ஜங்க் ஃபுட்களில் பெரும்பாலும் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை. இந்த ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவு நமது உடலில் பல விளைவுகளை ஏற்படுத்தும். இதய ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும். குறிப்பாக போதிய நார்ச்சத்து உட்கொள்ளாமல் போனால், அது கொலஸ்ட்ராலை அதிகரித்து இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்.
இப்படி துரித உணவுகள் பல மோசமான விளைவுகளை உங்களுக்கு ஏற்படுத்தலாம். இருப்பினும் என்றாவது ஒருநாள் சாப்பிடுவது பரவாயில்லை. ஆனால், அடிக்கடி சாப்பிடும் பழக்கம் இருந்தால் உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள். இதற்கு மாற்றாக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதங்கள் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்த சீரான உணவுக்கு முன்னுரிமை கொடுங்கள். இதன் மூலமாக ஜங்க் ஃபுட்களை அதிகம் சாப்பிடுவது குறைக்கப்படும்.